ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 7 - திருவெம்பாவை - 3

திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2015, 10:27 am

என்.சொக்கன்

திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் நீராடி இறைவன் புகழைப் பாடும் பாடல்கள் இவை.

திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.


46

பாடலின்பம்

மானே, நீ நென்னலை நாளை வந்து உங்களை

நானே எழுப்புவன் என்றலும் நாணாமே

போன திசை பகராய், இன்னம் புலர்ந்தின்றோ?

வானே நிலனே பிறவே அறிவு அரியான்

தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டு அருளும்

வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்,

ஊனே உருகாய், உனக்கே உறும், எமக்கும்

ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேல் ஓர் எம்பாவாய்.

*

அன்னே, இவையும் சிலவோ, பல அமரர்

உன்னற்கு அரியான், ஒருவன், இரும் சீரான்

சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்,

தென்னா என்னாமுன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய்,

என்னானை, என் அரையன், இன்னமுது என்று எல்லோரும்

சொன்னோம் கேள் வெவ்வேறாய், இன்னம் துயிலுதியோ,

வல் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்,

என்னே துயிலின் பரிசு, ஏல் ஓர் எம்பாவாய்.

பொருளின்பம்

வெளியே இருக்கும் பெண்கள்: மானே, நாளைக்கு நானே வந்து உங்களைத் துயில் எழுப்புவேன் என்று சொன்னாயே, அந்தச் சொல் எந்தத் திசையில் சென்றது? இப்போது இப்படி வெட்கமில்லாமல் தூங்குகிறாயே, உனக்கு மட்டும் பொழுது இன்னும் விடியவில்லையா?

வானும் நிலமும் பிறவும் அறிந்துகொள்ள இயலாத சிவபெருமான் தானே வந்து எங்களுக்குக் கருணை காட்டினான், எங்களை ஆட்கொண்டு அருள் செய்தான், அவனுடைய உயர்ந்த, அழகிய திருவடிகளைப் பாடி வருகிறோம், எங்களிடம் நீ பேசமாட்டாயா? அவன் புகழைக் கேட்டு உன் உள்ளம் உருகவில்லையா? நீ இப்படியெல்லாம் நடந்துகொள்ளலாமா?

பாவை போன்ற பெண்ணே, இதை எண்ணிப்பார், நமக்கும் பிறருக்கும் தலைவனாகத் திகழ்கிற சிவபெருமானின் புகழைப் பாடுவோம், வா.

வெளியே நிற்கும் பெண்கள்: பெண்ணே, இதுதான் உன் குணமா?

தேவர்களும் சிந்தித்துப் புரிந்துகொள்ள இயலாத அரியவன், தனித்துவமானவன், மிகுந்த சிறப்புகளைக் கொண்டவன், அந்தச் சிவன்மீது மிகுந்த பக்தி கொண்டவள் நீ, அவனுடைய புனிதச் சின்னங்களின் ஒலி கேட்டதும், ‘சிவனே’ என்று மனமுருகிச் சொல்வாய். ‘தென்னா’ என்று அவன் பெயரைச் சொன்னால், தீயில் சேர்ந்த மெழுகுபோல் உருகுவாய்,

இப்போது, சிவபெருமானை இனியவன், எங்கள் தலைவன், இனிய அமுதம் என்றெல்லாம் பலவிதமாகச் சொல்கிறோம், கேட்டுக்கொண்டு இன்னும் தூங்குகிறாயா? கொடிய மனம் கொண்ட முட்டாள்களைப்போல் நீ படுக்கையில் வெறுமனே கிடக்கலாமா? இப்படித் தூக்கத்திடம் சிக்கியிருக்கலாமா?

பாவை போன்ற பெண்ணே, இதைப்பற்றி எண்ணிப்பார், சிவன் பெயர் சொல்ல எழுந்து வா.

சொல்லின்பம்

நென்னல்: நாளை

புலர்தல்: பொழுது விடிதல்

தலையளித்தல்: கருணையுடன் நல்லவற்றைச் செய்தல்

வான்: உயர்ந்த

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம், இங்கே சிவனின் திருவடிகளைக் குறிக்கிறது

ஊன்: உடல்

கோன்: தலைவன்

உன்னற்கு: உன்னுதற்கு/ சிந்திப்பதற்கு

ஒருவன்: தனித்துவமானவன்

இரும்சீரான்: பெரிய சிறப்புகளைக் கொண்டவன்

என்னான்: எனக்கு இனியவன்

அரையன்: தலைவன்

வாளா: வெறுமனே

பரிசு: நிலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.