ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 5 – திருச்சதகம் 6

சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2015, 5:36 am

என்.சொக்கன்


சதகம்’ என்றால் நூறு பாடல்களின் தொகுப்பு. இதில் பலவகைப் பாடல்கள் அந்தாதி வகையில் அமைந்துள்ளன. நூறு பாடல்களும் பத்து பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளன.

திருச்சதகத்தின் ஆறாவது பிரிவு 'அனுபோக சுத்தி'.

'சுத்தி' என்றால் சுத்தம். ஆத்ம சுத்தி, அனுபவ சுத்தி, அனுபோக சுத்தி என்று இதனை மூன்று நிலைகளாகச் சொல்வார்கள். முதலில் மனத் தூய்மை (ஆத்ம சுத்தி). அந்தத் தூய்மையுடன் அனைத்தையும் பயன்படுத்துவது அனுபவ சுத்தி. பின்னர் அந்த அனைத்தையும் சிவனாகக் காண்பது அனுபோக சுத்தி. இந்நிலைபற்றிய பாடல்கள் இவை.

இம்மூன்றையும் விளக்குவதற்குச் சுவாமி சித்பவானந்தர் ஓர் அருமையான உதாரணத்தைப் பயன்படுத்துகிறார்: கண்ணின் சுத்தம், கண்ணாடியின் சுத்தம், இந்த இரண்டும் இருந்தால்தான் பொருள்கள் நன்கு தெரியும். அதுபோல, முதலில் மனத் தூய்மை, பின்னர் பொருள்களைப் பயன்படுத்துவதில் தூய்மை, பிறகு அவையெல்லாம் சிவன் என்று உணரும் தூய்மை நிலை!

34

பாடலின்பம்

ஈசனே, என் எம்மானே, எந்தை, பெருமானே, என் பிறவி

நாசனே, நான் யாதும் ஒன்று அல்லாப் பொல்லா நாயான

நீசனேனை ஆண்டாய்க்கு நினைக்கமாட்டேன் கண்டாயே,

தேசனே, அம்பலவனே, செய்வது ஒன்றும் அறியேனே!

*

முடித்தவாறும் என்றனக்கே தக்கதே, முன் அடியாரைப்

பிடித்தவாறும் சோராமல் சோரனேன் இங்கு ஒருத்தி வாய்

துடித்தவாறும் துகில் இறையே சோர்ந்தவாறும் முகம் குறுவேர்

பொடித்தவாறும் இவை உணர்ந்து கேடு என்றனக்கே சூழ்ந்தேனே!

பொருளின்பம்

இறைவா, என் தலைவா, என் தந்தையே, பெருமானே, என் பிறவியை நாசம் செய்து பிறவாப் பெருநிலையை வழங்குகிறவனே,

நான் எந்த முக்கியத்துவமும் இல்லாத சாதாரணன், பொல்லாத நாய்க்குச் சமமானவன், நீசன், ஆனாலும் இவற்றைப் பொருட்படுத்தாமல் என்னை நீ ஆண்டாய்!

அத்தகைய அன்புக்கு நான் தகுதியானவன்தானா? உன்னை எண்ணக்கூட என்னால் இயலவில்லை. இது உனக்கும் தெரியும்.

ஒளிவடிவானவனே, பொன்னம்பலத்தானே, நான் இப்போது என்ன செய்வேன்? ஒன்றும் அறியாமல் தவிக்கிறேன்.

உன்னை வழிபட நீ என்னைப் பிறக்கவைத்திருக்கிறாய். அது எனக்குத் தகுதியானதுதான்.

நீ உன் அடியவர்களை வலிய வந்து பிடித்துக்கொள்கிறாய், அது உன் பண்பு,

ஆனால், இவை எனக்குத் தெரிந்தும்கூட, நீயே என்னைப் பற்றியபோதும்கூட, கள்வனான நான் உன்னை எண்ணவில்லை,

அதற்குப் பதிலாக, இங்கே பெண் ஒருத்தியின் வாய் துடிப்பது, அவளுடைய ஆடை சரிவது, முகத்தில் வியர்வை அரும்புவது போன்றவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன், அதனால் எனக்கு நானே கேடு வரவழைத்துக்கொண்டேன், நான் இதிலிருந்து மீள உன் அருள் வேண்டும்.


சொல்லின்பம்

ஈசன்: பரம்பொருள்

எம்மான்: தலைவன்

எந்தை: என் தந்தை

நீசன்: தாழ்வானவன்

தேசன்: ஒளி நிறைந்தவன்

அம்பலவன்: அம்பலத்தில் ஆடுபவன்

முடித்தவாறு: முடித்த தன்மை

சோரன்: திருடன்

இறையே: சிறிது

குறுவேர்: வியர்வைத் துளி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.