70. தன்னை உணர்தல்

எவனொருவன் தான் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று, உடலுக்குள் எங்கெல்லாம் செல்கிறது, என்னவெல்லாம் செய்கிறது என்பதை உற்றுக் கவனிக்கக் கற்றுக்கொள்கிறானோ.. அவன் மனிதர்களில் மாணிக்கம்.
70. தன்னை உணர்தல்
Published on
Updated on
2 min read

“தன்னை உணர்தலே அர்த்தமற்ற மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். தன்னை உணர்பவன், தன் திறன்களை அறிவான். தன் கடமைகளை அறிவான். பிறப்பின் நோக்கத்தையும் அறிந்து, அதைச் செய்து முடிப்பான்” என்றார் குரு.

“தன்னை உணர்வது எப்படி குருவே?” என்று கேட்டான் சிஷ்யன்.

“கவனமாகக் கேள்..” எனக் கூறிவிட்டுத் தொடர்ந்தார் குருநாதர்.

“தன்னை உணர்வதில் முதன்மையானது.. சுவாசிக்கும் மூச்சுக்காற்றை நாம் உற்றுக் கவனிப்பதாகும். எவனொருவன் தான் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்று, உடலுக்குள் எங்கெல்லாம் செல்கிறது, என்னவெல்லாம் செய்கிறது என்பதை உற்றுக் கவனிக்கக் கற்றுக்கொள்கிறானோ.. அவன் மனிதர்களில் மாணிக்கம் ஆகிறான்..”.

“தியானப் பயிற்சி மூலம்தானே இதைக் கற்றுக்கொள்ள முடியும் குருவே..” என்று கேட்டான் சிஷ்யன்.

பதில் சொன்னார் குரு.. “ஆம். எவ்விதமான தியானப் பயிற்சிகளிலும் இதுவே அடிப்படை. இதற்கு அடுத்தபடியாக.. தன் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் உற்றுக் கவனிக்கக் கற்றுக்கொள்பவன் அடுத்த கட்டத்தை அடைகிறான். உடலை உற்றுக்கவனிக்கும் பயிற்சியில் தேர்ச்சி பெறுபவனுக்கு, தன் உடலை எப்படிச் செலுத்துவதென நன்கு தெரியும். உடலுக்குள் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் அவனுக்குத் தெரிந்தே நடக்கும். அவன் மனம் சொல்வதை மறுதலிக்காமல் உடல் கேட்கும்..”.

“அதற்கடுத்த கட்டம் என்ன குருவே?” - ஆர்வத்துடன் கேட்டான் சிஷ்யன்.

குரு தொடர்ந்தார்.. “இந்த இரண்டு கட்டங்கள் மூலமாக, தன் மனதையும் உடலையும் நன்கு உணரும் ஒருவன், அடுத்தகட்டமாக தன் செயல்களை பகுத்துணரும் திறனையும் எளிதாக அடைகிறான்..”.

புரியவில்லை சிஷ்யனுக்கு. அது அவனது புருவச் சுருக்கங்களில் இருந்தே குருவுக்குப் புரிந்தது.

“குடிப்பதற்கு கொஞ்சம் நீர் எடுத்து வருவாயா?” என்று சிஷ்யனிடம் கேட்டார் குரு.

சட்டென எழுந்து சென்றான் சிஷ்யன். குடிநீர் குவளையுடன் திரும்ப வந்தான். குவளையை வாங்கிக்கொண்டார் குரு.

“இப்போது நீ என்ன செய்தாய் என்று சொல்ல முடியுமா?” என சிஷ்யனைப் பார்த்துக் கேட்டார்.

“நீங்கள் பருகுவதற்காக நீர் எடுத்துக்கொண்டு வந்தேன்..” என்றான் சிஷ்யன்.

“தன்னையும் தன் உடலையும் நன்கு உணர்ந்தவன் இப்படி பதில் கூறமாட்டான்..” என்றார் குரு. விளக்கத்தைக் கூறலானார்.

“ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் உடலமைப்பைப் பொறுத்தவரையில் நான்கு நிலைகள் இருக்கின்றன. அமர்தல், கிடத்தல், நிற்றல், நடத்தல்.. இவையே அந்த நான்கு நிலைகளாகும். நான் குடிநீர் கேட்கும்போது நீ அமர்ந்த நிலையில் இருந்தாய். அதன்பின் எழுந்தாய். நடந்தாய். தண்ணீர் எடுத்துக்கொண்டாய். திரும்ப நடந்து வந்தாய். என்னிடம் கொடுத்தாய். நீ செய்தது ஒரு செயல் என்றாலும், அதற்குள் இத்தனை செயல்கள் இருக்கின்றன. சரிதானே நான் சொல்வது..” என்று கேட்டார் குரு.

‘அட, ஆமாம்ல!’ என்று தனக்குள்ளும், “ஆம் குருவே..” என குருவிடம் சொன்னான் சிஷ்யன்.

“இப்படி செய்யும் காரியம் ஒவ்வொன்றையும் உற்றுக் கவனித்து, அடுத்தடுத்த சிறுசிறு செயல்களாகப் பிரித்துப் பார்க்கும் உணர்வை அனிச்சையாக அடைவதுதான் மூன்றாவது கட்டமாகும். அதை அடைந்தவர்கள் எப்பேர்ப்பட்ட காரியத்தையும் எளிதாகச் செய்து முடிப்பார்கள். அடுத்தடுத்த செயல்களைச் செய்து முடிப்பதுதான் நோக்கமாக இருக்கும். காரியவெற்றி அதுவாகவே கிடைக்கும். தோல்விகள் அவர்களை அணுகுவது அபூர்வம். அப்படியே தோல்வி நேர்ந்துவிட்டாலும், எந்த இடத்தில் தவறு ஏற்பட்டது என்பதை எளிதாக கண்டறிய முடியும் அவர்களால். தன்னைப் புரியும். தன் செயல்கள் புரியும். தன் கடமை புரியும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக அமையும்..” என்றார் குரு.

தன்னை அறிதல் என்ற சாதாரண வார்த்தைகளுக்குப் பின்னால் இவ்வளவு ஆழமான தத்துவம் இருப்பதை நினைத்து, மலைத்துக்கொண்டான் சிஷ்யன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com