பகுதி 6 - நீத்தல் விண்ணப்பம் -2
'நீத்தல்' என்றால், நீக்குதல். இந்த உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள பற்றை நீக்க வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. உத்தரகோசமங்கையில் அருளப்பட்டவை.


'நீத்தல்' என்றால், நீக்குதல். இந்த உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள பற்றை நீக்க வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. உத்தரகோசமங்கையில் அருளப்பட்டவை.
கட்டளைக் கலித்துறை என்ற வகையில் அமைந்த ஐம்பது பாடல்கள் இந்தப் பகுதியில் உள்ளன.
பாடலின்பம்
தீர்க்கின்றவாறு என் பிழையை நின் சீர் அருள் என்கொல் என்று
வேர்க்கின்ற என்னை விடுதிகண்டாய், விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோசமங்கைக்கு அரசே,
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம் வினையேனை இருதலையே.
*
வெள்ளத்துள் நா வற்றியாங்கு உன் அருள் பெற்றுத் துன்பத்தினின்றும்
விள்ளக்கிலேனை விடுதிகண்டாய், விரும்பும் அடியார்
உள்ளத்து உள்ளாய், மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
கள்ளத்து உளேற்கு அருளாய், களியான களி எனக்கே!
பொருளின்பம்
எதிரிகள் நடுங்கும்படி சத்தமிடுகிற கிண்கிணி மாலையை அணிந்தவனே, உத்தரகோசமங்கைக்கு அரசனே,
என்னுடைய பிழையை உன்னுடைய சிறப்பான அருள் எப்படித் தீர்க்குமோ என்று எண்ணி நான் அஞ்சுகிறேன், உடல் வேர்க்கிறேன்,தீவினைகளில் ஈடுபட்ட என்னை, ஐந்து பொறிகளும் அச்சமும் இருபுறமும் பற்றி இழுக்கின்றன, என்னைக் கைவிட்டுவிடுவாயா?
வெள்ளத்தில் நீந்துகிறவன் தண்ணீர் தாகம் என்று சொல்வானா?
என்னுடைய நிலைமை அப்படிதான் இருக்கிறது. உன்னுடைய அருள் எனக்குக் கிடைத்தபிறகும், துன்பத்திலிருந்து விடுபடத் தெரியாதவனாக இருக்கிறேன்.
அடியவர்கள் உள்ளத்தில் உள்ளவனே, சிறந்து விளங்கும் உத்தரகோசமங்கைக்கு அரசனே, என்னைக் கைவிட்டுவிடுவாயா? கள்ளமான உள்ளம் கொண்ட எனக்குப் பேரின்பத்தை அருள்வாய்!
சொல்லின்பம்
தீர்க்கின்றவாறு: தீர்க்கும் விதம்
சீர்: சிறப்பு
விரவார்: எதிரிகள்
வெருவ: அஞ்ச
ஆர்த்தல்: சத்தமிடுதல்
தார்: மாலை
விடை: எருது
ஈர்த்தல்: இழுத்தல்
அஞ்சு: ஐந்து பொறிகள்
இருதலை: இருபுறமும்
நா: நாக்கு
விள்ளக்கிலேன்: விடுபட இயலாதவன்
மன்னும்: சிறந்து விளங்கும்
களி: மகிழ்ச்சி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...