81. ஆறுதல் வார்த்தைகள்

துயரங்களைச் சுமந்துகொண்டிருப்பவர்கள் நம்மிடம் அதைப் பகிர்ந்துகொள்வது நாம் அந்த துயரங்களை மொத்தமாக களைந்துவிடுவோம் என்ற நோக்கத்தில் அல்ல.
81. ஆறுதல் வார்த்தைகள்
Published on
Updated on
1 min read

வாடிய முகத்துடன் ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சிஷ்யன். சமையல் பொருட்கள் வாங்க உள்ளூர் சந்தைக்குச் சென்று திரும்பியிருந்தான்.

அவனது மன வாட்டத்தைப் பார்த்ததும் புரிந்துகொண்டார் குரு. அருகே அழைத்து, கரிசனத்துடன் காரணம் கேட்டார்.

நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு மூதாட்டியை சந்தையில் சந்திக்க நேர்ந்ததையும், நோயின் கொடுமையையும் பொருட்படுத்தாமல் வயிற்றுப்பாட்டுக்காக சந்தையில் அந்த மூதாட்டி கடை விரித்து வைத்திருந்ததையும் தெரிவித்தான் சிஷ்யன்.

“மிகவும் சோர்வாக அமர்ந்திருந்தார் அந்த மூதாட்டி. பார்க்கவே மிகவும் கஷ்டமாக இருந்தது. அருகே சென்று பேசினேன். தன் பிள்ளைகள் அனைவரும் அவரைக் கைவிட்டுவிட்டதையும், சந்தையில் கடை நடத்தித்தான் காலத்தை ஓட்டுவதாகவும் கூறி வருந்தினார். உடல் நலமில்லாத நேரத்தில் ஏன் இன்றும் சந்தைக்கு வந்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு, வேறு வழியில்லையே எனக்கூறி கண்ணீர் சிந்தினார் அந்த மூதாட்டி..” என்றான் சிஷ்யன். மூதாட்டியின் கஷ்டத்தை நினைத்து அவனும் கண்கள் கலங்கி இருந்தான்.

வாடிய உயிரைக் கண்டு வாடும் தன் சீடனின் அன்புள்ளம் அறிந்து அகமகிழ்ந்தார் குருநாதர்.

“அந்த மூதாட்டிக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னாயா?” என்று சிஷ்யனிடம் கேட்டார்.

“என் வார்த்தைகள் அவரது துயரத்தைப் போக்கிவிடாதல்லவா.. என்னால் என்ன உதவி செய்துவிட முடியும் அந்த மூதாட்டிக்கு! கனத்த மனதுடன் அங்கிருந்து வந்துவிட்டேன்..” என்றான் சிஷ்யன்.

“உன் எண்ணம் சரியல்ல..” என்றார் குரு. குறுகுறுப்புடன் அவரை ஏறிட்டான் சிஷ்யன்.

குரு பேசலானார்.

“துயரங்களைச் சுமந்துகொண்டிருப்பவர்கள் நம்மிடம் அதைப் பகிர்ந்துகொள்வது நாம் அந்த துயரங்களை மொத்தமாக களைந்துவிடுவோம் என்ற நோக்கத்தில் அல்ல. அந்த நேரத்தில் நாம் கொடுக்கும் ஆறுதல் வார்த்தைகள் அவரது கவலையை ஓரளவேனும் போக்கும். நிச்சயம் தன் கஷ்டங்கள் ஒரு நாளில் தீரும் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைக்கும். நம்மாலான ஆறுதல் வார்த்தைகளை அளிப்பது நம் கடமை. அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்..” என்றார் குருநாதர்.

“நம்மாலான உதவியை அவர்களுக்குச் செய்ய வேண்டியது ஒருபுறம் இருந்தாலும், உதவ இயலாத பட்சத்தில் அவர்கள் துயரத்தைக் கேட்டு ஆறுதல் அளிப்பது அவசியமாகும். துவண்டுகிடக்கும் அவர்கள் மனதை அது தூக்கி நிறுத்தும்..” என்றும் சொன்னார் குரு.

“இந்த சிந்தனை எனக்கு வரவில்லை குருவே. ஆனால், அந்த மூதாட்டி விற்பனை செய்துகொண்டிருந்த பொருட்களை பேரம் பேசாமல் வாங்கிக்கொண்டேன்..” என்றான் சிஷ்யன்.

அவனைத் தட்டிக் கொடுத்தார் குருநாதர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com