தீபாவளிப் பண்டிகை நெருங்கிவிட்டது. சென்னையிலிருந்து தமது சொந்த ஊர்களுக்குச் சென்று, சொந்த பந்தங்களுடன் குதூகலமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாட வேண்டுமென்பது பல லட்சம் சென்னைவாசிகளின் கனவாகும். இக்கனவு நனவாவதற்குச் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கான போக்குவரத்து என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே தற்பொழுது உள்ளது.
தீபாவளிப் பண்டிகையின் பொருட்டு இக்காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில் மற்றும் கூடுதல் ரயில் பெட்டிகளுக்கான முன் பதிவுகளும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்து விடுகின்றன. இந்த நிலைமையில் தனது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கெனப் பெரும்பாலான சென்னைவாசிகள் தேர்ந்தெடுப்பது பேருந்துப் பயணத்தையே என்று கூறலாம்.
பண்டிகைக் காலங்களில் பேருந்துக்கென கோயம்பேடு சென்று முன்பதிவு செய்து விட்டு வருவது மிகப்பெரிய சாதனையாகத் தற்போது உள்ளது. பயணச்சீட்டினை முன்பதிவு செய்து கொடுக்கும் பல டிராவல் ஏஜென்சிகளும் தமது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள பல்வேறு வருமானப் பெருக்க உத்திகளை இக்காலங்களில் கையாளத் தவறுவதில்லை.
எப்படியோ ஒருவாறு அரசுப் பேருந்துகளில் பயண முன்பதிவு செய்துவிட்டாலும், தீபாவளியின் நெருக்க நாள்களில் ஆங்காங்கே வசிக்கும் சென்னை நகரவாசிகள் கோயம்பேடு வந்து, பேருந்தினைப் பிடித்து தமது பயணத்தைத் தொடங்குவது மற்றும் தொடர்வது என்பது பகீரதப் பிரயத்தனமாகவே உள்ளது.
அப்படி முன்பதிவு செய்யாத பயணிகளில் பலர், ""தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு இரவு பத்து மணிக்கே கோயம்பேடு பேருந்து முனையம் வந்து, அன்றிரவு முழுவதும் உரிய பேருந்து கிடைக்காமல், மறுநாள் காலை பத்து மணிக்கே பேருந்தில் இடம் பிடித்துச் சென்றனர்'' என்றும், ""கோயம்பேட்டில் பேருந்துக்காக விடிய விடியக் காத்திருந்த தென்னகப் பயணிகள்'' என்றும் வரும் தினசரிச் செய்திகளைப் படிக்காதவர்கள் இல்லையெனக் கூறலாம். அந்த அளவுக்குத் தீபாவளிச் சமயத்தில் கோயம்பேடு பேருந்து முனையம் போக்குவரத்து நெருக்கடியில் திணறி வருகிறது என்பது சில ஆண்டுகளாகவே எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
சென்னை கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஒரே நேரத்தில் 270 பேருந்துகளை மட்டுமே நிறுத்த முடியும். ஆனால், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை தீபாவளியையொட்டிய நாட்களில் சுமார் 700 பேருந்துகளை அங்கிருந்து புறப்படச் செய்கிறது. இது தவிர, தனியார் ஆம்னி பேருந்துகளும் பேருந்து முனையத்தின் அருகே வெளியிலிருந்து நூற்றுக்கணக்கில் இயங்குகின்றன. இத்தகைய அதிக எண்ணிக்கையிலான பேருந்துகளின் இயக்கங்களை கோயம்பேடு பேருந்து முனையம் எப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?
கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து சென்னைப் புறநகரை எட்டும் வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலை எண்ணும் பொழுதே மலைப்பாக உள்ளது. முனையத்திலிருந்து பேருந்தினை வெளிக்கொணர்வதற்குள் ஓட்டுநர்களின் விழி பிதுங்கிப் போகிறது, பயணியரின் மனம் பதைபதைத்துப் போய் விடுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து முனையம் என்று பேசப்படும் இந்த கோயம்பேடு பேருந்து முனையத்தில் அச் சமயங்களில் சட்டம் ஒழுங்குப் பிரச்னை மிகுதியாக ஏற்படுகிறது. சுகாதாரச் சீர்கேடும் நிலவுகிறது. இப் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?
÷இத்தகைய பண்டிகைக் காலங்களில் தத்தமது சொந்த ஊர்களுக்குச் செல்லும் சென்னை நகரவாசிகள் கோயம்பேடு முனையம் வந்துதான் புறப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தேவையற்றது. சுமார் 60 கி.மீ. சுற்றளவுப் பரப்பில் வாழும் சென்னை நகர மக்கள் ஏன் தேவையில்லாமல் கோயம்பேடு வந்து குவிந்து தேவையற்ற நெரிசலை ஏற்படுத்த வேண்டும்? நேரத்தை ஏன் விணடிக்க வேண்டும்?
÷இதுகுறித்துச் சிந்தித்த தமிழக முதலமைச்சர் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துச் சேவைகளுக்கெனவே பல கோடி ரூபாய் செலவில் சென்னை வண்டலூரில் அரசுப் பேருந்து முனையம் ஒன்று விரைவில் அமைக்கப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. பொதுமக்களின் வரவேற்பை இது பெறும் என்பதில் ஐயமில்லை. அத்தகையப் பேருந்து முனையம் கட்டி முடித்துச் செயல்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகலாம்.
÷அந்த இரண்டு ஆண்டுகள் வரை இத்தகையப் பண்டிகைக் காலப்பேருந்துப் போக்குவரத்து நெருக்கடியை எவ்வாறு சமாளிப்பது என்பது கவலைக்குரிய கேள்வியாக இருக்கிறது. அதற்குரிய ஒரே வழி இதுதான்.
÷தமிழகத்தின் தென் மாவட்டங்களை நோக்கி இயக்கப்படும் தமிழக அரசின் அனைத்து வகைப் பேருந்துகளையும், குறிப்பாகப் பண்டிகைக் காலங்களில் கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்துதான் இயக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தேவையற்றது. 20 விழுக்காடு பேருந்துகளை மட்டும் அங்கிருந்து இயக்கிவிட்டு, எஞ்சியவற்றைச் சென்னையின் முக்கிய இடங்களான தாம்பரம், அடையாறு, வடபழனி, வில்லிவாக்கம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பெரம்பூர், சைதாப்பேட்டை போன்ற இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்தே நெடுந்தொலைவுப் பேருந்துகளை இயக்கலாம். முன்பதிவினையும் இவ்விடங்களிலேயே மேற்கொள்ளலாம்.
÷தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவதற்கும் இதே ஏற்பாட்டினைச் செய்யலாம். இதற்கான முன்னறிவிப்புகளையும் அட்டவணைகளையும் தமிழக அரசு வெளியிடுமானால் சென்னை நகர மக்கள் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள்; பயணமும் சுலபமானதாக இருக்கும்.
÷இப்படிச் செய்வதில் ஏற்படப் போகும் நன்மைகள் ஏராளம். அவற்றுள் சில (1) கோயம்பேடு பேருந்து முனையத்தில் ஏற்படக்கூடிய தேவையற்ற நெரிசலைத் தவிர்க்கலாம். (2) பண்டிகைக் காலங்களில் மாநகரில் அளவுக்கதிகமான டிராபிக்ஜாம் இருக்காது (3) 20 விழுக்காடு எரிபொருள் சிக்கனம் ஏற்படும் (4) சட்டம் ஒழுங்கு பிரச்னை குறையும் (5) ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணக் கொள்ளை குறையும். (6) பயணிகளின் மன உளைச்சல் குறைந்து பண்டிகைக் காலமும், பயணமும் இனிதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


