இப்போது லீ சிங்கப்பூர் பிரதமர். உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்தன. துங்கு பத்திரிகைகளுக்கு விடுத்த சேதி விசித்திரச் சேதி. அவருக்கு லீமேல் இருந்த வெறுப்பை வெளிப்படுத்தியது. ‘PAP –ன் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதுதான். எதிர்க்கட்சிகள் துண்டுபட்டிருந்தார்கள். பலமான எதிர்ப்புத் தரவில்லை. மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், என் நண்பர் லிம் யூ ஹாக் ஜெயித்திருக்கிறார். அவர் இந்த அரசாங்கத்துக்குப் பலமான எதிர்க்கட்சியாக இருப்பார்.’ இது வாழ்த்தா, சாபமா? துங்குவிடம்தான் கேட்கவேண்டும்.
பதவி ஏற்பு விழாவுக்கு முன், நல்லெண்ண நடவடிக்கையாக, அரசியல் கைதிகளை லீ விடுதலை செய்தார். (இவர்களுள் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட்கள்). விழாவில் லீயும், 9 அமைச்சர்களும் பதவி ஏற்றார்கள். அத்தனை பேரும், பளிச் வெள்ளை உடையில். ஊழல் இல்லாத ஆட்சி தரப்போகிறோம் என்று லீ காட்டிய சமிக்ஞை.

லீ மக்களிடம் பேசினார், ‘நாம் புதிய அத்தியாயம் தொடங்குகிறோம்.... நம்முடைய விடுதலைக்கும், மலாயாவோடு இணைப்புக்கும் முதல் அடி எடுத்துவைக்கிறோம். நல்ல விஷயங்கள் வானத்திலிருந்து மடியில் வந்து விழுவதில்லை. அரசாங்கத்தின் முயற்சிகளை மக்கள் தொடர்ந்து ஆதரித்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும்....பெரும்பாலானவர்களின் நன்மைக்காக, ஒரு சிலரைப் பாதிக்கும் முடிவுகளை அரசு எடுக்க வேண்டிவரலாம். ஒட்டுமொத்த சிங்கப்பூர் சமுதாயத்தின் நன்மையே முக்கியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுவோம்.’
லீ நிதி அமைச்சரிடம் அரசாங்கத்தின் கையிருப்பை ஆராயச் சொன்னார். முந்தைய அரசின் நடப்பு, வரவு எட்டணா, செலவு பத்தணா. இன்று நிலைமை துந்தணா. PAP அமைச்சர்களும் பழைய பாணியிலேயே பயணித்தார்கள். அலுவலகங்களில் ஆடம்பர வசதிகள், சுற்றுப் பயணம் போனால் அரசு செலவில் புடைசூழும் பரிவாரங்கள், மக்கள் கைத்தட்டல் வாங்குவதற்காக இலவசங்கள் எனப் பணத்தைக் கரியாக்கினார்கள். இது தொடர்ந்தால் சிங்கப்பூரே சீக்கிரத்தில் திவாலாகிவிடும். லீயின் ஆக்ஷன் ஆரம்பம்
வீண் செலவுகள் அத்தனையும் வெட்டப்பட்டன. அமைச்சர்கள் தங்கள் அலுவலகங்கள், அரசுப் பணிகள், சுற்றுப் பயணங்கள் ஆகியவற்றுக்குச் செலவிட வேண்டுமானால், நிதி அமைச்சரிடம் முன் அனுமதி வாங்கவேண்டும். தான்தோன்றியாகச் செலவிட்டால், அரசு பணம் தராது.
அரசு ஊழியர்களின் சம்பளம் முக்கிய செலவு ஐட்டம். அதைக் குறைக்கவேண்டும். உபதேசம் செய்யும் முன்னால், மந்திரிகள் முன்னோடியாக இருக்கவேண்டாமா? அமைச்சர்களின் ஊதியத்தை 15 சதவிகிதம் குறைத்தார். அதிகாரிகளுக்குப் புதிய கார்கள், வெளிநாட்டுப் படிப்பு, பயிற்சி ஆகியவை கால வரையறையின்றி நிறுத்தப்பட்டன. மொத்தம் 14,000 அரசு ஊழியர்கள் இருந்தார்கள். கீழ், மத்திய நிலையில் இருந்த 8,000 ஊழியர்களின் சம்பளத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. உயர்மட்ட 6,000 அதிகாரிகளின் அலவுன்சுகள் குறைக்கப்பட்டன. எதிர்த்தார்கள். இது நாட்டின் வாழ்வா, சாவா பிரச்சனை. ஆகவே, லீ இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டார் – இந்தச் சிறு தியாகத்தை அதிகாரிகள் நாட்டுக்காகச் செய்தேயாகவேண்டும். ஒரு வருடத்தில் நாட்டின் நிதிநிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. .
தன் அமைச்சர்களுக்கு அதிகார போதை வந்துவிடக்கூடாது, தாங்கள் சாமான்னியர்கள் என்பதை மறந்துவிடவே கூடாது என்பதில் லீ குறியாக இருந்தார். அதே சமயம், மக்கள் மனங்களில் சுகாதாரத்தின் அவசியத்தைப் புரியவைத்து, குப்பை கூளங்கள் நிறைந்த நாட்டைச் சிங்காரச் சிங்கப்பூராக்கும் வெறி. இரண்டு மாங்காய்களை ஒரே கல்லில் வீழ்த்தும் திட்டம். நாட்டைச் சுகாதாரப்படுத்தும் திட்டம் தொடங்கினார். அமைச்சர்கள் கடற்கரை, தெருக்கள் ஆகிய பொது இடங்களைச் சுத்தம் செய்யத் தொடங்கினார்கள். லீயே வழி காட்டினார். கையில் துடைப்பத்தோடு முக்கிய வீதியொன்றைத் துப்புரவாக்கினார்.

லீயின் மனம் வானத்தில் பறந்துகொண்டிருந்த அதே சமயம், கால் புதைகுழியில். பொருளாதாரம், வீட்டு வசதிகள், சுத்தம், சுகாதாரம், கல்வி, தொழில் என அத்தனையும் சிதிலத்தில். ஒவ்வொன்றாகத் தீர்வுகாண நேரமில்லை. அத்தனையும் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனைகள்.
மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாகத் தேர்தல் வாக்குறுதி தந்திருந்தாரே? சொன்னதைச் செய்யும் இந்த மாமனிதர் செயலிழந்து கிடந்த சிங்கப்பூர் மேம்பாட்டுப் பொறுப்பாட்சியைக் கலைத்தார். அதன் இடத்தில், ஹவுஸிங் டெவலப்மென்ட் போர்ட் வந்தது.
பெயர் மாற்றம் மட்டுமல்ல, அடிதடிச் செயல் மாற்றம். லீயே, போர்டின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தார். 5 வருடத் திட்டம் தீட்டப்பட்டு, கட்டுமானப் பணிகள் போர்க்கால வேகத்தில் முடுக்கிவிடப்பட்டன. இந்தப் பணிக்கு அரசியல்வாதியைவிட பிசினஸ்மேன்தான் தகுதியானவர் என்று முடிவெடுத்தார். லிம் கிம் ஸான் (Lim Kim San) என்னும் வெற்றிகரமான தொழிலதிபரைத் தலைவராக்கினார். சில அமைச்சர்கள் லிம் செயல்பாட்டில் தலையிட்டார்கள். இந்த இடையூறுகளை விலக்கி, அவர் சுதந்திரமாகச் செயல்படச் செய்தார். பிற அமைச்சர்களுக்கும் இது பாடமானது. அரசியல் தலையீடு இல்லாத நல்லாட்சிக்கு வழி காட்டியது.
லிம் தன் அபாரத் திறமையை விரைவிலேயே நிரூபித்தார். அவர் பொறுப்பேற்று ஏழே மாதங்கள். குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து. 30,000 பேரின் குடிசைகள் எரிந்து சாம்பலாயின. பத்தே மாதங்களில் 768 ஒரு அறைக் குடியிருப்புகள் கட்டி முடித்தார் லிம். வீடிழந்த அத்தனை குடும்பங்களையும் கரையேற்றினார்.
தினம் ஒரு முன்னேற்றம் என்று கொள்கை வைத்துக்கொண்டிருப்பதுபோல், பல்வேறு துறைகளில் லீயின் கனவுகள் செயல்திட்டங்களாக மலர்ந்தன.
மக்கள்தொகைப் பெருக்கத்துக்குக் கடிவாளம்போட, குடும்பக் கட்டுப்பாடு.
சீன மொழியில் கல்வி கற்பித்த நான்யங் பல்கலைக் கழக (Nanyang University) மாணவர்களுக்கு அரசு வேலைகளில் வாய்ப்புக் கதவுகள் முதன் முறையாகத் திறப்பு.
என எத்தனை எத்தனையோ?
எந்த நாட்டுக்கும், ஊழல் உயிர்க்கொல்லி நோய் என்று லீ நினைத்தார். ஊழலைச் சிங்கப்பூரிலிருந்து ஒழித்துக்கட்டுவது அவர் குறிக்கோள். லஞ்சம் என்பது தடுக்கமுடியாத சமாச்சாரம் என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். இது அழிவுப்பாதையின் ஆரம்பம். தானே சாட்டையைக் கையில் எடுத்து, ஈவு இரக்கமில்லாமல் லீ சொடுக்கத் தொடங்கினார். முன்பு ஆண்ட பிரிட்டீஷ்காரர்களும், ஊழல் நாட்டை ஊடுருவியிருப்பதை உணர்ந்திருந்தார்கள். 1952 – இலேயே, ஊழல் நடவடிக்கைகள் விசாரணை பீரோ (Corrupt Practices Investigation Bureau) என்னும் அமைப்பை நிறுவியிருந்தார்கள். நிஜத்தில் இது கண் துடைப்பு வேலை. சில்லறை லஞ்சம் வாங்கியவர்களைத் தண்டித்தது: அரசு கஜானாவைக் காலி செய்து, தங்கள் வங்கிக் கணக்குகளை நிரப்பிய பெருச்சாளிகளைத் தொடர்ந்து கொள்ளையடிக்கவிட்டது. நெற்றிக்கணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கறை படிந்த அத்தனை கரங்களையும், எரிதழல் கொண்டு வா, அவர்கள் கைகளை எரித்திடுவோம் என்று எழுச்சியோடு லீ புறப்பட்டார். ஊழல்கள் தடுப்பு பீரோவை லீ தன் நேரடி நிர்வாகத்தில் வைத்துக்கொண்டார். புகார்கள் உடனடி விசாரிக்கப்பட்டன. தடாலடித் தண்டனைகள். லஞ்சம் வாங்கினால் தொலைந்தோம் என்னும் பயம் அரசு ஊழியர்கள் மனங்களில் வந்தது. இதுதானே, ஊழல் ஒழிப்பின் முதற்படி?
சும்மா இருப்பவர் மனங்கள் சாத்தானின் தொழிற்சாலைகள் என்று லீ நம்பினார். மக்கள் மனங்களை, குறிப்பாக இளைஞர் மனங்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் திருப்பிவிட்டால், நாட்டில் குற்றங்கள், வன்முறை குறையும். மக்கள் சங்கம் (Peoples Association) என்னும் அரசாங்க அமைப்பு உருவாக்கினார். நாட்டின் அனைத்து இசை, நடன, ஓவிய, சமையல் பள்ளிகள், சங்கங்கள், கிளப்கள், பொழுதுபோக்கு அமைப்புக்கள், விளையாட்டுச் சங்கங்கள் மக்கள் சங்கத்தில் சேர்ந்தாகவேண்டும். இந்த மக்கள் சங்கம், நாடு முழுக்க 100 சமுதாயக்கூடங்கள் திறந்தது. இவை அறிவுத்தேடல், பொழுதுபோக்கு ஆகிய இரண்டுக்கும் மையங்களாக வடிவமைக்கப்பட்டன. டேபிள் டென்னிஸ், செஸ் போன்ற விளையாட்டுக்கள், ரேடியோ, ஃப்ரிஜ் ரிப்பேர் ஆகியவை இங்கு கற்றுக்கொடுக்கப்பட்டன.
உழைப்பாளர் அணி (Works Brigade) என்னும் அமைப்பை உருவாக்கினார். இவர்கள் அனைவரும் ராணுவ உடை பாணியில் சீருடை அணியவேண்டும். வசதிகள் குறைவான கூடாரங்களில் தங்கவேண்டும். விவசாயம், ரோடு போடுதல், வீடுகள் கட்டுதல் ஆகிய பயிற்சிகள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. இவை பொழுதுபோக்குகள் அல்ல, கட்டுப்பாடு, செய்யும் தொழித் தெய்வமாக மதிக்கும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை இளைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கும் கட்டாயப் பயிற்சி. ஏழை, பணக்காரன், குடும்பப் பின்புலம் என்கிற எந்த வித்தியாசமும் இல்லாமல், அத்தனை சிங்கப்பூர் இளைஞனுக்கும் நடந்த பட்டை தீட்டல், ஒவ்வொருவரையும் புடம்போட்ட தங்கமாக்கும் அக்னிப் பிரவேசம்.
லீ நெஞ்சுக்கு நெருக்கமாக இருந்த சமாச்சாரம், பெண்கள் முன்னேற்றம். வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்னும் விந்தை மனிதர்களைத் தலைகவிழ வைக்கவேண்டும், என்பதில் லீ உறுதியாக இருந்தார். ‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவேண்டும்: எட்டுமறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லையென்று காட்டவேண்டும்.’ உத்வேகத்தோடு பெண்களுக்காக உரிமைக்குரல் எழுப்ப ஒரு முன்னோடி, ஒரு புதுமைப் பெண் PAP கட்சியில் வேண்டும். லீ தேடினார் கிடைக்கவில்லை. சில கட்சி நண்பர்கள், இந்தப் பணிக்கு ஏற்றவர், அவர் மனைவி சூ மட்டுமே என்று அடித்துச் சொன்னார்கள். அரைகுறை மனத்தோடு (!!!!!!) லீ சம்மதித்தார்.
மலாய் வானொலியில் சூ முழங்கினார், ‘சமுதாய, அரசியல், பொருளாதார ரீதியில் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்வானவர்கள் என்னும் அனுமான அடிப்படையில் நம் சமுதாயம் எழுப்பப்பட்டிருக்கிறது. பெண்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காகத்தான் இந்த மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது....அடுத்த தேர்தலில் PAP கட்சி பெண் வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்தும். எதிர்க்கட்சிகளின் பொம்மலாட்டங்களையும், கேலிக்கூத்துக்களையும் பார்த்துப் பார்த்துச் சிங்கப்பூர்ப் பெண்களுக்கு வெறுப்புத் தட்டிவிட்டது என்று காட்டுவோம். PAP மட்டும்தான் தன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் லட்சியப் பிடிப்பு, நேர்மை, திறமை கொண்ட ஒரே கட்சி.” மனைவி என்ற தகுதியில் சூ இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கலாம், ஆனால், அவர் தனக்குக் கொடுத்த பணியைக் கனகச்சிதமாக முடித்துக் காட்டியது எதிரிகளும் ஒத்துக்கொண்ட நிஜம்.
PAP வெறும் வாய்ப்பேச்சுக் கட்சியல்ல, சொன்னதைச் செய்பவர்கள் என்பதை நிரூபிக்க, பெண்கள் உரிமைச் சாசனம் (Womens’ Charter) நிறைவேற்றப்பட்டது. முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒன்றுக்குமேல் திருமணம் செய்துகொள்வது சட்ட விரோதமானது.
சூதாட்டம், போதை மருந்துகள் விற்பனை, கஞ்சா புகைத்தல், சின்ன வீடு,
ஆடை அவிழ்ப்பு நடன விடுதிகள், லஞ்சம் கொடுத்தல், வாங்குதல், ஏன், ஆபாசப் பாட்டுக்கள்கூடத் தடை செய்யப்பட்டன.
கல்விதான். வளமான நாடு என்னும் மாளிகையைத் தாங்கிப் பிடிக்கும் தூண் என்பது லீயின் உறுதியான நம்பிக்கை. சிங்கப்பூர்க் குழந்தைகள் அனைவரும், ஒருவர் பாக்கியில்லாமல், பள்ளிப்படிப்பு பெற்றாக வேண்டுமென்பதில் குறியாக இருந்தார். லீயின் கல்வி அமைச்சர், நண்பர், பசைத் தொழில் பங்காளி, உறவுமுறை மச்சான், சூவின் அண்ணன் யாங் சுக் லின் (Yong Chuk Lin) இதை நடத்திக்காட்டினார். நாட்டில் பிறப்பு விகிதம் 4 சதவிகிதம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் குழந்தைகள் எண்ணிக்கை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்குப் பள்ளிக்கூடங்கள் திறக்க அரசிடம் பணமில்லை. அரசாங்கம் பள்ளி நேரங்களை மாற்றியது. காலையில் ஒரு ஷிஃப்ட்: மதியம் இரண்டாம் ஷிஃப்ட். மாணவர்கள் சேர்க்கை இரண்டு மடங்கானது. ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் தரப்பட்டு, அவர்கள் திறமைகள் மெருகேற்றப்பட்டன.
சிங்கப்பூரின் இன்னோரு வியாதி தொழிலாளர் பிரச்சனை. நினைத்தபோதெல்லாம், சில்லறைக் காரணங்களுக்காக வேலை நிறுத்தங்கள் செய்தார்கள். லீ இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்தப் பிரச்சனைகளைச் சமாளிக்க அண்டை நாடுகளில் என்ன செய்கிறார்கள் என்று கவனித்தார். ஆஸ்திரேலியாவில் முதலாளி – தொழிலாளி உறவுகள் சுமுகமாக இருந்தன. அவர்கள் கடைப்பிடித்த வழி, நடுவர் தீர்ப்பு முறை. (Arbitration). லீ ஆஸ்திரேலியா தொழிலாளர் நல அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளராக இருந்த ஹாரி பிளான்ட் (Harry Bland) என்பவரை ஆலோசகராக அழைத்துவந்தார். அவர் வழிகாட்டலில், சிங்கப்பூர் நடுவர் தீர்ப்பு மன்றம் பிறந்தது. இதன்படி, எந்த யூனியன் வேலை நிறுத்தம் செய்தாலும், தொழில் அமைச்சர் ஸ்டிரைக்கைத் தடை செய்து, தகராறை மன்றத்துக்கு அனுப்பிவைக்கலாம். மன்றம் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அப்பீல் கிடையவே கிடையாது.
லீ அலங்காரப் பிரதமரல்ல. அத்தனை அமைச்சகங்களின் விவரங்களும், நுணுக்கங்களும் தெரிந்தால்தான் தன்னால் நல்லாட்சி நடத்தமுடியும், நாடு பற்றிய தன் கனவுகளை நனவுகளாக்க முடியும் என்று நம்பியவர். ஆகவே, ஒவ்வொரு அமைச்சரகத்திலும், அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்தார். துருவித் துருவி விவரங்கள் கேட்டார். சில மாதங்களில், நாட்டின் நாடித் துடிப்புக்கள் முழுக்க லீ கை விரல்களில்.
சிங்கப்பூருக்குத் தனித்துவம் உருவாக்கவேண்டும், சுதந்திர நாடாக அடையாளம் பதிக்கவேண்டும். அதற்குத் தேவை தேசீயக் கொடி. அதை வடிவமைப்பதில்தான் எத்தனை பிரச்சனைகள்? சீனர்களுக்குச் சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தின் அடையாளம். சீன தேசியக் கொடியில் 5 மஞ்சள் நட்சத்திரங்கள். இந்தப் பாதிப்புக்களால், மஞ்சள் நட்சத்திரங்கள் கொண்ட சிவப்புக் கொடி கேட்டார்கள். மலாய்கள் தேர்வு, தைரியத்தின் அடையாளமான சிவப்பு, தூய்மையைக் குறிக்கும் வெண்மை ஆகிய இரண்டும் கொண்ட சிவப்பு-வெள்ளை இருவண்ணக் கொடி, அதில் இஸ்லாமிய அடையாளமான பிறைச் சந்திரன்.

லீ இரு இனத்தவரோடும் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். சீன, மலாய்களைத் திருப்திப்படுத்தும் கொடி முடிவானது – மேலே சிவப்பு, கீழே வெள்ளை என இரு வண்ணக் கொடி. சிவப்புப் பகுதியில் பிறைச் சந்திரன், ஐந்து நட்சத்திரங்கள். இந்த ஐந்து நட்சத்திரங்களும், ஜனநாயகம், அமைதி,முன்னேற்றம், நீதி, சமத்துவம் என்னும் நாட்டின் ஐந்து லட்சியங்களைக் குறிப்பவை.
இதுவரை பறந்துகொண்டிருந்த இங்கிலாந்து அரசின் யூனியன் ஜாக் கொடி கீழே இறங்கியது. சிங்கப்பூரின் புதுக் கொடி பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது.
கொடிக்கு அடுத்து, தேசிய கீதம். ஹாஜி ஸுபீர் செயித் (Haji Zubir Said) என்னும் மலாய் இசையமைப்பாளர் எழுதி, இசை வடிவம் தந்த பாடல். மலாய் மொழியிலும், ஆட்சி மொழிகளான மான்டரின் சீனம், தமிழ், ஆங்கிலம் என்னும் நான்கு மொழிகளிலும் பாடலாம். அதிகார பூர்வமான தமிழ் மொழிபெயர்ப்பு இதோ:
சிங்கப்பூர் மக்கள் நாம்
செல்வோம் மகிழ்வை நோக்கியே
சிங்கப்பூரின் வெற்றிதான்
சிறந்த நம் நாட்டமே.ஒன்றிணைவோம் அனைவரும்
ஓங்கிடும் புத்துணர்வுடன்
முழுங்குவோம் ஒன்றித்தே
முன்னேறட்டும் சிங்கப்பூர்
முன்னேறட்டும் சிங்கப்பூர்.
ஒன்றிணைவோம் அனைவரும்

பல நாடுகளில் அரசாங்கச் சின்னம் வைத்துக்கொள்வார்கள். இதை, மரபுரிமைச் சின்னம் கொண்ட மேலங்கி (Coat of Arms) என்று சொல்வார்கள். லீ சிங்கப்பூருக்கும் இத்தகைய தனிச் சின்னம் கொண்டுவந்தார். சிவப்பு நிறக் கேடயம். அதில் வெள்ளை நிறத்தில், தேசியக் கொடிபோல் வெள்ளை நிறத்தில் ஒரு பிறைச் சந்திரன், ஐந்து நட்சத்திரங்கள். கேடயத்தைத் தாங்கிப் பிடித்தபடி இடப்புறம் சிங்கம், வலப்புறம் புலி. இரண்டும் சிரித்தபடி. சிங்கம், சிங்கப்பூர். புலி மலாயாவுடன் இருக்கும் பாரம்பரிய உறவுகளை உணர்த்த. கீழே, மஜுலா சிங்கப்பூரா என்னும் மலாயா மொழி வாசகம் – முன்னேறட்டும் சிங்கப்பூர் என்று அர்த்தம்.
கொடி, தேசிய கீதம், நாட்டுச் சின்னம் என ஒவ்வொரு அம்சத்திலும், மலாய், சீனர்கள், தமிழர்கள் என்னும் நாட்டின் முக்கிய மூன்று இனத்தவரையும் கட்டியணைத்துப்போகும் மனப்போக்கை, அண்டைய மலாயாவோடு சகோதரத்துவத்தோடு வாழும் ஆசையை, கொடி, தேசிய கீதம், நாட்டுச் சின்னம் என ஒவ்வொரு அம்சத்திலும் லீ காட்டினார். இதுதான் லீ! இது அவர் கண்ட மாபெரும் வெற்றிகளின் ஒரு ரகசியம்.
சுதந்திர சிங்கப்பூருக்கு லீ பலமான அடித்தளம் போட்டுவிட்டார். எழப்போகிறது பிரம்மாண்ட மாளிகை. வரப்போகின்றன பல தடைகள். எப்படி லீ எதிர்கொள்ளப்போகிறார்? பார்ப்போம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராஜா ராணி போல் உருவாகும் ஆர்யா - 40!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

