மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அட்டைகள் பலவிதம்!

அட்டைகள் பல விதம்; அதில் தளர்த்தப்பட்ட பொருளாதாரத்தில் கிடைக்கும் அட்டைகள் தனி ரகம் என்றே கூறலாம்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2013, 11:52 pm

அட்டைகள் பல விதம்; அதில் தளர்த்தப்பட்ட பொருளாதாரத்தில் கிடைக்கும் அட்டைகள் தனி ரகம் என்றே கூறலாம்.

உதாரணத்துக்கு ஆதார் அட்டை.  நான்கு வருடங்களுக்குமுன், ஒரு உயர் அதிகாரி மைய அரசில் பொறுப்பேற்ற சமயம், "ஆதார் அட்டை' என்ற ஒன்றை நாடெங்கும் கொணரத் திட்டமிட்டார். தபால் ஆபீஸ், சில அரசு வங்கிகள் இதில் பங்கேற்றன. ஏற்கெனவே உள்ள அடையாள அட்டைகள் (ரேஷன், வாகன உரிமம்) போன்றவை போலத்தான் இதுவும் என்றெண்ணி பலர் இதில் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. காலப்போக்கில் இது நீர்த்துப் போய்விட்டது.

ஆனால் இப்போது காஸ் சிலிண்டர் "குறைந்த'(!) விலையில் வழங்கப்பட வேண்டுமானால், மானியம் வங்கிக் கணக்கு மூலம்தான் தரப்படும்; அதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று கடுமையாக உத்தரவு வந்த பிறகு இது சூடுபிடித்து விட்டது.

இன்றைய நிலைமை என்ன? அரசு அறிக்கைகள்; நாளிதழில் வரும் செய்திகள்; யதார்த்த நிலை - மூன்றுக்கும் நிறைய வேறுபாடு நிலவுகிறது.

வீடு வீடாக அதிகாரிகளே வந்து விவரம் குறித்துக் கொள்வார்கள் என்று அரசு செய்தி கூறியது. தனியார் வங்கியொன்றிலோ பள்ளியிலோ இதற்கான முகாம் நடக்கிறது என்று ஏடுகள் தெரிவித்தன. ஆனால், மாநகராட்சி அலுவலகத்தில்தான் விண்ணப்பம் பெற முடியும் என்று நேரில் போய் அறிந்தேன்.

அங்கு இருந்த கூட்டம். ஏதோ திறந்தவெளியில் பரீட்சை எழுதுவதுபோல, பலர் ஆதார் அட்டைக்கான விண்ணப்பத்தை நிரப்ப முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். எங்கள் "வார்டு'க்கான விண்ணப்பப் படிவம் 15 நாளுக்குப் பிறகுதான் கிடைக்கும் என்று ஊழியர் தெரிவித்தார். அட்டைக்கான புகைப்படம், பிற விவரங்களை உறுதிப்படுத்துவது போன்றவற்றுக்கான தாமதத்தைப் புரிந்துகொள்ள இயலும். ஆனால் வெற்று விண்ணப்பம் கொடுப்பதற்கு ஏன் தாமதம்? விண்ணப்பப் படிவம் வார்டு எண்ணுக்கு தகுந்த மாதிரி மாறுமா?

ஓர் அம்சத்தை மட்டும் பாராட்ட வேண்டும். அந்த மாநகராட்சி ஊழியர், கும்பலைக் கண்டு அயராமல், பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். இதே பொறுமைதான் வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடமும் கவனிக்கிறேன். ஏடிஎம் அட்டைக்கான இயந்திரம் பழுதுபட்டாலும் சரி; சிறிய சீட்டு வராவிட்டாலும் சரி - "ஸாரி சார்.. ùஸர்வர் ப்ராப்ளம்' என்று சலிக்காமல் பதில் கூறுகிறார்கள். வேறு வங்கியில் அட்டையைப் பயன்படுத்த சிறிது அச்சமாக இருக்கிறது.

கடன் அட்டை எனப்படும் வகையில், எனக்கு ஏற்பட்ட அனுபவம் தனி. என்னுடைய அட்டையின் மேல் உறை பிரிந்து பழுதடைந்து விட்டது; மாற்று அட்டைக்காக விண்ணப்பித்திருந்தேன். அது வருவதற்கான தாமதம் இருக்கட்டும். இடைப்பட்ட நேரத்தில், மனைவியின் "கூடுதல் அட்டை' யைக் கூடப் பயன்படுத்த இயலவில்லை. ஒரு வழியாக தலைமை அலுவலகத்துக்கு கேட்டு அலுத்த பிறகு, ""ஸாரி.. புரோகிராமில் ஏதோ மிஸ்டேக் ஆகிவிட்டது'' என்று சமாதானம் சொன்னார்கள்.

அரசுக்கான சில கட்டணங்களை வலைதளம் மூலம் கட்டலாம் - அட்டையைப் பயன்படுத்தி என்று விளம்பரம் வருகிறது. ஆனால், சொத்து வரியைச் செலுத்துவதில் சிக்கல்; தண்ணீர் வரியைச் செலுத்தினால், அந்த அட்டையில் பதிவு செய்ய ரொம்ப நாளாகுமாம். மின்சாரக் கட்டணம் மட்டும் ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்திக் கட்ட இயலுகிறது. அதிலும், சிற்சில சமயம் பணம் செலுத்த ""உள்ளே போவதற்கு''த் தாமதமாகிறது. ஏ.டி.எம். அட்டைகள்; கடன் அட்டைகள்; அரசு வரி செலுத்த வேண்டிய அட்டைகள் - இவற்றுக்கான தாமதம்; கட்டணம் - இதைப் பொறுத்துக் கொள்ளலாம்.

ஏனெனில் இவை கூடுதல் வசதி. ஆனால், ஆதார் அட்டை மிக அத்தியாவசியம் ஆயிற்றே?

கம்பம் அருகில் குக்கிராமக் கிளையொன்றில் பணியாற்றியபோது, போடி பக்கம் விவசாய அதிகாரியுடன் சென்றிருக்கிறேன், ஏலக்காய் எஸ்டேட்டைப் பார்வையிட.

""இங்கு அட்டைகள் இருக்கும்... ரத்தத்தை உறிஞ்சி விடும். ஜாக்கிரதை'' என்று அறிவுறுத்தினார் வேறொரு சீனியர்.

இங்கு நடைமுறை வாழ்வில், அட்டைகள் இன்றியமையாதவை ஆகிவிட்டன, சில பணத்தை உறிஞ்சுகின்றன; வேறு சில சக்தியையும் நேரத்தையும்!

அட்டையிலுள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய அரசு ஆவன செய்யுமா? அவசரத் தேவை - ஆதார் அட்டை குளறுபடி நீக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.