பகுதி 7 - திருவெம்பாவை - 2
திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் நீராடி இறைவன் புகழைப் பாடும் பாடல்கள் இவை.
திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
ஒள் நித்தில நகையாய், இன்னம் புலர்ந்தின்றோ?
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?
எண்ணிக்கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்,
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை, வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம், நீயே வந்து
எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்.
*
மால் அறியா, நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்,
பால் ஊறு தேன்வாய்ப் படிறீ, கடை திறவாய்,
ஞாலமே, விண்ணே, பிறவே, அறிவு அரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டு அருளிக் கோது ஆட்டும்
சீலமும் பாடிச் ‘சிவனே, சிவனே’ என்று
ஓலம் இடினும் உணராய், உணராய் காண்,
ஏலக் குழலி, பரிசு ஏல் ஓர் எம்பாவாய்.
பொருளின்பம்
வெளியே உள்ளவர்கள்: ஒளிர்கின்ற முத்தைப்போன்ற புன்னகையைக் கொண்ட பெண்ணே, இன்னும் தூங்குகிறாயா? உனக்குப் பொழுது விடியவில்லையா?
உள்ளே இருக்கிறவள்: அழகிய கிளிபோல் பேசும் நம் தோழியர் எல்லாரும் வந்துவிட்டார்களா?
வெளியே உள்ளவர்கள்: எல்லாரும் வந்துவிட்டார்கள், உனக்குச் சந்தேகமிருந்தால் வெளியே வந்து எண்ணிக்கொள், யாரேனும் வரவில்லை என்றால் திரும்பச் சென்று தூங்கு!
ஆனால், இது தூங்குவதற்கான நேரமா? எம்பெருமானை எண்ணவேண்டிய நேரமல்லவா? நாங்கள் சொல்வதைக் கேள், கண்களை மூடிக்கொண்டு வீணாக நேரத்தைப் போக்காதே,
விண்ணுலகில் உள்ள தேவர்களுக்கு அமுதமானவன், வேதங்களின் உயர்ந்த பொருள், நம் கண்ணுக்கு இனியவன், அந்தச் சிவபெருமானைப் பாடிக் கசிந்து உள்ளம் நெகிழ்ந்து நின்று உருகுவோம்!
பாவைபோன்ற பெண்ணே, இதை எண்ணிப்பார், எழுந்து வா!
திருமாலும் நான்முகனும் சிவபெருமான் என்கிற மலையின் அடி, முடியைக் காண முயன்றார்கள். அவர்களாலேயே அது இயலவில்லை. நம்மைப்போன்ற மனிதர்களால் அவனை அறிய இயலுமா? அது வெறும் பொய்ப்பேச்சு!
பால் ஊறுவதைப்போல் இனிமையாகப் பேசுகிறவளே, ஆனால் இறைவனை வழிபடுவது என்றால்மட்டும் பொய்யாகக் காரணங்களைச் சொல்கிறவளே, கதவைத் திற,
இந்த உலகம், விண், பிற எவற்றாலும் அறிய இயலாதவன் சிவபெருமான், அவனுடைய அழகையும், அவன் நம்மை ஆட்கொண்டு அருள் செய்து குற்றங்களை நீக்குகிற சிறப்பையும் பாடுகிறோம், ‘சிவனே, சிவனே’ என்று சத்தமிடுகிறோம், அப்போதும் உனக்கு விழிப்பு வரவில்லையா? இறையுணர்வு ஏற்படவில்லையா?
நறுமணச் சாந்து பூசிக் கூந்தலை அழகுபடுத்தியிருப்பவளே, என் பாவையே, இதைப்பற்றிச் சிந்தித்துப்பார், எழுந்து வா,
சொல்லின்பம்
ஒள்: ஒளிர்கிற
நித்திலம்: முத்து
புலர்தல்: பொழுது விடிதல்
அவம்: வீண்
விழுப்பொருள்: உயர்ந்த பொருள்
நெக்கு: நெகிழ்ந்து
பொக்கம்: பொய்
படிறீ: படிறியே/ வஞ்சகமாகப் பேசுகிறவளே
கோலம்: அழகு
கோது: குற்றம்
சீலம்: சிறப்பு
ஏலம்: கூந்தலுக்குப் பூசும் நறுமணச் சாந்து
பரிசு: நிலை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...