அண்மையில் வெளியாகி இருக்கும் இரண்டு வெவ்வேறு ஆய்வு முடிவுகள் எச்சரிக்கை விடுப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன. ஒருபுறம் காற்று மாசுபட்டிருக்கிறது என்றால் இன்னொருபுறம் தண்ணீரும் மாசுபட்டு நச்சுக் கலப்புக்கு உள்ளாகி இருக்கிறது எனும்போது நாம் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது.
பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் எட்டு மாநிலங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டிருக்கிறது என்று எச்சரிக்கிறது நாடாளுமன்ற நிலைக் குழு அறிக்கை. 2026-27-க்கான மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் நீராதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிக அளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், நீர்நிலைகள், குடிதண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் மண்ணுக்கடியில் உள்ள ஊற்றுகள் செயலிழக்கின்றன என்கிறது அறிக்கை.
அது மட்டுமல்லாமல், பல நச்சுத்தன்மையுள்ள உலோகங்களின் கலப்பு ஏற்படுவதால் நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதாக அல்லாமல் மாறிவிடுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அஸ்ஸாம், பிகார், கேரளம், ஒடிஸா, பஞ்சாப், ராஜஸ்தான், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் இருந்து 4,949 கிராமங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் இருந்து கிடைத்த முடிவுகள்தான் நிலைக் குழுவின் கவலைக்குக் காரணம். அந்த மாதிரிகளில் பல உலோகங்கள், ரசாயனங்களின் கலப்பு காணப்பட்டதை சோதனைகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.
ராஜஸ்தானும், பஞ்சாபும்தான் மிக அதிகமான மாசுக்கு உள்ளாகி இருப்பதாகத் தெரிகிறது. கன உலோகங்கள் (ஹெவி மெட்டல்ஸ்) எனப்படும் பாதரசம், யுரேனியம், செலினியம், கேட்மியம் உள்ளிட்டவை அந்த மாநிலங்களில் இருந்து சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் அளவுக்கு அதிகமாகக் காணப்பட்டன. அவை மட்டுமல்லாமல், ஏனைய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலும் பல்வேறு உலோகங்களும், ரசாயனங்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அருகில் இருக்கும் ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் கலப்பதால் பல்வேறு ஆறுகளும், ஓடைகளும் மாசுபடுகின்றன. அந்த நதித் தடங்களின் வழியே காணப்படும் கிராமங்களின் நிலத்தடி நீர் அவற்றால் மாசுபடுவதைத் தடுக்க எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படாமல் இருந்ததன் விளைவை நாம் இப்போது சந்திக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், ஆலைக் கழிவுகளை சுத்திகரித்து வெளியேற்றுவதில் முனைப்புக் காட்டப்படுகிறது என்பது ஆறுதல்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மின் கசிவு, ஃப்ளோரைட், நைட்ரேட் ஆகியவற்றின் கலப்பு நிலத்தடி நீரிலும், குளம், ஏரிகளிலும் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதனால், உடனடியாக பாதிக்கப்பட்டிருக்கும் கிராமங்களிலும், பகுதிகளிலும், பாதுகாக்கப்பட்ட , சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசுகளை நாடாளுமன்ற நிலைக் குழு கேட்டுக் கொண்டிருக்கிறது.
தண்ணீர் மாசுபடுவது மட்டுமல்லாமல், தொடர்ந்து காற்று மாசு இந்தியாவில் எல்லா நகரங்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தலைநகர் தில்லியில் காற்று மாசு உலகளாவிய பேசுபொருளாக மாறிவிட்டது. "ஐக்யூ ஏர்' என்கிற ஸ்விட்சர்லாந்து நாட்டு நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் காற்று மாசை அளவிட்டு அறிக்கை வெளியிடுகிறது. தெற்குலக நாடுகள்தான் அதிகமாக காற்று மாசுப் பிரச்னையை எதிர்கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான், வங்கதேசம், கஜகஸ்தான், சாட், காங்கோ ஆகிய நாடுகள் மிக அதிகமாகக் காற்று மாசுபட்டிருக்கும் நாடுகள் என்று அந்த நிறுவனம் வகைப்படுத்துகிறது. கலப்பின் தரத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன் முறையாகத் தரவுகளை சேகரித்து காற்று மாசைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுப்பதுதான் காற்று மாசுப் பிரச்னைக்குத் தீர்வு என்று அந்த நிறுவனம் அறிவுறுத்துகிறது.
இந்தியாவைப் போன்ற பரந்து விரிந்த தேசத்துக்கு ஏற்ற அளவில் தொடர்ந்து காற்று மாசைக் கண்காணிக்கும், அதன் தரத்தை எடைபோடும் அமைப்பு எதுவும் இல்லை என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். சிறிய நகரங்கள், கிராமங்கள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படுவதில்லை; மாசுபட்ட குடிநீர்தான் அவற்றின் பிரச்னை. நகராட்சிகள், மாநகராட்சிகள்தான் காற்று மாசுப் பிரச்னையை அதிக அளவில் எதிர்கொள்கின்றன.
காற்று மாசுப் பிரச்னைக்கு நச்சுப் புகையை உமிழும் தொழிற்சாலைகள், புதைபடிவ எரிபொருளில் இயங்கும் மோட்டார் வாகனங்கள், ஏ.சி. உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் பயன்பாடு, போதிய அளவில் கரியமில வாயுவை உறிஞ்சும் பசுமைச் சோலைகள் இல்லாமை உள்ளிட்டவை காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத, இன்றியமையாத இரண்டு தேவைகள் மாசுபடாத தண்ணீரும், காற்றும். அவை இல்லாமல் போகும்போது அதன் நேரடி பாதிப்பாக அடிப்படை சுகாதாரம் தடம் புரளும்; அடுத்த பாதிப்பு மனித வளமும் பொருளாதாரமும்; அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, நமது அரசியல்வாதிகள் கவலைப்பட வேண்டிய பிரச்னை இவைதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிலத்தடி நீா்மட்டம் உயா்வு, பாசன நீா் உறுதி

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே ஒரே கொள்கை! - மு. வீரபாண்டியன்

கிராமப்புறங்களில் குடிநீா் ஆதாரங்கள் மேம்படுத்தப்படுமா?

உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகள்: முதலிடத்தில் பாகிஸ்தான்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


