ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாவித்ரி - 14. குழந்தை உள்ளம்!

‘பலர் என் காதுபடவே நான் குண்டாகி விட்டதைப் பற்றிப் பேசுகிறார்கள். உடல் பருமனாகி விட்டதால் எனக்கு நடிக்க சான்ஸ் வரவில்லை

News image
Updated On :7 ஆகஸ்ட் 2015, 9:41 am

பா. தீனதயாளன்


‘பலர் என் காதுபடவே நான் குண்டாகி விட்டதைப் பற்றிப் பேசுகிறார்கள். உடல் பருமனாகி விட்டதால் எனக்கு நடிக்க சான்ஸ் வரவில்லை என்கிறார்கள். அது தவறு. எனக்குத் திருப்தியான பாத்திரங்கள் வராததால் நானே வேண்டாம் என்கிறேன்.

என் உடல் இளைக்க வேண்டும்  என்பதால் நானும் அவரும் அரிசி சாதம் சாப்பிடுவதே கிடையாது. சோறு என்றால் எனக்கு உயிர். ஆனால் இப்போது ஒரு மணி அரிசி கூட இல்லாத வீடு எங்கள் வீடாகத்தான் இருக்கும்.

காலையில் காபி வித் அவுட் சுகர்.  9 மணிக்கு தக்காளி ஜூஸ். மதியம் ஒரு மணிக்கு பச்சை காய்கறி இல்லனா நீர் மோர். ராத்திரில வேக வைத்த காய்கள்.  இவ்வளவு கட்டுப்பாடாச் சாப்பிட்டும் உடம்பு இளைக்கலே.

நான் ஒல்லியாகணும்னு தோழிகள் எல்லாருமே என்னை விட அதிகம் கவலைப் படறாங்க. என் பங்களாவைக்  கட்டும் போதே நீச்சல் குளத்துக்கு இடம் ஒதுக்கியாச்சு. ஸ்விம்மிங்னா எனக்குக் கொள்ளை ஆசை. நானும் ஜெயலலிதாவோட அம்மா சந்தியாவும் மாயாபஜார்ல சேர்ந்து நடித்தோம். ரொம்பவே திக்  ஃபெரன்ட்ஸ்.

சந்தியா கூடவே நானும் தினமும் நீந்துகிறேன். முன்ன மாதிரி பார்ட்டி, டின்னர்களுக்கு போவது கிடையாது. ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டா ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிக்கிறேன். ரசிகர்களின்  அன்புக்குக் கட்டுப்பட்டாவது  நான் பழைய மாதிரி ஆகி நடிக்க வேண்டும் என்ற வைராக்யத்தில் இருக்கிறேன்.’

- 1967 நவம்பரில் சாவித்ரி கூறியவை.  ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவரது முயற்சிகள் எதுவும்  பலிக்காமல் போனது.

தமிழில் வாய்ப்புகள் வரக் காணோம். ஆந்திராவில் சாவித்ரி எப்போதும் நடிகையர் திலகம்! தமிழில் மற்ற ஹீரோயின்கள் நடித்து விழா கொண்டாடியவை, தெலுங்கில் ரீ மேக் ஆன போது அவற்றில் சாவித்ரியே நாயகி. 1970 ல் என்.டி. ராமாராவுடன்  ‘பெத்தார்த்தலு’ உள்ளிட்ட படங்கள் ஒப்பந்தமாயின. அந்த ஆண்டின் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Story image

ஸ்ரீதர் இயக்கத்தில் சாவித்ரி நடிக்க மிக அருமையான சந்தர்ப்பங்கள் தமிழில் மூன்று முறை வந்தன.  முதலில் கல்யாணப் பரிசு. கர்ப்பஸ்திரி சாவித்ரியால் அதில் நடிக்க முடியவில்லை.

அடுத்து நெஞ்சில் ஓர் ஆலயம். மிகக் குறுகிய கால தயாரிப்பு. ஒரேயடியாக மொத்த கால்ஷீட்டையும் கேட்டார் ஸ்ரீதர். கொடுக்க முடியாத சூழலில் ஜெமினி - சாவித்ரி இருவரும்  பிசி.

மூன்றாவதாக கொடி மலர். முத்துராமன் - விஜயகுமாரி நடித்த வேடங்களில் ஜெமினி-சாவித்ரி நடிக்க சில நாள்கள் ஷூட்டிங் நடந்தது. பிறகு ஏனோ நின்று விட்டது.

நாலாவது வாய்ப்பாக  நெஞ்சில் ஓர் ஆலயம் தெலுங்கில் ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவானது. 

‘சாவித்ரி நடித்து நான் இயக்கிய ஒரே படம் மனசே மந்திரம். இறந்த பிறகு வேறு ஒருவரை, மணந்து கொள்ளச் சொல்லும் கணவரை மறுத்து, சாவித்ரி  பேச வேண்டிய காட்சி. காமிரா ஓடியது. கணவராக நடித்த ஜக்கையாவின் கோரிக்கையை கேட்டுப் பதறியவாறு, தன்  அதிர்ச்சியையும், மறுப்பையும் ஆவேசமாக  வெளிப்படுத்தியபடி  சாவித்ரி தடாலென்று தரையில்  விழுந்து விட்டார்.

அவரது நடிப்பு சுற்றியிருந்தவர்களின் கண்களைக் குளமாக்கியது. ஆனால் சாவித்ரியோ உணர்ச்சி வசப்பட்டதால்  மயங்கிக் கிடந்தார். நடிகையர் திலகம் கண் விழிக்க அரை மணி நேரம் ஆனது. அதுவரை ஷூட்டிங் நடைபெறவில்லை.

துரிதமாக எழுந்த சாவித்ரி,  ‘ஸ்ரீ  அடுத்த ஷாட்டை உடனே  ரெடி பண்ணுங்க...’ என்றார் சுறுசுறுப்பாக.’

‘பரவாயில்ல. முதல்ல நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.’

‘தேவையில்ல. நான் இப்ப சரியான மூட்ல இருக்கேன். அது முக்கியமான சீன். எடுத்து முடிச்சிடுவோம்.’ என்றவாறு தொடர்ந்து நடித்து முடித்தார்.

சாவித்ரி பருமனாக இருந்ததால் அந்த கேரக்டர் பெற வேண்டிய அனுதாபத்தைப் பெறாமல் போய்விட்டது. பெரும்பாலான ஷாட்களில் மக்களின் கவனம், சாவித்ரியின் வடிவம் மீது போகாதவாறு அமைத்திருந்தேன். ஆயினும் பயனில்லை.

நடிகையர் திலகம் உடல்வாகு காரணமாகவே தொடர்ந்து சினிமாவில் நடிக்காமல் போனார். அதனால் சாவித்ரிக்கு  எந்த அளவு நஷ்டமோ எனக்குத் தெரியாது. ஓர் அற்புதமான நட்சத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போனது தென்னகத் திரை உலகத்துக்கு மாபெரும் இழப்பு! ’-ஸ்ரீதர்.

 ஸ்ரீதரின் இயக்கத்தில் நடித்த அனுபவம் குறித்து சாவித்ரி-

‘நெஞ்சில் ஓர் ஆலயம் தெலுங்கு ரீமேக்கில் நடித்தேன். ஏனோ அதில் எனக்கு அவ்வளவாகத் திருப்தி இல்லை.  தமிழ்ப்படத்தைப் பார்த்து நடிக்கிறோம் என்ற நினைப்பு கூடவே இருந்தது தான் காரணமோ என்னவோ...’

‘நானும் ஒரு பெண்’ தெலுங்கு பேசிய போது கருப்புப் பெண்ணாக என்.டி.ஆர். ஜோடியாக சாவித்ரி நடித்தார். ஏவிஎம்மோடு இணைந்து படத்தைத் தயாரித்தவர் சாவித்ரியின் அபிமானத்துக்குரிய எஸ்.வி. ரங்காராவ்.

‘ரங்காராவைப் போன்ற ஒரு கம்பீரமான இயற்கையாக நடிக்கக் கூடிய நடிகரை நான் பார்த்தது இல்லை. அவரைப் பார்க்கும் போது ’சார்லஸ் லாஃப்டனின்’ ஞாபகம் வரும்.  ஒரு சிரமும் இன்றிச் சட்டென்று எந்த பாகத்துக்கும் உரிய குரல், பாவனைகளுடன் நடிக்கக் கூடிய தனித் திறமை எஸ்.வி. ரங்காராவுக்கு உண்டு.’ -சாவித்ரி.

அன்னை பூமி அவரைக் கை விடாது அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றது. சாவித்ரி தாய்மண்ணில் டைரக்டர் ஆக ப்ரொமோஷன் பெற்றார்.

‘தெலுங்கில்  நான் நடித்த ’மூக மனசுலு’ பிரமாதமாக ஓடியது. அதைத் தமிழிலும் எடுக்க விரும்பினேன். அதுவே பிராப்தம். எனது டைரக்ஷனில் ஐந்தாவது படம். ஆனால் அந்தப் படமே என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமாகவும் அமைந்து விட்டது.’ - சாவித்ரி.

ஆரம்ப காலத்தில் தி.நகர்  வைத்தியராமன் தெருவில் உள்ள  பானுமதியின் வீட்டில் குடியிருந்தவர் சாவித்ரி.

சினிமா தயாரிக்க வேண்டிய அவசியமோ, டைரக்டராக மாறும் நிர்ப்பந்தமோ நடிகையர் திலகத்துக்கு கிடையாது.  பானுமதி மாதிரி சொந்தத்தில்  சினிமா ஸ்டுடியாவை உருவாக்கியிருந்தால், சாவித்ரியின் கலைத் தேர் கம்பீரம் இழந்திருக்காது. 

ஏ.நாகேஸ்வரராவ்- சாவித்ரி நடித்த மூகமனசுலு தெலுங்கு வெற்றிச் சித்திரம்,  ஆந்திராவில் வசூலை வாரிக் குவித்தது. இந்தியில் மிலன் என்ற பெயரில் வெளியானது. சுனில்தத்- நூதன்,  ஜமுனா நடித்தனர். வடக்கிலும் சூப்பர் டூப்பர் சக்ஸஸ். 

கல்லூரி மாணவியான பணக்கார வீட்டுப் பெண்ணுக்கும் படகோட்டி ஒருவனுக்கும்  ஏற்படும் ஈடுபாடு, காதலாகி அடுத்த பிறவியிலும் தொடர்வதாக கதை.

திருப்பதி ஏழுமலையானுக்குப் பிறகு  சாவித்ரியிடம் அதிக அக்கறை காட்டினார்கள் ஆந்திரர்கள். ஆகவே சாவித்ரியை காலேஜ் ஸ்டூடன்ட் ஆக மனமாற ஏற்றுக் கொண்டனர். படத்தை இயக்கிய ஆதூர்த்தி சுப்பாராவ் அனுபவமிக்க இயக்குநர். மூகமனசுலு, மிலன் இரண்டையும் அவரே திறமையாக டைரக்ட் செய்து சாதித்துக் காட்டினார்.

சாவித்ரி ஏனோ  மூகமனசுலு ஹீரோயின் தமிழ் பேச வேண்டும் என்று துடியாகத் துடித்தார். அவரே சொந்தமாகத் தயாரித்து இயக்க ஆர்வம் பெருகியது. அவரது அன்பின் சுமையைத் தமிழக ரசிகர்கள் தாங்குவார்களா என்பதையெல்லாம் சிந்திக்கவில்லை. ஆசைத்தீ அண்ணா சமாதியின் அணையா விளக்கு போல், அல்லும் பகலும் சுடர் விட்டுத் தொடர்ந்து எரிந்தது.

மீனவர் நாகேஸ்வரராவ் ’மூகமனசுலுவில்’ மரியாதை நிமித்தமாக, மேட்டுக்குடிப் பெண்ணான நாயகியை தெலுங்கில் ’அம்மகாரு’ என அழைப்பார்.

தமிழில் ஜெமினி, சாவித்ரியை அது போல் அழைத்தால் பைத்தியங்கள் கூடச் சிரிக்கும்! படகோட்டி வேடம் தனக்குப் பொருந்தி வராது என்று ஜெமினி ஒதுங்கிக் கொண்டார்.

‘நீங்க நடிக்கலன்னா போங்க. சிவாஜி அண்ணாவை வெச்சி எடுக்கலாம். இன்ஃபாக்ட். எப்பவுமே அவருக்கு  பிரமாதமான மார்க்கெட் இருக்கு! டிஸ்டிரிபியூட்டர்ஸ் கணேஷ் அண்ணாவை போட்டு எடுத்தா பெரிய லாபம் கிடைக்கும்கிறாங்க.

‘நடிகையர் திலகம் சாவித்ரி டைரக்ஷன்ல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கிறார் !’

Story image

கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஃபேன்ஸ் மத்தியில நல்ல பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். ஓபனிங்லயே பெரிய பப்ளிசிடி கிடைக்கும்! பட சூப்பரா ஓடும். கலெக்ஷன் குவியும்!’

வியப்பின் பெரு வெளியில் சாவித்ரி அடம் பிடித்தார்.

இயல்பான நடிப்பின் இமயம் ஜெமினி!  வாழ்வின் நிலையாமையை வாசித்தும், அனுபவித்தும் கற்றவர்.    அன்றாடம் நேசம் நெய்யும் அழகிய மனைவியின், ஆசை வெள்ளத்துக்கு அணை கட்ட முயன்றார்.

திரை வணிகத்தின் யதார்த்தம் உணராமல், உச்ச நட்சத்திரத்தின் உண்மை சூழல் புரியாமல்  நீ ஏமாந்து போவாய் என்று எவ்வளவோ புத்தி சொன்னார்.

‘மூகமனசுலு வேண்டாம். அது பூர்வ ஜென்மக் கதை. ரிஸ்க் ஆனது.  இங்கு  ஓடாது. வேறு ஏதாவது நல்ல சப்ஜெக்டில் நீ நடிக்கலாம்.’

‘மனக்குகையில் சதா சாத்தான்களின்  புல்லாங்குழல் இசை!’ 

சாவித்ரிக்கு  புருஷனின் வார்த்தைகள் பாகற்காயானது.

பிரியசகி சாவித்ரியிடம் ‘ நான் கண்டிப்பா சொல்றேன். உன் இஷ்டப்படி என்ன வேணும்னாலும் செஞ்சிக்க. இது சம்பந்தமா  மேற்கொண்டு என்னை எதுவும் கேட்க வேண்டாம்.’ என்று தீர்த்துச் சொல்லி, விட்டு விலகி நின்றார்  ஜெமினி.

காதல் கணவர் என்பதற்காகவோ, மூவேந்தர்களில் ஒருவர், தமிழில் தொடர்ந்து அதிக சில்வர் ஜூபிளி சினிமாக்களின் ஹீரோவாக, நிலைத்து நிற்பவர் என்பதற்காகவோ ஜெமினியைக் கொண்டாடாமல், மதிக்காமல் சிவாஜியிடம் பேசி அப்போதைக்கு கால்ஷீட்டும் வாங்கி விட்டார் சாவித்ரி. பிராப்தம்  துரிதமாக உருவாக ஏற்பாடுகள் தயார் .

உள்ளுக்குள் புழுங்கிப் போனாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல், நிஜ நடிக மன்னனாகப் பெருந்தன்மையுடன் ஜெமினி நடந்து கொண்டார்.

வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டக் கலைஞர்களுக்கு சாவித்ரி,  தன் வீட்டில் வைத்து அட்வான்ஸ் தந்த போது, ஜெமினியும் பக்கத்தில் சேர்ந்து நின்று வழங்கினார்.

ஜெமினி - சாவித்ரி இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்கிறத் தகவல் வேகமாகப் பரவியது. மீடியா விழித்துக் கொண்டது. காதல் மன்னனின் ரசிகர்கள் உள்ளன்போடு ஊடகங்களை அணுகினார்.

‘ஜெமினி கணேசனும் சாவித்ரியும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்களாமே?’

‘சண்டை போடாத கணவன் -மனைவி உலகத்திலேயே கிடையாது. வெற்றி என்னவோ வழக்கம் போல் சாவித்ரிக்கே.’

பிரபல சினிமா பத்திரிகையில் வெளியான கேள்வி பதில்.

1969.பேரறிஞர் அண்ணாவை இழந்த வறண்ட கோடை. சென்னையின் சுவர்களில்  ‘வெற்றி நடை போடுகிறது! எனப் பூரித்து நிற்கும்  ’அடிமைப் பெண்ணின்’ அட்டகாச விளம்பரங்கள். வருகிறது  ‘சாந்தி நிலையம்!’  என்று மிளிரும்  வண்ணப் பதாகைகள்.

காதல் மன்னனின் வாழ்க்கையில் என்னதான் நடக்கிறது...  கவர் ஸ்டோரி வெளியிட்டால் என்ன...?  பிரபல முன்னணி வார இதழ் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு சினிமா நிருபரை, காதல் மன்னனைத் தொடர்பு கொள்ளத் தூண்டியது.

நீச்சல் குளப் பின்னணியில் சாவித்ரி - பன்னீர் திராட்சை வண்ணத்தில், பூக்கள் போட்ட சேலையில், நாக்கைத் தொங்க விட்ட வெள்ளை நிற நட்சத்திர நாயுடன் பத்திரிகையின் அட்டையை அலங்கரித்தார். சாவித்ரியின் கையில்  ரிஸ்ட் வாட்ச்.  அதைச் சொல்ல மறந்து விட்டேனே...!

‘ஹலோ ஜெமினி கணேஷ்  சார் இருக்காரா..?’

எதிர்  முனையில் ‘இவ்ளோ நாழி இங்கே தான் இருந்தார். இப்பொழுது தான் அந்த வீட்டுக்குப் போனார்.’

அடுத்து நிருபர்  சாவித்ரி இல்லத்துக்கான தொலைபேசி எண்ணைச் சுழற்றுகிறார்.

சாவித்ரி- ‘ ஹலோ யார் வேணும்?’

ஜெமினி- ‘நான் பேசறேன் கொடு.’

அக்னி நட்சத்திர வெயிலின் அனல் கக்கும்  முற்பகல் பதினோரு மணி. தி. நகர். அபிபுல்லா சாலை சாவித்ரி மாளிகை. அழகிய கூடம்.

பிரகாஷ் ஸ்டுடியோவில் தெலுங்கு சினிமாவை இயக்கும் அவசரம். சாவித்ரி கிளம்ப இருந்தார். நேர்காணலுக்காக அரை மணி நேரம் தாமதம் ஆனாலும் பரவாயில்லை என்று உட்காருகிறார்.

அனுபவஸ்தர் ஜெமினி கணேஷ். உலகம் அறியா அப்பாவி சாவித்ரி. அவர் வாயிலாகத் தப்பித் தவறி கூட, வீட்டு விஷயம் வெளியே தெரியலாகாது. பண்பாடு அவரை எச்சரித்தது. உடனே உஷாராகி, 

’கொஞ்சம் இருங்கள். சாவித்ரி பற்றி நீங்கள் கேட்கும் பேட்டியை நான் எழுதியே கொடுத்து விடுகிறேன்’ என்றார். அவரே காகிதம் பேனாவோடு அமர்ந்து  நிருபரிடம் நிரப்பித் தந்ததிலிருந்து.  

’சாவித்ரிக்கு  குழந்தை உள்ளம். சிறு பிள்ளைக்கு இருக்க வேண்டிய குணாதிசயம் அவளுக்கு உண்டு. வீட்டில் இவர்கள் எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள். நளினமாகப் பேசுகிறார்கள். நேரில் பார்த்தால் பெரிய நடிகையைப் போலவே தெரியவில்லையே...

சினிமா மேக் அப், நடை, உடை, பாவனை இப்படி இருப்பாங்கன்னு நினைச்சா அப்படி இல்லையே... என ரசிகைகள் அங்கலாயிப்பார்கள்.

குடும்பப் பெண் - சினிமா நடிகை என்று இனம் பிரித்தால், ’குடும்பப் பெண் சினிமாவில் நடிக்கலாமா என்றால்,  இதென்னயா கேள்வி...?’  என சாவித்ரி கோபப்படுவாள்.

நடிகைக்குக் குடும்பம் இல்லையா? அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, தங்கை கிடையாதா? கல்யாணம் ஆனால் குடும்பப் பெண். - திருமதி. ஆகலேன்னா குமரிப் பெண் அவ்வளவு தானே என்பாள்.

சாவித்ரிக்குக் கோபம் வரும். ஆனால் அது முன் கோபம். குழந்தை போலே உடனே இளகி விடும். தொழிலைப் பொறுத்தவரை சாவித்ரி மிகக் கண்டிப்பானவள். செட்டில் சாவித்ரி நடந்து கொள்ளும் முறை  எல்லாரும் பின் பற்ற வேண்டியது. அழகான ஒழுங்கான நடைமுறை.

Story image

லேட்டா போகக் கூடாது.  நடிப்பில் மனது வைத்து பூரணத் திருப்தி உண்டாகுமாறு  நடிக்க வேண்டும் என்று, எனக்கே பல முறை சொல்லி ஓரிரு முறை கண்டித்திருக்கிறாள்.

உடலை சரிக்கட்டி வை என்றால் ஒரு பக்கம் வருத்தம், ஆத்திரம் எல்லாம் கலந்து வரும். என்ன செய்வது? கூடிய வரை உடல் எடையைக்  குறைக்க முயற்சிக்கிறாள்.

எங்களது ரசிகப் பெருமக்களின் ஆசி வீண் போகவில்லை. ஆண்டவனின் ஆசியும், அன்பு ரசிகப் பெருமக்களின் வாழ்த்துகளும் எங்களைப் போன்ற மனமொத்த கலைஞர்களுக்கு என்றென்றும்  வேண்டும் என்று மிகவும் பணிவன்புடன் வேண்டுகிறேன்.’- ஜெமினி கணேசன்.

பத்திரிகைக்கு அடுத்த வாரமே ஓர் அஞ்சல்.

சென்னை 17. கிருஷ்ணா என்பவரிடமிருந்து.

’புயல் வீசிக் கொண்டிருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ஜெமினி அபிமானிகளின் உள்ளங்களில் அமைதி தேடித் தந்து இருக்கிறீர்கள்.’

சாவித்ரிக்கும் ஜெமினிக்கும் ஏற்பட்டப் பிணக்குகள் நட்சத்திர வாழ்வில் இயல்பானவை. சாவித்ரியோடு பிரிவு என்பதை ஜெமினியால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. 

தங்களையும் மீறி விதிவசத்தால் விலகி விடுவோமோ... என்கிற உள்ளுணர்வு இருவரிடமும் இருந்தது. அத்தாக்கத்தின் வெளிப்பாடே ரசிகர்களுக்கு ஜெமினி விடுத்த கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.