வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பகுதி 25 – ஆசைப் பத்து - 3

வானில் உள்ள தேவர்களாலும் அறிய இயலாத மலர்த் திருவடிகளைக் கொண்டவனே, மோட்சத்தை வழங்குபவனே, என் தந்தையே, அம்மானே,

News image
Updated On :8 டிசம்பர் 2015, 6:28 am

என். சொக்கன்

இறைவன்மேல் தான் வைத்துள்ள ஆசையை விவரித்துத் தனக்கு அருளுமாறு வேண்டும் பாடல்கள் இவை. பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

156

பாடலின்பம்

அளிபுண்அகத்துப் புறந்தோல்

மூடி அடியேனுடை யாக்கை

புளியம்பழம்ஒத்துஇருந்தேன்,

இருந்தும் விடையாய், பொடிஆடீ,

எளிவந்துஎன்னை ஆண்டுகொண்ட

என்ஆர்அமுதேயோ,

அளியன்என்ன ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே.

*

எய்த்தேன் நாயேன், இனிஇங்கு

இருக்ககில்லேன், இவ்வாழ்க்கை

வைத்தாய், வாங்காய், வானோர்

அறியா மலர்ச்சேவடியானே,

முத்தா, உன்தன் முகஒளி

நோக்கி முறுவல் நகைகாண

அத்தா, சால ஆசைப்பட்டேன்

கண்டாய் அம்மானே.

பொருளின்பம்

விடைவாகனத்தில் எழுந்தருளுபவனே, வெண்ணீறு பூசியவனே, என் நிறைந்த அமுதமே, அம்மானே,

எனக்குள் எங்கும் புண் நிறைந்துள்ளது, அதை வெளித்தோலால் மூடிவைத்திருக்கிறேன், ஆகவே, நான் புளியம்பழம்போல் இருக்கிறேன்,

என்றாலும், நீ எளிதாக வந்து என்னையும் ஆண்டுகொண்டாய், சிவபெருமானே, உன்னுடைய அருளைப் பெறும் தகுதி எனக்குக் கிடைக்கவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய்.

*

வானில் உள்ள தேவர்களாலும் அறிய இயலாத மலர்த் திருவடிகளைக் கொண்டவனே, மோட்சத்தை வழங்குபவனே, என் தந்தையே, அம்மானே,

இந்த உலக வாழ்க்கையால் நான் மிகவும் இளைத்துவிட்டேன், நாய்போன்றவனான என்னால் இனியும் இங்கே இருக்க இயலாது, எனக்கு இந்த வாழ்க்கையைத் தந்தவனே, நீயே அதைத் திரும்ப வாங்கிக்கொள், சிவபெருமானே, உன்னுடைய முகஒளியைப் பார்த்து, அதில் தோன்றும் புன்முறுவலைப் பார்க்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய்.

சொல்லின்பம்

அளிபுண்: கனிந்த புண்

யாக்கை: உடல்

ஒத்து: போல

விடையாய்: விடைவாகனத்தில் எழுந்தருளுபவனே/ சிவபெருமானே

பொடிஆடீ: வெண்ணீற்றுப் பொடியைப் பூசியிருப்பவனே/ சிவபெருமானே

எளிவந்து: எளிமையாக வந்து

ஆர்அமுதேயோ: நிறைந்த அமுதமே

அளியன்: அருளைப் பெறும் தகுதி உள்ளவன்

எய்த்தேன்: இளைத்தேன்

இருக்ககில்லேன்: இருக்க இயலாது

மலர்ச்சேவடியானே: மலர்போன்ற சிவந்த/ சிறந்த திருவடிகளைக் கொண்டவனே/ சிவபெருமானே

முத்தா: முக்தி/ மோட்சத்தைத் தருபவனே

முறுவல்: புன்னகை

அத்தா: தந்தையே

சால: மிகவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.