ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 7 - திருவெம்பாவை - 4

திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2015, 10:29 am

என்.சொக்கன்

திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் நீராடி இறைவன் புகழைப் பாடும் பாடல்கள் இவை.

திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.

47

பாடலின்பம்

கோழி சிலம்ப, சிலம்பும் குருகு எங்கும்,

ஏழில் இயம்ப, இயம்பும் வெண் சங்கு எங்கும்,

கேழ் இல் பரஞ்சோதி கேழ் இல் பரம்கருணை

கேழ் இல் விழுப்பொருள்கள் பாடினோம், கேட்டிலையோ,

வாழி, ஈது என்ன உறக்கமோ, வாய் திறவாய்,

ஆழியான் அன்பு உடைமை ஆமாறும் இவ்வாறோ?

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை,

ஏழை பங்காளனையே பாடு ஏல் ஓர் எம்பாவாய்.

*

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே,

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே,

உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்

உன் அடியார் தாள் பணிவோம், ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்,

அன்னவரே எம் கணவர் ஆவார், அவர் உகந்து

சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்,

இன்ன வகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்,

என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்.

பொருளின்பம்

வெளியே நிற்கும் பெண்கள்: கோழி கூவுகிறது, பறவைகள் எங்கும் ஒலி எழுப்புகின்றன, ஏழிசை கேட்கிறது, வெண்சங்குகள் ஒலிக்கின்றன,

ஒப்பில்லாத பெரிய ஒளி, ஒப்பில்லாத பெரிய கருணை, ஒப்பில்லாத உயர்ந்த பொருளாகத் திகழும் சிவபெருமானை நாங்கள் பாடுகிறோம், அது உன் காதில் விழவில்லையா?

பெண்ணே, இது என்ன உறக்கம்? வாய் திறந்து பேசு, நீ வாழ்க!

கருணைக்கடலான எம்பெருமான்மீது நீ வைத்திருக்கும் அன்பு இவ்வளவுதானா? யுகம் முடிகிற காலத்திலும் முதல்வனாகத் திகழ்கிற தனித்துவமான சிவனை, உமையம்மையின் பங்காக அருள் செய்பவனைப் பாடலாம், வா,

பாவைபோன்ற பெண்ணே, நீ இதுபற்றி எண்ணுவாய்.

இதற்குமுன் வந்த பழைய பொருள்களையெல்லாம்விடப் பழையவன், பின்னர் வந்த புதிய பொருள்களையெல்லாம்விடப் புதியவன், எம்பிரானே, நீதான்.

உன்னைத் தலைவனாகப் பெற்ற சிறப்பையுடைய நாங்கள், உன்னுடைய அடியவர்களை வணங்குவோம், அவர்களுக்குத் தொண்டு செய்வோம், அத்தகைய சிவனடியார்களையே நாங்கள் கணவராக ஏற்றுக்கொள்வோம், அவர் விரும்பிச் சொல்லும் பணிகளைச் செய்து கிடப்போம்,

எங்கள் தலைவா, இந்த வரத்தை நீ எங்களுக்கு அருளிவிட்டால், எங்களுக்கு வேறு எந்தக் குறையும் இல்லை,

சொல்லின்பம்

சிலம்புதல்: ஒலி எழுப்புதல்

குருகு: நாரை/ இங்கே பறவைகளைக் குறிக்கிறது

ஏழில்: ஏழிசை

இயம்புதல்: ஒலித்தல்/ சொல்லுதல்

கேழ்: இணை

விழுப்பொருள்கள்: உயர்ந்த பொருள்கள்

ஆழியான்: ஆழிபோன்றவன்/ கடல்போல் கருணையைப் பொழிகிற சிவபெருமான்

ஊழி: யுக முடிவுக்காலம்

ஏழை: பெண்/ இங்கே உமையம்மையைக் குறிக்கிறது

பேர்த்தும்: பிறகும்

பெற்றியன்: தன்மையுடையவன்

பிரான்: தலைவன்

பாங்கு: ஒழுங்கு

உகந்து: மகிழ்ந்து

பரிசு: தன்மை/ நிலை

தொழும்பு: அடிமைத்தொழில்

கோன்: தலைவன்

நல்குதியேல்: நல்கினால்/ வழங்கினால்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.