வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பகுதி 19 – திருத்தசாங்கம் - 2

நம்மை ஆளுகின்ற மாதொருபாகனான சிவபெருமான் வாழும் ஊர் எது? நீ சொல்.

News image
Updated On :9 நவம்பர் 2015, 8:07 am

என். சொக்கன்

தச+அங்கம்=தசாங்கம், அதாவது, பத்து பகுதிகள் / பத்து உறுப்புகளைப் பற்றிப் பாடுவது. ஓர் அரசனின் நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்கிற பத்து உறுப்புகளைப் பெருமைப்படுத்திப் பாடும் பாடல்களின் தொகுப்பு தசாங்கம் எனப்படும். உலகின் அரசனாகிய இறைவனையும் இவ்வகையில் பாடி வணங்கலாம். இங்கே சிவபெருமானின் சிறப்பு பாடப்பட்டுள்ளதால், இதனைத்  ‘திருத்தசாங்கம்’ என்று அழைக்கிறோம்.

இதில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடலைப் பாடும் தலைவி (அதாவது, மாணிக்கவாசகர்) ஒரு கிளியிடம் பேசுவதுபோல் இவை அமைந்துள்ளன. இவை நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை. தில்லையில் அருளப்பட்டவை.

125

பாடலின்பம்

தாடுஆடு பூஞ்சோலைத் தத்தாய், நமைஆளும்

மாதாடும்பாகத்தன் வாழ்பதி என்? கோதுஆட்டிப்

பத்தரெல்லாம் பார்மேல் சிவபுரம்போல் கொண்டாடும்

உத்தரகோசமங்கை ஊர்.

*

செய்யவாய்ப் பைஞ்சிறகின் செல்வீ, நம் சிந்தைசேர்

ஐயன், பெருந்துறையான் ஆறுஉரையாய், தையலாய்,

வான்வந்த சிந்தை மலம்கழுவ வந்துஇழியும்

ஆனந்தம்காண் உடையான் ஆறு.

பொருளின்பம்

சிவபெருமானின் ஊர்:

மகரந்தங்கள் சிந்துகின்ற பூக்கள் நிறைந்த சோலையில் வாழும் கிளியே,

நம்மை ஆளுகின்ற மாதொருபாகனான சிவபெருமான் வாழும் ஊர் எது? நீ சொல்.

பூமியில் ஒரு சிவபுரம் என்று பக்தர்களெல்லாம் சீராட்டிக் கொண்டாடும் உத்தரகோசமங்கைதான் அவனது ஊர் என்று நீ சொல்.

*

சிவபெருமானின் ஆறு:

சிவந்த வாய், பசுமையான சிறகுகளைக் கொண்ட செல்வியே,

நம்முடைய சிந்தனையில் நிறைந்திருக்கிறவன், நம்மை அடிமையாகக் கொண்ட தலைவன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் ஆறு எது? நீ சொல்.

பெண்ணே, உயர்ந்த சிந்தனையில் ஆணவம், மாயை, கன்மம் என்கிற மூன்றுவகை மலங்கள் சேர்கிறபோது, அவற்றைக் கழுவிச் சுத்தப்படுத்துவதற்காகப் பாய்ந்து வருகின்ற பேரானந்தம்தான் அவனுடைய ஆறு என்று நீ சொல்.

சொல்லின்பம்

தாது: மகரந்தம்

தத்தாய்: தத்தையே/ கிளியே

பதி: இருப்பிடம்/ ஊர்

கோதாட்டி: சீராட்டி

பத்தர்: பக்தர்

பார்: பூமி

செய்ய: சிவந்த

பைஞ்சிறகு: பசுமையான சிறகு

செல்வீ: செல்வியே/ கிளியே

சிந்தை: சிந்தனை

ஐயன்: தலைவன்

தையல்: பெண்

இழியும்: இறங்குகிற/ பாய்கிற

உடையான்: அடிமையாகக் கொண்டவன்/ தலைவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.