பகுதி 21 – கோயில் மூத்த திருப்பதிகம் - 3
எம்பெருமானே, அரசே, பொன்னம்பலத்தில் ஆடும் அமுதே என்று உன்னைப் போற்றுகிறேன், இரைக்காகக் காத்திருக்கும் கொக்கைப்போல, உன்னுடைய அருளை வேண்டி இரவும் பகலும் காத்திருந்து வாடினேன்,


‘பதிகம்’ என்றால் பத்து பாடல்கள், ‘கோயில்’ என்றால் தில்லை. தில்லையில் அருளப்பட்ட பத்து பாடல்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.
இவை அந்தாதிப் பாடல்களாகவும் உள்ளன. அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வரும்.
அரைசே, பொன்னம்பலத்துஆடும்
அமுதே என்றுஉன் அருள்நோக்கி
இரைதேர் கொக்குஒத்து இரவு,பகல்
ஏசுஅற்றுஇருந்தே வேசற்றேன்,
கரைசேர் அடியார் களிசிறப்பக்
காட்சி கொடுத்து உன் அடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப்
பேசாதுஇருந்தால் ஏசாரோ.
*
ஏசா நிற்பர், என்னை உனக்(கு)
அடியான்என்று பிறர்எல்லாம்
பேசா நிற்பர், யான்தானும்
பேணா நிற்பேன் நின்அருளே,
தேசா, நேசர் சூழ்ந்துஇருக்கும்
திருவோலக்கம் சேவிக்க,
ஈசா, பொன்னம்பலத்துஆடும்
எந்தாய், இனித்தான் இரங்காயே.
பொருளின்பம்
எம்பெருமானே, அரசே, பொன்னம்பலத்தில் ஆடும் அமுதே என்று உன்னைப் போற்றுகிறேன், இரைக்காகக் காத்திருக்கும் கொக்கைப்போல, உன்னுடைய அருளை வேண்டி இரவும் பகலும் காத்திருந்து வாடினேன்,
பிறவிக்கடலிலிருந்து கரையேறுகிற உன்னுடைய அடியவர்களெல்லாம் மகிழும்படி அவர்களுக்குக் காட்சி கொடுக்கிறவனே, என்னிடம் மட்டும் பிரை ஊற்றிய பாலில் ஒளிந்திருக்கும் நெய்யைப்போல ஏதும் பேசாமலிருக்கிறாயே, சிவபெருமானே, நீ இப்படிச் செய்தால் மற்றவர்கள் என்னைத் தூற்றுவார்களே, அருள்செய்.
*
சிலர் என்னைத் தூற்றுகிறார்கள், சிலர் என்னை உன் அடியவன் என்று சொல்கிறார்கள், நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதில்லை, உன் அருள்மட்டுமே வேண்டும் என்று வணங்கி நிற்கிறேன்,
ஒளிமயமானவனே, சிவபெருமானே, அன்பர்கள் சூழ்ந்திருந்து உன் திருச்சபையைக் காணும்படி காட்சி தருகிறவனே, பொன்னம்பலத்தில் ஆடுகின்ற பெருமானே, எங்கள் தந்தையே, இனியேனும் என்மீது இரக்கம் காட்டி அருள்செய்.
சொல்லின்பம்
அரைசே: அரசே
இரைதேர்: இரைக்குக் காத்திருக்கிற/ இரை தேடுகிற
கொக்குஒத்து: கொக்கைப்போல
ஏசற்று: வருந்தி
வேசற்றேன்: வாடினேன்
களிசிறப்ப: மிகவும் மகிழ
பிரை: பால் தயிராவதற்காக ஊற்றும் மோர்
ஏசாரோ: தூற்றமாட்டார்களா
பேணா: பேணி/ விரும்பி
தேசா: ஒளிமயமானவனே
திருவோலக்கம்: திருச்சபை/ திருக்காட்சி
சேவிக்க: வணங்க
எந்தாய்: எங்கள் தந்தையே
இரங்காய்: இரக்கம் காட்டி அருள்செய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...