வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பகுதி 23 – செத்திலாப்பத்து – 4

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, மாயனே, அலைகடலில் எழுந்த விஷத்தை உண்ட வானவனே, நீலநிறக் கழுத்தைக்கொண்ட எங்கள் அமுதே, பிறைநிலவு தங்குகிற சடையைக் கொண்ட பிஞ்ஞகனே,

News image
Updated On :28 நவம்பர் 2015, 9:10 am

என். சொக்கன்

செத்துஇலாப் பத்து. அதாவது, இறைவனை எண்ணி மனம் மகிழ்ந்து, இன்னும் உன்னிடம் சேராமல் நான் இந்த உடலோடு இருக்கிறேனே என்று வருந்திப் பாடிய பாடல்கள்.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

147

பாடலின்பம்

மாயனே, மறிகடல்விடம் உண்ட

வானவா, மணிகண்டத்து எம்அமுதே,

நாயினேன் உனை நினையவும்மாட்டேன்,

நமச்சிவாய என்று உன்அடி பணியாப்

பேயன்ஆகிலும் பெருநெறி காட்டாய்,

பிறைகுலாம் சடைப் பிஞ்ஞகனேயோ,

சேயனாகி நின்றுஅலறுவது அழகோ,

திருப்பெருந்துறை மேவிய சிவனே.

*

போதுசேர் அயன், பொருகடல் கிடந்தோன்,

புரந்தராதிகள் நிற்க, மற்றுஎன்னைக்

கோதும்ஆட்டி நின் குரைகழல் காட்டிக்

குறிக்கொள்கஎன்று நின் தொண்டரில் கூட்டாய்

யாதுசெய்வதுஎன்று இருந்தனன், மருந்தே,

அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ,

சீதவார்புனல் நிலவிய வயல்சூழ்

திருப்பெருந்துறை மேவிய சிவனே.

பொருளின்பம்:

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, மாயனே, அலைகடலில் எழுந்த விஷத்தை உண்ட வானவனே, நீலநிறக் கழுத்தைக்கொண்ட எங்கள் அமுதே, பிறைநிலவு தங்குகிற சடையைக் கொண்ட பிஞ்ஞகனே,

நாய்போன்ற நான் உன்னை நினைக்கமாட்டேன், ‘நமச்சிவாய’ என்று உன்னுடைய திருவடிகளை வணங்கமாட்டேன்,

அப்படிப்பட்ட பேயனாகிய என்னையும் மன்னித்து நல்ல, பெரிய வழியைக் காட்டுவாய், சிவபெருமானே, இன்னும் நான் உனக்குத் தொலைவில் நின்று அலறிக்கொண்டிருப்பது அழகாகுமா? அருள்செய்.

*

குளிர்ச்சியான நீரால் சூழப்பட்ட வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,

தாமரைமலரில் தங்கும் பிரம்மன், அலைகடலில் தங்கும் திருமால், இந்திரன் முதலான தேவர்கள் உன்னுடைய அருள்வேண்டி நிற்கிறார்கள், எனினும், அவர்களோடு ஒப்பிடும்போது உன்னுடைய மிகச்சிறிய தொண்டனான எனக்கும் நீ அருள்செய்வாய்,

பெருமானே, என்னுடைய குற்றங்களைப் போக்குவாய், உன்னுடைய கழல் ஒலிக்கின்ற திருவடிகளைக் காட்டுவாய், உன்னை வணங்கும் குறிக்கோளை எனக்குத் தந்தருள்வாய், உன்னுடைய தொண்டர்களில் ஒருவனாக என்னைச் சேர்ப்பாய்,

இதுவரை என்ன செய்வது என்றே தெரியாமல் இருந்துவிட்டேன், சிவபெருமானே, இனியும் நான் இந்தத் துன்பத்தில் கிடப்பது சரிதானா? அருள்செய்.
 

சொல்லின்பம்:

மறிகடல்விடம்: அலைகள் நிறைந்த கடலில் எழுந்த விஷம்

மணிகண்டத்து: நீலக்கழுத்தைக் கொண்டவன்

பெருநெறி: பெரிய/ சிறந்த வழி

பிறைகுலாம்: பிறைநிலவு தங்குகிற

பிஞ்ஞகன்: சிவன்

சேயன்: தொலைவில் உள்ளவன்

மேவிய: எழுந்தருளிய

போது: மலர்/ தாமரைமலர்

அயன்: பிரம்மன்

பொருகடல்: அலைகள் மோதுகிற கடல்

புரந்தராதிகள்: இந்திரன் முதலான தேவர்கள்

கோதும்ஆட்டி: குற்றங்களை நீக்கி

குரைகழல்: சத்தமிடும் கழல் என்கிற ஆண்கள் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

குறிக்கொள்க: இதைக் குறிக்கோளாக ஏற்றுக்கொள்க

கூட்டாய்: சேர்ப்பாய்

இடர்: துன்பம்

சீத: குளிர்ச்சியான

புனல்: நீர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.