பகுதி 6 - நீத்தல் விண்ணப்பம் -4
மேலான உன் அடியவர்களையன்றி மற்ற யாரும் தொட இயலாதபடி அரியவனாக, அவர்களும் உன்னை விட இயலாதபடி சிறந்தவனாகத் திகழ்கிறவனே, சுடர் மாமணியே,


'நீத்தல்' என்றால், நீக்குதல். இந்த உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள பற்றை நீக்க வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. உத்தரகோசமங்கையில் அருளப்பட்டவை.
கட்டளைக் கலித்துறை என்ற வகையில் அமைந்த ஐம்பது பாடல்கள் இந்தப் பகுதியில் உள்ளன.
பாடலின்பம்
அடல்கரிபோல் ஐம்புலன்களுக்கு அஞ்சி அழிந்த என்னை
விடற்கு அரியாய், விட்டுடுதி கண்டாய், விழுத்தொண்டர்க்கு அல்லால்
தொடற்கு அரியாய், சுடர் மாமணியே, சுடு தீச் சுழலக்
கடல் கரிதாய் எழு நஞ்சு அமுது ஆக்கும் கறைக் கண்டனே.
*
வலைத்தலை மான்அன்ன நோக்கியர் நோக்கின் வலையில்பட்டு
மிலைத்து அலைந்தேனை விடுதிகண்டாய், வெண்மதியின் ஒற்றைக்
கலைத் தலையாய், கருணாகரனே, கயிலாயம் என்னும்
மலைத் தலைவா, மலையாள் மணவாள, என் வாழ்முதலே.
பொருளின்பம்
மேலான உன் அடியவர்களையன்றி மற்ற யாரும் தொட இயலாதபடி அரியவனாக, அவர்களும் உன்னை விட இயலாதபடி சிறந்தவனாகத் திகழ்கிறவனே, சுடர் மாமணியே,
கடலின் நடுவே சுடுகின்ற நெருப்பு சுழன்று தோன்ற, ஆலகால நஞ்சு பிறந்தது. அதை நீ உண்டு அமுதமாக்கினாய், அந்த விஷக்கறை கழுத்தில் தோன்ற மிளிர்கிறவனே,
வலிமையான யானையைப்போல ஐம்புலன்கள் என்னைத் துன்புறுத்துகின்றன, நான் அவற்றுக்குப் பயந்து அழிகிறேன். என்னைக் கைவிட்டுவிடுவாயா?
வெண்ணிறச் சந்திரனின் ஒரு கலையைத் தலையில் அணிந்தவனே, கருணை வடிவானவனே, கயிலாய மலையின் தலைவனே, மலைமகள் பார்வதியின் மணவாளனே, என்னுடைய வாழ்க்கையின் முதல் பொருளே,
வலையில் சிக்கிய மானைப்போன்ற பார்வையைக் கொண்ட பெண்களுடைய பார்வை என்கிற வலையில் சிக்கி வருந்தித் திரிந்தேன், என்னைக் கைவிட்டுவிடுவாயா?
சொல்லின்பம்
அடல்: வலிமை
கரி: யானை
விழுத்தொண்டர்: விழுமை/ பெருமை/ சிறப்பு நிறைந்த தொண்டர்
நஞ்சு: விஷம்
கறைக்கண்டன்: விஷக்கறை படிந்த கழுத்தைக் கொண்ட சிவபெருமான்
நோக்கியர்: நோக்கம்/ பார்வையைக் கொண்டவர்கள்
மிலைத்து: வருந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...