டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கூட்டுறவு அமைப்புகளில் ஜனநாயகம் வேண்டும்

ராமங்களிலும், நகரங்களிலும் உழைக்கும் மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிதி நிறுவனங்களாய் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டன. அதன்மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள், பொது

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:36 pm

வா.சங்கர்

ராமங்களிலும், நகரங்களிலும் உழைக்கும் மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு, நடுத்தர மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிதி நிறுவனங்களாய் கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டன. அதன்மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் நலன் பேண கூட்டுறவு வங்கிகளாக, கூட்டுறவு நாணயச் சங்கங்களாக, கூட்டுறவு விற்பனைச் சங்கங்களாக, நுகர்வோர் கூட்டுறவுகளாக, ரேஷன் கடைகளாக கூட்டுறவுச் சங்கங்கள் உதவி வந்தன.

 ஆனால், கடந்த முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளில் அரசின் தவறான கொள்கை முடிவுகளாலும், அரசியல்வாதிகளின் வரம்பற்ற தலையீடுகளாலும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தலைமையாலும் நூற்றுக்கணக்கான கூட்டுறவுச் சங்கங்கள் மூடப்பட்டுவிட்டன. நூற்றுக்கணக்கான சங்கங்கள் மூடுவிழாவுக்குத் தயாராகிவிட்டன. ஆயிரக்கணக்கான சங்கங்கள் மதில் மேல் பூனை மாதிரி மூடவும் முடியாமல் நடத்தவும் முடியாமல் விழி பிதுங்கித் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. இந்த அவலமான சூழ்நிலையில் ஒவ்வோராண்டும் நவம்பர் 14 முதல் 20 வரை கூட்டுறவு வார விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 கூட்டுறவு வார விழாக்கள் கொண்டாடுவதன் நோக்கமே கூட்டுறவில் பயன்பெற்ற உறுப்பினர்களை மக்களிடையே அடையாளப்படுத்துவதும், அதன் மூலம் புதிய உறுப்பினர்களை கூட்டுறவுக்குள் கொண்டு வருவதற்கும்தான். ஆனால், கூட்டுறவு நிறுவனங்களின் இப்போதைய நிலை என்ன? கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வீட்டு வசதியை ஏற்படுத்தித் தருவதற்காகத் தொடங்கப்பட்ட வீட்டு வசதி சங்கங்கள் விளைந்த நிலங்களைஆக்கிரமித்து வீட்டு மனைகளாக்கி விற்பனை செய்யும் வியாபார முகமைகளாக மாறி இன்று ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாமல் செயல் இழந்து நிற்கின்றன.

 விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களை வழங்குவதற்கும், விவசாய விளைபொருள்களை நியாயமான விலைக்குக் கொள்முதல் செய்வதற்கும் உருவாக்கப்பட்ட கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் விவசாயிகளிடமிருந்து விலகிப்போய் வெகு காலமாகிவிட்டன.

 குறுகிய காலப் பயிர்க்கடன்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட கிராமப்புற கூட்டுறவுச் சங்கங்கள் "தேவைக்குக் கடன்' என்பதற்குப் பதிலாக ""கடனை அடைக்கக் கடன்'' என ஏடு பெயர்த்து எழுதும் கொள்கையுடன் ஆண்டுதோறும் கடன் வழங்கிய தொகையைக் கணக்குக் காட்டுகின்றன.

 நீண்டகாலக் கடன்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட நிலவள வங்கிகள் "வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி' என்று பெயரைப் பெரிதாக்கிக் கொண்டதோடு சரி. கடந்த பல ஆண்டு காலமாய் ஒரு விவசாயிக்குக்கூட கடன் வழங்கவில்லை. அதைப்பற்றி யாரும் கவலைப்படுவாருமில்லை.

 தொடக்கக் கூட்டுறவு வங்கிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கும், அதன் மூலம் மாவட்டக் கூட்டுறவு வளர்ச்சிக்கு உதவுவதற்கும் உருவாக்கப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மாதாந்திர ஊதியம் பெறுகிற பணியாளர்கள் அங்கம் வகிக்கும் கூட்டுறவு நாணயச் சங்கங்களின் நிதி நிறுவனமாய் மாறிவிட்டன.

 கடன் வழங்கும் கூட்டுறவுகளின் நிலை இப்படி என்றால், பால் வழங்கும் கூட்டுறவுச்சங்கங்களின் நிலை பரிதாபம். நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் நிலையோ இன்னும் பரிதாபம். கோடிக்கணக்கில் வியாபாரம் செய்த வரவு செலவு இருக்கும். பதிவேடு இருக்கும். ஆனால், லாபம் மட்டும் இருக்காது. கூட்டுறவு சிறப்பங்காடிகள் நலிந்து சிதைந்து பராமரிப்பின்றி பூட்டிக் கிடக்கும்.

 அரசு அதிகாரிகள் கூட்டுறவுக் கல்வியில் டாக்டர் பட்டம் வாங்கியிருந்தால்கூட அவர்கள் கூட்டுறவாளர் அல்ல. அவர்கள் மாத ஊதியம் வாங்கும் அரசுப் பணியாளர்கள்தான். அவர்கள் செலவிட்ட தொகையைச் சம்பாதிக்கவே தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தப் பார்ப்பார்கள். இது இயற்கை. அதனால் கூட்டுறவுத் துறைக்கு அன்னியமான இவர்கள் அங்கிருந்து விலக்கப்பட வேண்டும். எந்த ஒரு கூட்டுறவு நிறுவனத்துக்கும் கூட்டுறவுத்துறை அதிகாரியின் தலைமை இருக்கக்கூடாது. யார் முதலீடு செய்தார்களோ அவர்கள்தான் தலைமை ஏற்க வேண்டும். முதல் முதலீடு உறுப்பினர்களுடைய சந்தா மற்றும் பங்கு மூலதனம் மட்டும்தான். அதனால் அவர்கள்தான் தலைமை ஏற்க வேண்டும்.

 இரண்டாவதாக, அரசு காப்புறுதி தந்து கூட்டுறவு அமைப்புகளுக்குக் கடன் வழங்கிய வங்கிகளின் பிரதிநிதிகள் கூட்டுறவு நிர்வாகக் குழுவில் சிறப்புப் பிரதிநிதிகளாக சிறப்பு அதிகாரத்துடன் இருக்க வேண்டும். அதன் மூலம், கொடுத்த கடனைத் திருப்பி வசூலிக்கும் எண்ணமாவது அவர்களுக்கு இருக்கும்.

 அரசு அதிகாரிகளுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுவிட்டு, கூட்டுறவு ஜனநாயகத்தை அமல்படுத்தும் வகையில் மாதிரிக் கூட்டுறவுச் சட்டத்தை தமிழக அரசு சட்டமாக்கி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் கையில் கூட்டுறவு அமைப்புகளை ஒப்படைக்க வேண்டும்.

இன்று கூட்டுறவுச் சங்கங்களில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கக்கூட வாய்ப்பில்லை. இந்நிலையில், இன்றைய கூட்டுறவுச் சட்டத்தில் மத்திய அரசு தேவையான திருத்தங்கள் செய்து அதை ஜனநாயகம் காக்கும் வடிவத்துக்கு மாற்றியாக வேண்டும்.

 கூட்டுறவுச் சங்கத்தைக் காப்பாற்றினால் லாபம் பெறப்போவது சாதாரண பொதுமக்களும் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களும்தான். எனவே, அவர்கள்தான் முதல் குரல் கொடுக்க வேண்டும். கூட்டுறவு ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள நல்ல இதயங்கள் பேச வேண்டும். வாதாட முன்வர வேண்டும்.

 இதைச் செய்யத் தவறினால் தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைச்சர் இருப்பார். கூட்டுறவு அதிகாரிகள் இருப்பார்கள். ஆனால், கூட்டுறவு அமைப்புகள் மட்டும் இருக்காது.

 ஏனெனில், கூட்டுறவு இயக்கம் மக்களுக்கானது. அதனைப் பாதுகாக்க பொதுமக்களும் கூட்டுறவாளர்களும் முன்வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.