ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வசுந்தராதேவி - வைஜெயந்திமாலா: 1. பாப்புக் குட்டி!

‘இந்தியர்கள் குடியரசு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த இன்பத் தருணம். 1949ன் பனி பொழியும் மார்கழி.

News image
Updated On :10 மார்ச் 2016, 12:10 pm

பா. தீனதயாளன்

‘இந்தியர்கள் குடியரசு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்த இன்பத் தருணம். 1949ன் பனி பொழியும் மார்கழி.

‘உன் கண் உன்னை ஏமாற்றினால்
என் மேல் கோபம் உண்டாவதேன்
டடடா டடடா டடடா டடடா... ’

‘வாழ்க்கை’ சினிமா படப் பாடலின் ஆரவாரம் தென்னகமெங்கும்!

மதராஸப் பட்டணத்தின் குடிமக்கள் அண்ணாந்து பார்த்து... பார்த்து, அவர்களின் கழுத்து வலித்தது. காரணம் ‘வாழ்க்கை’ டாக்கியின் விண் முட்டும் விளம்பரங்கள்!

‘ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை’ என்று கொட்டை எழுத்துக்களில் பளிச்சிட, லட்சக் கணக்கான வண்ண வண்ண பிரம்மாண்ட பலூன்கள் வானம் தொட்டன. குழந்தைகளையும் குஷிப்படுத்தும் குதூகல ஏற்பாடு!

ஃபிலிம் ரோலில் ‘26 ஜனவரி 1950 இந்திய சரித்திரத்திலே ஒரு பொன்னாள்! ’

‘சினிமா சரித்திரத்திலே ஒரு பொன் ஏடு ‘வாழ்க்கை’

‘இது ஒரு ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் சமூகச் சித்திரம்! ’

‘வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாதது!’

Story image

தமிழ்நாடு, கேரளா, மைசூர் எங்கும் 50 நகரங்களில் அமோக வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது!

ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் சாமர்த்தியம் அவரது ‘வாழ்க்கை’ சினிமா விளம்பரங்களில் ஒவ்வொரு வடிவத்திலும் வெளிப்பட்டது.

1950 தைத்திருநாளில் வெளியானவை - 1. ஜூபிடரின் கிருஷ்ண விஜயம், 2. பாரதிதாசனின் அற்புதக் காதல் காவியம் - மாடர்ன் தியேட்டர்ஸ் ‘பொன்முடி’. பிப்ரவரியில் சென்னையில் ரிலிசான பி.யூ. சின்னப்பா - பி. பானுமதி முதன் முதலில் ஜோடி சேர்ந்த ரத்னகுமார்...

அத்தனைப் படங்களையும் வசூலில் முறியடித்தது ஏவி.எம்.மின் வாழ்க்கை.

1950-ன் முட்டாள்கள் தினம். சென்னை பாரகன் டாக்கீஸில், டாக்டர் பி.வி. செரியன் தலைமையில் வாழ்க்கை படத்தின் 100வது நாள் விழா விமரிசையாக நடைபெற்றது.

விருதுநகர் உள்ளிட்ட ஊர்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் வாழ்க்கை 100 நாள்களைக் கடந்து ஓடியது. விருதுநகர் ராதா தியேட்டரில் நடந்த விழாவில், ‘சிலம்புச் செல்வர் ம.பொ. சி. ’, ஏவி.எம்முடன் பங்கேற்றார்.

‘வாழ்க்கை’யின் வரலாறு காணாத வெற்றிக்குத் தவிர்க்க முடியாத ஒரே காரணம் வைஜெயந்தி மாலா!

புறாவைக் கொஞ்சி ‘பாவுரமா’ என்று பாடியவாறு, ‘ஸ்வர்க்க சீமா’வில் பானுமதி வான் புகழ் பெற்றதால், வைஜெயந்தி மாலாவின் கைகளிலும் ஒரு புறாவைத் தடவக் கொடுத்து,

சினிமா வானிலே புதிய நட்சத்திரம்
நாட்டிய மணி
வைஜெயந்தி மாலா

ஏவி.எம். புரொடக்ஷன்ஸ் வாழ்க்கை
வாழ்க்கையின் மேடு பள்ளங்களைச் சித்தரிக்கும் அற்புத சிருஷ்டி!

என்று தங்கள் அறிமுகத்தின் மீது அபரிதமான நம்பிக்கை வைத்து விளம்பரப்படுத்தியது ஏவி.எம்.

வாழ்க்கை ரிலீஸ் ஆவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னமே படத்துக்கான ப்ரோமஷனைத் துவங்கியது.

வைஜெயந்தி மாலாவை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முன், அவரது தாயார் - ‘திருவல்லிக்கேணி வேதவல்லி’யை அறிவது அவசியம்.

மறக்க முடியாத ‘ஜெமினியின் மங்கம்மா சபதம்’ மூலம் ‘வசுந்தரா தேவி’யாக அழியாப் புகழ் பெற்றவர் வேதவல்லி.

கேட்பவரை வசீகரிக்கும் குரலும் இளமை எழிலும் வசுந்தராவின் பிறவிப் பெருமிதம்!

கண்ணனிடம் மீராவுக்கு ஏற்படும் அளவு கடந்த அன்பையும், அதனால் உண்டாகும் அத்தனை அவஸ்தைகளையும், கேட்பவர் நெஞ்சுருக சொந்த சாஹித்யத்தில் பாடி, வசனம் பேசி குரல் மூலமாகவே ஒவ்வொன்றுக்கும் உயிரூட்டி, உண்மையான மீராவாகவே உலா வந்தவர் வசுந்தரா தேவி.

‘மீரா- ஒலிச்சித்திரம்’ கிராம ஃபோன் இசைத் தட்டுகளாக வெளியாகி விற்பனையில் உச்சம் தொட்டது. ஏறத்தாழ 40 நிமிடங்களை நெருங்கி ஓடிய அவை கலா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின.

‘யார் அந்த மீரா...? வெண்ணையையும் உருக்கும் சாரீரம்..! ’ என்று மயங்கி நின்றனர் சங்கீத சாம்ராட்களும் சாஹித்யகர்த்தாக்களும்.

மைசூர் - மண்டயம் என்கிற ஊரைப் பூர்வீகமாக உடையது வசுந்தராவின் வைணவக் குடும்பம். வேலை நிமித்தம் மதராஸில் குடியேறியது.

ஸ்ரீமதி பரிணயம், மைனர் ராஜாமணி, விஷ்ணு லீலா, அதிர்ஷ்டம், பாலாமணி... படங்களில் நடித்தவர் எம்.என். ஸ்ரீநிவாசன். அவரது மனைவி யதுகிரி. மகள் - வசுந்தரா என அறியப்பட்ட வேதவல்லி.

வசுந்தராவைத் தேடி சினிமா வாய்ப்புகள் வாசலில் நின்றன. சொர்க்கத்தின் கதவைத் திறக்கக் கணவரின் அனுமதி வேண்டுமே...

வேதவல்லி மீராவாகும் முன்னரே எம்.டி. ராமனின் ‘திருமதி’ ஆனவர்.

ராமன் மதராஸ் ராஜதானியின் கவுரவம் மிக்க மராமத்து இலாகா டிராஃப்ட்ஸ்மென். மு.கருணாநிதியால் பொதுப்பணித்துறை என்று பின்னாளில் தமிழ்ப்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகஸ்தர்.

ராமனின் மனைவி வேதவல்லியாக மருமகள் இருந்தால் போதும். வசுந்தராவாக மாற வேண்டாம் என்று கண்டித்துக் கூறியது புகுந்தவீடு.

எம்.கே. தியாகராஜபாகவதர் நடித்த ‘சிந்தாமணி’அழியாப் புகழ் பெற்றது. அதனை உருவாக்கியவர் ஓய்.வி. ராவ். நடிகை லட்சுமியின் தந்தை.

ராவ், வசுந்தராவை சினிமாவில் அறிமுகப்படுத்த முயற்சிகள் செய்தார். அம்மா யதுகிரிக்குக் கூடுதல் ஆசை. மகளை வெள்ளித் திரையில் கலையரசியாகக் காண.

தாயார் கொடுத்தத் தைரியம். வசுந்தரா, ராவிடம் நடிக்கச் சம்மதம் என்று தலை அசைத்தார்.

சில தினங்களில் ‘வசுந்தராதேவி நடிக்கும் பக்த மீரா தயாராகிறது!’ என்கிற விளம்பரம் வெளியானது. மதராஸப் பட்டினம் கிறுகிறுத்துப் போனது.

ராமன் அகத்தார் கொந்தளித்தார்கள். வேதவல்லி நடிக்க 144 விழுந்தது.

ஓய். வி. ராவ் பின் வாங்கவில்லை. மானப் பிரச்சனை. வேறு யுவதிக்கு வசுந்தராதேவி என்று பெயர் சூட்டி பக்த மீராவை 1938ல் வெளியிட்டார். நிஜமான வசுந்தரா இல்லாமல் நஷ்டம் நேர்ந்தது.

மதராஸ் சங்கீத வித்வத் சபை. வசுந்தராவின் ஆலாபனையில் மயங்கிக் கிடந்தது. முக்கிய விருந்தினர் மைசூர் இளவரசர். வசுந்தரா தன் தர்பாரில் பாட வேண்டும் என்று விரும்பினார்.

மைசூர் அரண்மனையில் வசுந்தரா வாய்ஸ்...!

Story image

எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடியது.

அரியணைகளின் அழைப்பை அலட்சியப்படுத்த முடியுமா..?

மகாராஜா -‘நால்வடி கிருஷ்ண ராஜ உடையார்’, யுவராஜாவின் ரசிப்புத் தன்மைக்கு சபாஷ் போட்டார். வசுந்தராவின் குரல் இருவரையும் கலக்கி விட்டது.

இரு கச்சேரிகளில் இசை மழை பொழிந்த வசுந்தராதேவியை மெச்சி ராஜாங்கப் பரிசுகளும், பாராட்டும் குவிந்தன.

இளைய பூபதி கலைக் குழுவினரோடு உலகச் சுற்றுலாவுக்குக் கிளம்பினார். கான சரஸ்வதி வசுந்தராதேவி உடன் வந்தால் தினம் குயிலும் கூவுமே. உற்சாகம் கூடுமே...

குதூகலமாகி கோகிலத்துக்கு அழைப்பு விடுத்தார்.

மண்ணாளும் மைந்தனுடன் பாரெங்கும் செல்வது பாக்கியம்!

21 வயதிலேயே வசுந்தராவுக்குக் கிடைத்திருக்கும் ராஜமரியாதை யாருக்குச் சித்திக்கும்! அன்னை யதுகிரியின் உச்சி குளிர்ந்தது.

ஆறு வயது பேத்தி வைஜெயந்திக்கும் சேர்த்து, பட்டுப்பாவாடை, ரவிக்கைகள் தைக்கக் கொடுத்தார் யதுகிரி.

அரண்மனை சிநேகிதம் சம்சார வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தியது. வீட்டுப் பெண்கள் தூர தேசம் செல்வதில் தர்ம சங்கடம். தயக்கம். குழப்பம். வேட்டிகள் செய்வதறியாது விலகி வழி விட்டன.

பாட்டி, அம்மா, பேத்தி என மூன்று தலைமுறையினரின் முதல் கலைப் பயணம் இளவரசரோடு இனிது தொடங்கியது.

1939 ஜூலை 13. பம்பாய் துறைமுகத்தில் கோலாகலமாக யுவராஜாவின் கப்பல் புறப்பட்டது.

இத்தாலி, வாடிகன், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இங்கிலாந்து எல்லாவற்றையும் கப்பலிலேயேக் கடந்தனர்.

வசுந்தராவின் குரல் உப்புக் காற்றையும் இனிக்கச் செய்தது. ஓய்வற்ற இசைக் கச்சேரிகளைக் கேட்டு, யுவராஜாவின் பொன்னான பொழுது புதிதாகக் கழிந்தது.

இரண்டாம் உலகப் போர் வெடிக்கும் வரையில் திகட்டாமல் அவர்களின் பிரயாணம் தொடர்ந்தது.

சிற்றரசருடனான ‘ஐரோப்பிய விஜயம்’ குறித்து, சிறப்பு மலர் வெளியானது. அதில் திருமதி வசுந்தரா ராமனின் கட்டுரையும், வசுந்தரா - வைஜெயந்தி மாலா இருவரின் நிழற்படங்களும் இடம் பெற்றன.

சினிமா விடாது துரத்தியது வசுந்தராவை. ராமனின் சுற்றத்தார் இம்முறையும் எதிர்த்தனர். அம்மா யதுகிரி வீரியத்துடன் பெண்ணுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.

‘ரிஷ்யசிங்கர்’ படம் மூலம் பெருமையுடன் வசுந்தராதேவியை வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு டாக்கீஸ். இயக்கம் ஆச்சார்யா.

முதன் முதலாக ஹீரோ வேடம் ஏற்றார் ரஞ்சன். 1941 ஆகஸ்டு 2ல் ரிலிசானது.

ரிஷ்யசிங்கரை மயக்கும் ‘ராஜநர்த்தகி’யாக வசுந்தரா...! ரஞ்சனுக்கு வீசிய மோக வலையில் வயது வித்தியாசமின்றி சகலரும் வீழ்ந்தார்கள்.

சினிமாவில் போதிய முன் அனுபவம், நாடகப் பின்புலம் ஏதுமின்றி திறமையின் ஏணியில் வசுந்தரா பிரகாசித்தார்.

‘சிறிதும் கவலைப்படாதே’ என்று கரகரப்ரியா ராகத்தில் காதலாகப் பாடி, கவர்ச்சியாக ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

1943ல் தமிழகத்தின் தலைநகரில் ஜப்பான் குண்டு வீச்சு. உயிர் பயத்தில் சொந்த ஊருக்குத் தஞ்சம் புகுந்தனர் மதராஸிகள்.

Story image

‘மங்கம்மா சபதம்’ ஓடிய தியேட்டர்களில் மாத்திரம், ஒட்டு மொத்த ஜனங்களையும் ஒரே கூரையின் கீழ் ஜீவனோடு பார்க்க முடிந்தது.

நாயகன் - அழகிகளை அடிமைப்படுத்தி ஆனந்தம் காணும் அயோக்கியன். மங்கம்மாவுக்கும் வலுக்கட்டாயமாக மாலையிடுகிறான்.

‘தேகம் தீண்டாமலே உன்னை வாழாவெட்டியாக்குகிறேன்’ என்று கொடூரமாகக் கொக்கரிக்கிறான்.

‘ உன் மூலமாகவே ஒரு மகனைப் பெற்றுப் பழி தீர்க்கிறேன்’ என்று மங்கம்மா சத்தியம் செய்கிறாள். அதில் வெற்றியும் காண்கிறாள்.

நயவஞ்சகத் தந்தையாகவும், நல்ல மகனாகவும் இரு வேடங்களில் ரஞ்சன் ரசிகர்களைக் கவர்ந்தார்.

யுத்த பேரிகைகள் இடை விடாமல் முழங்கிய நெருக்கடி. ‘மங்கம்மா - வசுந்தராதேவி’ யின் நவரஸ பாவனைகளே தமிழர்களுக்கு ஒரே டானிக்!

‘ஐயய்யய்யே... சொல்ல வெட்கமாகுதே’ என்கிற பாடலில் வசுந்தராவின் ஆட்டம் வெகு ஜோராக இருந்ததாம். இளசுகளை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியதாம்.

வசுந்தரா, மற்றும் தமிழ் சினிமாவின் அந்தஸ்தை எவரெஸ்ட்டுக்குக் கொண்டு சென்றது ஜெமினியின் மங்கம்மா சபதம்.

அந்த ஒரே படத்தின் மூலம் வசுந்தரா அன்று அடைந்த உச்சக்கட்டப் புகழை, மற்றப் பிரபலங்கள் நெருங்கப் பல ஆண்டுகள் பிடித்தது.

மகளுக்கும் கலை மகுடம் சூட்ட விரும்பி, வழூவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் கற்க அனுப்பினார் வசுந்தரா. 1946ல் பதிமூன்று வயதில் வைஜெயந்தி மாலாவின் நாட்டிய அரங்கேற்றம், ஊர் மெச்சும் விதமாக வீட்டிலேயே நடந்தது.

முதல் மேடையிலேயே சுழன்று சுழன்று ஆடி, சுடர் விட்டுப் பிரகாசித்தன வைஜெயந்தி மாலாவின் மருதாணிப் பாதங்கள்.

வசுந்தராவின் நடிப்பில் 1946ல் உதயணன்-வாசவதத்தை, 1949ல் ‘நாட்டியராணி’ போன்று ஓரிரு படங்கள் வெளி வந்தன.

கணவரோடு ஏற்பட்டக் கருத்து வேறுபாடுகள் பிரிவை உண்டாக்கின.

‘தீபாவளி’ என்ற பெயரில் சொந்தப்படம் தயாரிக்கத் தொடங்கினார் வசுந்தரா. அதன் ஷூட்டிங்குக்காக அடிக்கடி பம்பாய் பயணம் வேறு.

அதைப் பயன்படுத்திக் கொண்டனர் மாமியார் யதுகிரியும், மாப்பிள்ளை எம்.டி. ராமனும். மகள் வைஜெயந்தி மாலாவைத் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள்.

வைஜெயந்தி மாலா குறித்த வழக்கு கோர்ட்டுக்குப் போனது. 1950 செப்டம்பர் 20.

‘மகளுக்கு கார்டியன் தந்தை எம்.டி. ராமன் ’ என்று, தீர்ப்பு யதுகிரி பாட்டிக்குச் சாதகமாக வந்தது.

பெற்ற குழந்தையை உயிரோடு பிரிய வேண்டிய வேதனை வசுந்தராவுக்கு. விளைவு அவரைத் திரையில் காண முடியாமல் போனது.

இடையில் எவரும் எதிர்பாராத விதத்தில், வைஜெயந்தி மாலாவை, ஏவி.எம். தனது படத்தில் நடிக்க அழைத்தது.

‘கல்லூரி மாணவி மோகனா’வாக முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் வைஜெயந்தி மாலா. அவரது ‘வாழ்க்கை’ அனுபவங்கள்:

‘ அப்ப நான் குட் ஷெப்பர்டு கான்வெண்ட்ல படிச்சிட்டிருந்தேன். சினிமா பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாது.

ஏவி.எம்.மில் இயக்குநராகப் பணியாற்றிய எம்.வி.ராமன் சாருக்கு, எங்க குடும்பத்தோட நல்ல நட்பு உண்டு.சின்னக் குழந்தையில் இருந்தே என்னைத் தெரியும்.

பார்க்கறப்பலாம் அன்போட பாப்பாம்மா... பாப்புக்குட்டின்னு கொஞ்சுவார். பாட்டி சைட்ல நான் நடிக்க அப்ஜெக்ஷன் வந்திருக்கு.

ஆனா ராமன் சார் விடல. உங்க பேத்திக்கு காலேஜ் கேர்ள் ரோல்தான்னு கன்வின்ஸ் பண்ணி, ஒரு வழியா ஒப்புதல் வாங்கிட்டாங்க.

படிப்பு அது பாட்டுக்கு இருக்க, படப்பிடிப்புக்குச் சென்றேன். தினமும் ரிகர்சல்ல ராமன் சார் கூடவே இருப்பார். அதனால் சினிமாப் பயிற்சி என்னை அந்நியப்படுத்தல.

எங்க குடும்பத்தில் ஒருத்தர் மாதிரி ராமன் சார். எந்த சந்தேகம்னாலும் ஒரு குழந்தைக்கு, அப்பா விளக்கற மாதிரிச் சொல்லித் தந்தார்.

அப்படி அமைஞ்சதால முதல் நாள் காமிரா முன்னால நின்ற போது எனக்குப் பயம் கொஞ்சமும் இல்ல. ஷூட்டிங் போறப்போ, அப்பாவும் பாட்டியும் என் கூடவே வருவாங்க.

நடிப்பு என்றால் என்ன...? எதை எப்படிச் செய்தால் சரியாக இருக்கும் என்று சொல்லித் தருவார்கள். அதை மட்டுமே செய்தேன்.

‘ஏவி.எம். அவர்கள் எப்போதாவது ஒரு முறைதான் செட்டுக்குள் வருவார். ஆனால் எப்போதும் அங்கேயே இருப்பது போன்ற ஆளுமையைப் படர விட்டிருந்தார். ’

வாழ்க்கை பெரிய வெற்றி அடைந்தது. அந்த அளவுக்கு ஓடும் என்று நான் நினைக்கவில்லை. அதை விட அதில் நடித்த ஒரே காரணத்துக்காக, எனக்கு வந்து சேர்ந்த பாராட்டைக் கண்டு பிரமித்து விட்டேன்.

ஸ்டார் அந்தஸ்து என்னை சினிமாவைத் தொடரச் செய்தது.

வாழ்க்கை படத்தைத் தெலுங்கு, இந்தியிலயும் ஏவி.எம். எடுத்தாங்க. அப்பாவுக்கு தெலுங்கு அத்துபடி. அதனால அப்பா மூலமா தெலுங்கும் எனக்குள்ள இயல்பாயிட்டது. ராமன் சார் டைரக்ஷன்ல ஆந்திரால ‘ஜீவிதமும்’ 100 நாள் போச்சு.

நான் கான்வெண்ட்ல படிச்சதால எனக்கு இந்தியும் சரளமாகப் பேச வரும். அதை டெவலப் பண்ண விரும்பி இந்தி பிரசார சபாவிலும் கத்துக்கிட்டேன்.

அந்தப் பயிற்சி எனக்கு பஹார்ல நடிக்க உதவியா இருந்துச்சு. ஆனாலும் ஏவி.எம்ல, டயலாக் கோச் கொடுத்தாங்க.

பஹார் சூப்பர் ஹிட்டாகி ஓடவே ஓவர் நைட்ல ஆல் இண்டியா ஸ்டார் ஆயிட்டேன். ’ வைஜெயந்தி மாலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.