பகுதி 4 – போற்றித் திரு அகவல் 3
சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.


சிவபெருமானின் பெருமைகளைப் போற்றும் அகவல் பா இது. தில்லையில் அருளப்பட்டது.
பாடலின்பம்
ஈண்டியும் இருத்தியும் எனைப் பல பிழைத்தும்,
காலை மலமொடு கடும்பகல் பசி, நிசி
வேலை, நித்திரை, யாத்திரை பிழைத்தும்,
கரும்குழல் செவ்வாய் வெள் நகைக் கார் மயில்
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து கதிர்த்து முன் பணைத்து
எய்த்து இடை வருந்த எழுந்து புடை பரந்து
ஈர்க்கு இடை போகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்,
பித்த உலகர் பெரும்துறைப் பரப்பினுள்
மத்தக் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்,
கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்,
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்,
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும்,
புல்வரம்பு ஆய பல துறை பிழைத்தும்,
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி...
பொருளின்பம்
குறிப்பு: பிறந்தபின் நிகழும் பிழைகளை இங்கே சொல்கிறார்
இந்தப் பூமியில் பிறந்த என்னைப் பல துன்பங்கள் நெருக்கின, அவற்றிலிருந்து நான் தப்பினேன்,
காலை, பகல், இரவு என்று அந்தந்த நேரத்தில் செய்யவேண்டிய பணிகளைச் செய்தேன், பசி எடுத்தது, தூக்கம் வந்தது, பல இடங்களுக்குப் பயணம் செய்தேன், இவை ஒவ்வொன்றும் எனக்குப் பல துன்பங்களைத் தந்தன, அவற்றிலிருந்து நான் தப்பினேன்,
அடுத்து, ஒயிலான தோற்றம், இளமார்பகங்களுடன் வந்த பெண்களுடைய கூர்மையான கண்களின் தாக்குதலில் இருந்து தப்பினேன்,
பேராசை என்பது பித்தம் பிடித்த யானையைப்போன்றது, மயக்கத்தில் இருக்கும் இந்த உலக மக்களிடையே வாழும் நான், அந்தப் பேராசையிலிருந்து தப்பினேன், கல்வி என்கிற கடலிலிருந்து தப்பினேன், செல்வம் என்கிற துன்பத்திலிருந்து தப்பினேன், வறுமை என்கிற பழைமையான விஷத்திலிருந்து தப்பினேன், இன்னும் கீழ்மையான பல நடத்தைகளிலிருந்து தப்பினேன்,
அதன்பிறகு, தெய்வம் என்கிற சிந்தனை எனக்குள் உண்டானது.
சொல்லின்பம்
ஈண்டி: நெருங்கி
இருத்தி: அமர்த்தி
நிசி: இரவு
மதர்த்து: பெருத்து/ கனமாகி
கச்சு: மார்க்கச்சு
கதிர்த்து: ஒளி நிறைந்து
பணைத்து: பருத்து
எய்த்து: இளைத்து
புடை: பக்கம்
ஈர்க்கு: பனை ஈர்க்கு
கூர்த்த: கூரான
நயனம்: கண்
கொள்ளை: கூட்டம்
மத்த: பித்தம் பிடித்த
களிறு: ஆண் யானை
அவா: ஆசை
நல்குரவு: வறுமை
தொல்: பழைமையான
விடம்: விஷம்
புல்: கீழான/ சாதாரணமான
சித்தம்: சிந்தனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...