ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 29 – அருட்பத்து - 2

எங்கள் நாயகனே, என் உயிர்த் தலைவா, நறுமணச் சாந்து பூசிய கூந்தலைக் கொண்ட உமையம்மை, கங்கை இருவரின் நாயகனே

News image
Updated On :30 டிசம்பர் 2015, 6:50 am

என். சொக்கன்

அருள் பத்து. அதாவது, சிவபெருமானின் அருளை விரும்பிப் பாடும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு.

பெரும்பாலான பாடல்கள் 'அதெந்துவே என்று அருளாயே' என்று அமைந்துள்ளன.

‘அதெந்துவே’  என்ற சொல் கன்னடத்திலும் மலையாளத்திலும் உள்ளது. கன்னடத்தில் இதன் பொருள்,  ‘பயப்படாதே’. மலையாளத்தில் இதன் பொருள்,  ‘அது என்ன?’ அல்லது  ‘அது எதற்காக?’  என்பது.


175

பாடலின்பம்

எங்கள் நாயகனே, என்உயிர்த்தலைவா,

ஏலவார் குழலிமார் இருவர்

தங்கள்நாயகனே, தக்கநல்காமன்

தனதுஉடல் தழல்எழ விழித்த

செங்கண்நாயகனே, திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தம் மேவியசீர்

அம்கணா, அடியேன் ஆதரித்துஅழைத்தால்

அதெந்துவே என்றுஅருளாயே.

*

கமல நான்முகனும் கார்முகில் நிறத்துக்

கண்ணனும் நண்ணுதற்குஅரிய

விமலனே, எமக்கு வெளிப்படாய் என்ன

வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்,

திமில நான்மறைசேர் திருப்பெருந்துறையில்

செழுமலர்க் குருந்தம் மேவியசீர்

அமலனே, அடியேன் ஆதரித்துஅழைத்தால்

அதெந்துவே என்றுஅருளாயே.

பொருளின்பம்

எங்கள் நாயகனே, என் உயிர்த் தலைவா, நறுமணச் சாந்து பூசிய கூந்தலைக் கொண்ட உமையம்மை, கங்கை இருவரின் நாயகனே, தகுதியுடைய, நல்ல மன்மதனின் உடல் நெருப்பில் எரியும்படி கோபப்பட்ட சிவந்த கண்களைக் கொண்ட நாயகனே, திருப்பெருந்துறையில் மலர்கள் செழித்த குருந்த மரத்தின் கீழே திகழ்கின்றவனே, அழகிய கண்களை / கருணையைக் கொண்டவனே,

உன்மீது அன்பு காட்டி நான் அழைக்கிறேன்,  ‘அஞ்சாதே’  என்று சொல்லி எனக்கு அருள்செய்.

*

தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மாவும், கருமையான மேகத்தின் வண்ணத்தைக் கொண்ட திருமாலும் தேடி உன்னைக் காண இயலாதபடி திகழ்ந்தவனே, குற்றமற்றவனே, அவர்கள் இருவரும்,  ‘உன்னை நாங்கள் காணும்படி வெளிப்படுவாய்’  என்று கேட்டதும், உயர்ந்த தழல் உருவமாக வெளிப்பட்ட எங்கள் தந்தையே, வேத ஒலி பெரிதாகக் கேட்கின்ற திருப்பெருந்துறையில், மலர்கள் செழித்த குருந்த மரத்தின் கீழே திகழ்கின்றவனே,

உன்மீது அன்புகாட்டி நான் அழைக்கிறேன்,  ‘அஞ்சாதே’  என்று சொல்லி எனக்கு அருள்செய்.

சொல்லின்பம்

ஏலவார் குழலிமார்: நறுமணம் வீசும் கூந்தலைக்கொண்ட பெண்கள்/ உமையம்மை, கங்கை

தழல்: நெருப்பு

மேவிய: விளங்கிய

சீர்: சிறப்பு

அம்கணா: அழகிய கண்களைக் கொண்டவனே

அதெந்துவே: அஞ்சாதே / அது என்ன / அது எதற்கு

கமல: தாமரை

நண்ணுதற்குஅரிய: தேடிக் கண்டறிவதற்கு அரிதானவன்

விமலனே: குற்றமற்றவனே

வியன்தழல்: பரந்து விரிந்த ஜோதிவடிவம்

எந்தாய்: எங்கள் தந்தையே

திமில: பேரொலி

அமலனே: குற்றமற்றவனே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.