மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

காணாமல் போனவை...

ஒரு நாள் நண்பன் ஒருவனின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன், என்னைப் பார்த்ததுமே உற்சாகமாக வரவேற்றான். கூடத்தில் தொலைக்காட்சி முன்பாக, ஐந்து பேர் கொண்ட மொத்தக் குடும்பமே உட்கார்ந்திருந்தது.

News image
Updated On :1 மார்ச் 2015, 9:52 pm

ஒரு நாள் நண்பன் ஒருவனின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன், என்னைப் பார்த்ததுமே உற்சாகமாக வரவேற்றான். கூடத்தில் தொலைக்காட்சி முன்பாக, ஐந்து பேர் கொண்ட மொத்தக் குடும்பமே உட்கார்ந்திருந்தது. நண்பரின் மகன் ஏதோ தளபதி ஆணையிடுவது போல "இப்போது பாருங்கள், இந்தியா - பாகிஸ்தான் பார்டர் தெரியும்' என்று சொன்னான்.

முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத்தான், விஷயம் புரிந்தது, நடந்தது என்னவென்றால், நண்பரின் பிள்ளை தன் மனைவி, குழந்தையுடன் வட நாட்டு சுற்றுலா சென்றிருக்கிறான். ஜெய்ப்பூர், சண்டீகர், தில்லி போன்ற இடங்களில் எடுத்த புகைப்படங்களைக் கேமரா மூலம் சின்னத்திரைக்கு மாற்றி அனைவருக்கும் காண்பித்துக் கொண்டிருந்தான்.

நண்பன் என்னைத் தனியே அழைத்துக் கொண்டு போனான். பொதுவான விஷயங்களைப் பேசி விட்டுப் பிறகு, "கம்ப்யூட்டர் நம் வாழ்க்கையை எப்படி மாற்றி விட்டது! பார்த்தாயா' என்றான். குரலில் ஒலித்தது ஏக்கமா, அல்லது மகிழ்ச்சியா என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவன் சொன்னது உண்மையாகவே தோன்றியது. எங்கள் வீட்டிலேயே ஒன்றிரண்டு புகைப்பட ஆல்பங்கள் இருந்தன. ஓய்வாக இருக்கும் நேரங்களில், அவற்றைப் புரட்டிப் பார்ப்பது ஓர் இனிய பொழுதுபோக்கு. "அட! அப்பா எத்தனை "ட்ரிம்'மாக டை கட்டிக் கொண்டு இருக்கிறார்!'. "அம்மா முகத்தைப் பார். எப்போதும் சிரிப்பு, அப்பா ஒரே சிடு சிடு'. "நம்ம அத்தையா? ரொம்ப மாறிப் போய் விட்டாரே?- இதுபோன்ற பல எண்ணங்கள் மனக்கண் முன் விரியும்.

சில படங்கள் வெளிறிப் போயிருக்கலாம்! ஓரிரு படங்கள் கிழிந்தும்கூட இருக்கக் கூடும். என்றாலும் பழைய ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பதில் ஒரு தனியான மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

இன்றைய நாளில் எல்லாமே டிஜிட்டல்மயமாகிவிட்டது. சிலவற்றுக்கு இந்த வசதி சரிப்பட்டு வராது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனெனில், தனியே கண்டுகளிக்க சாத்தியக் கூறு மிகக் குறைவு. மின்வெட்டு வராமலோ இருக்க வேண்டும். மேலும், கணினியை இயக்கத் திறன் பெற்றவரும் இருப்பது அவசியம். கல்யாணம், புதுமனை புகுவிழா போன்ற பெரிய விசேஷங்களுக்கு டிஜிட்டல் சாதனம் பொருத்தமாக இருக்கக் கூடும்.

மேற்குறிப்பிட்ட புகைப்பட ஆல்பம் போலவே, வேறொரு அம்சமும் காணாமலே போய்விட்டது. அது- பைண்ட் செய்யப்பட்ட தொடர்கதைகள், சிறுகதைகள். இன்று அறுபது வயதை எட்டிய எல்லா வாசகர்களின் ரசனையையும் அந்தக் காலத்தில் தூண்டிவிட்டது பைண்ட் செய்து வைத்த புத்தகங்கள்தான். என்னுடைய 12-ஆவது வயதில் "சிவகாமியின் சபதத்தை'ப் படித்த ஞாபகம் இப்போதும் பசுமையாக இருக்கிறது. தமிழ்வாணனின் சங்கர்லால் கதைகளைப் பைண்ட் செய்த நூலாகத்தான் படித்தேன். ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகளை மட்டும் பைண்ட் செய்து, படித்த ஓர் உறவினரை நான் அறிவேன்.

என் நண்பர் ஒருத்தருக்கு இத்தகைய புத்தகங்களைக் குறிப்பிட்ட எழுத்தாளரிடம் காண்பித்து கையெழுத்து பெறுவது ஒரு வழக்கம். ஜெயகாந்தனின் தொடர்கதை (ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்)யில், கையெழுத்து வாங்க நண்பனுடன் ஆழ்வார்ப்பேட்டை சென்றிருந்தேன். அவர், புத்தகத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து ஆனந்தம் அடைந்தார். அருகிலிருந்த தோழரிடம் "பார்த்தாயா? கலாசாகரம் ராஜகோபால் மாதிரியே படம் போட்டிருக்கார் கோபுலு!' என்று ரசித்துச் சொன்னார்.

இதற்கு ஒரு முக்கிய காரணம், விலைதான்! எந்தப் பத்திரிகை ஆனாலும், மாதம் இரண்டு ரூபாய்க்குள் அடங்கிவிடும். தேவையான கதைகளைத் தொகுத்துப் "பைண்ட்' செய்ய ஒரு ரூபாய். ஆக மாதம் மூன்று பத்திரிகை ஆனாலும், மொத்தச் செலவு ரூ.10 அல்லது

12-க்குள் அடங்கி விடும். ஆனால், தனியே நமக்கு விருப்பமான ஒரு நூலை வாங்க வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஐந்து ரூபாயாவது ஆகும். அந்த நாளில் மலிவுப் பதிப்பாக வெளியானவை இரண்டே இரண்டுதான்- பாரதியார் பாடல்கள்; வியாசர் விருந்து.

ஒரு சங்கடம் என்னவெனில், இத்தகைய பைண்ட் புத்தகங்கள், கால ஓட்டத்தில் சில பக்கங்கள் உதிரியாகப் போகும். மறுபடியும் பைண்ட் செய்தால், எழுத்துகள் மறையும்.

இன்று டி.டி.பி. வசதி புகுந்து, நூல் அச்சாகும் தன்மை எளிதாகிவிட்டது. தேவைக்கு ஏற்ப, அவ்வப்போது புத்தகங்கள் அச்சுக்கலாம். மேலும் கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுத்து பைண்ட் செய்ய பலருக்குப் பொறுமை இல்லை.

கணினியால் ஏற்பட்ட பல மாற்றங்கள் வரவேற்கத்தக்கதுதான்; அதேசமயம், அதனால் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனவையும் உண்டு.

இருக்கிற பழைய புகைப்பட ஆல்பத்தையும் பழுப்பேறிப் போன பைண்டிங் நூல்களையும் புரட்டிப் பார்த்து ஓரளவு திருப்தி அடையலாம். வேறு என்ன செய்ய?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.