ழு விவாதத்தில், ஒரு தலைப்பு கொடுத்தால், அதனைப்பற்றி விளக்கம் கேட்பது தவறில்லை. ஆனால், எல்லாம் தெரிந்தது போலவோ, அல்லது ஒன்றுமே தெரியாதது போலவோ நடந்துகொண்டால், நிச்சயம் அந்தக் குழு விவாதம்தான், அந்த நிறுவனத்தில் நமது கடைசி வருகையாக இருக்கும்.
சென்ற வாரம் சொன்னதுபோல், இப்படி அனாவசியமாகக் கேள்வி கேட்பவரை, புரிதலுக்காகக் கேட்கிறார் என்று நினைப்பதை விட, தான் ரொம்ப உஷாரானவர் என்று காட்டிக்கொள்வதற்காகக் கேட்கிறார் என்றுதான் நிறுவனம் நினைக்கும். அதனால்தான் அவர் குழு விவாதத்துக்கு மாற்றச் சொன்ன தலைப்பாக, இவரை வேலைக்கு எடுத்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை வைத்து, விவாதம் செய்ய வைத்துவிடுவார்கள்.ஆக, நமது சமூகப் புரிதலையும், மனிதர்களை எப்படிக் கையாள்கிறோம் என்பதையும் மிக எளிதாகத் தெரிந்துகொள்ள இந்தக் குழு விவாதத்தை நிறுவனங்கள் நடத்துகின்றன.
நாம் நமது வேலையையும், அதன் தன்மையையும் தெரிந்துகொண்டால் போதாதா?
நான் நன்றாகப் படித்திருக்கிறேன். என் பாடங்களைப்பற்றி எனக்கு ஆழ்ந்த அறிவு இருக்கிறது. இந்தத் துறையில் எனக்கு சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய இது போதாதா? என்றுதான் தோன்றும்.அதற்கு நிறுவனங்கள் சொல்லும் பதில் இதுதான் : போதாது!
அது ஒரு உணவு விடுதி. அங்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையை நிர்ணயித்திருக்கிறார்கள்.
அங்கு புதிதாக ஒருவர் வேலைக்குச் சேர்கிறார். அவருக்கு இலை எடுக்கும் வேலை கொடுக்கிறார்கள். வாடிக்கையாளர் சாப்பிட வரும்போது, அவர் அமரும் மேசை சுத்தம் செய்யப்படும். அடுத்து ஒருவர் வந்து, தண்ணீர் வைப்பார். இன்னொருவர் இலை போடுவார். அடுத்தவர் இலைக்கு தண்ணீர் தெளிப்பார். மற்றொருவர் உணவு பரிமாறுவார். கடைசியாக நம் ஆள் இலையை எடுக்கவேண்டும்.
ஆனால், இவர் கையில் இலையை எடுப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் எடுத்தார். அங்கிருக்கும் அனைத்து மேசைகளிலும் இருக்கும் இலைகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டே சென்றார். அதாவது, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஒருவரிடம் சென்று,
'சார்! கொஞ்சம் கையை எடுங்க ! நான் இலையை எடுக்கணும்! ' என்று சொல்லிவிட்டு, அவர் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன், இலையை எடுத்து தனக்கான வாளியில் போட்டுக்கொண்டு புன்னகையுடன் சென்றார். அந்த இலையில் வாடிக்கையாளர் இன்னும் சாப்பிட்டு முடிக்கவில்லை என்பதை நினைவில் கொள்க!
உடனே அனைத்து வாடிக்கையாளர்களும் புகார் செய்கிறார்கள். முதலாளி அழைத்துக் கேட்கிறார்.
இவரும் சாந்தமாக பதில் சொன்னார் ! :' என் வேலை இலை எடுக்குறது, அதை சரியா செஞ்சேன். அதுக்கு ஏன் சார் திட்டுறீங்க? அதுவும் நீங்க சொன்னதைத்தான் செஞ்சேன்' என்று இன்னும் கொதிப்படைய வைத்தார்.
நான் என்னய்யா சொன்னேன் என்று மொதலாளி கேட்க!
காலையில வேலைக்குச் சேரும்போது என்ன சொன்னீங்க? நினைச்சுப் பாருங்க!
அவர் நினைத்துப்பார்த்தார் : 'தம்பி! உன் வேலையை நீ சரியாப் பாக்கணும். நான் பாக்கும் போது ஒரு இலைகூட என் கண்ணில் படக்கூடாது. எல்லா மேசையும் சுத்தமா இருக்கணும்.’
இதுதான் முதலாளி சொன்னது!

அடப்பாவி! நான் சொன்னது, சாப்பிட்டு முடித்த இலையை! நீ எடுத்தது சாப்பிட்டுக்கொண்டிருந்த இலையை!
அப்படி நீங்க சொல்லலையே? என்றார் நம்மவர்!
இதில் இரண்டு விஷயங்கள் விளங்குகின்றன.
ஒன்று : நிறுவனம் சொல்வதை ஒரு ஊழியர் எப்படிப் புரிந்துகொள்கிறார்.
இரண்டு : அணியுடன் வேலை செய்வதுதான் பலன் தரும். தன் வேலையை சரியாகப் பார்த்துவிட்டதாக நினைத்துவிட முடியாது.
இங்கு, நாம் தனியாக எந்த ஒரு வேலையையும் செய்துவிடப்போவதில்லை. நாம் எவ்வளவுதான் திறமைசாலியாக இருந்தாலும், என் வேலையை நான் சரியாகத்தான் செய்கிறேன் என்ற நினைப்பு இருந்தாலும், சக ஊழியர்களுடன் ஒத்துப்போவதுதான் மிகவும் முக்கியம். அதனை அறிந்துகொள்ளத்தான் இந்த குழு விவாதம் உதவும்.
விவாதத்தை ஆரம்பிக்கும்போது, தன் முறை வரும்போது பேசலாம். நான் பேச நினைத்தது இதுதான்.! இதற்குமேல் நீங்கள் எது பேசினாலும் எனக்கு கவலை இல்லை என்ற ரீதியில் நடந்துகொள்பவர்கள் குழுவோடு வேலை செய்ய தகுதியானவர்களாகப் பார்க்கமாட்டார்கள்.
அதேபோல், யாருக்கும் சந்தர்ப்பம் கொடுக்காமல், தனக்குத் தெரிந்த அனைத்தையும் பேசி முடித்துவிடவேண்டும் என்று நினைப்பவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தயங்குவார்கள்.
தனக்கான சந்தர்ப்பம் வரும்போது, நான் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி, தன் வாதத்தையே தட்டிக்கழித்து, ஏன் பேசவில்லை என்று கேட்கும்போது 'I am observing' என்று திறமையாக பதில் சொல்பவரை, அவர்களும் observationலியே வைத்திருந்து, கழித்துக்கட்ட வாய்ப்புகள் அதிகம்!
அடுத்ததாக, இரண்டு தரப்புக்குமே வழவழவென்று பேசி, சரியான முடிவுக்கே வராமல் 'அவர் சொன்னதும் சரிதான், இவர் சொன்னதும் சரிதான்' என்று தன் கருத்தையே சொல்லாமல் இருப்பவரும் ஓரம் கட்டப்படுவார்.
எல்லோரையும் அனுசரித்து, தன் கருத்தில் மிகவும் தீர்க்கமாகப் பேசி, யாரையும் காயப்படுத்தாமல் தன் கருத்தைச் சொல்லி, எதிர்க் கருத்துச் சொல்பவர்களை மதித்து, அவர்கள் கருத்தில் தனக்கு இருக்கும் மாற்றுக் கருத்தையும், ஒத்த கருத்தையும் நயம்பட உரைப்பவரை நிறுவனம் அப்படியே அள்ளிக்கொள்ளும்.
இந்தக் குழு விவாதம் மூலம், நேரடியாக கீழ்க்கண்ட விஷயங்கள் தெரியவந்துவிடும்.
மொழி வளம்,
கருத்துக் கோர்வை
குழு அனுசரிப்பு
தலைமைப்பண்பு
பதிலளிக்கும் பாங்கு
குழு ஊக்கம்
பங்களிப்புத் திறன்
இவை ஒவ்வொன்றைப் பற்றியுமே வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









