ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 21 – கோயில் மூத்த திருப்பதிகம் - 5

உன்னுடைய அடியவர்கள் உன் பெருமையை எண்ணிச் சிரிப்பார்கள், மகிழ்வார்கள், தியானம் செய்வார்கள்,

News image
Updated On :20 நவம்பர் 2015, 6:36 am

என். சொக்கன்

‘பதிகம்’  என்றால் பத்து பாடல்கள்,  ‘கோயில்’  என்றால் தில்லை. தில்லையில் அருளப்பட்ட பத்து பாடல்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.

இவை அந்தாதிப் பாடல்களாகவும் உள்ளன. அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வரும்.

138

பாடலின்பம்

சிரிப்பார், களிப்பார், தேனிப்பார்,

திரண்டு திரண்டுஉன் திருவார்த்தை

விரிப்பார், கேட்பார், மெச்சுவார்,

வெவ்வேறுஇருந்து உன் திருநாமம்

தரிப்பார், பொன்னம்பலத்துஆடும்

தலைவா என்பார், அவர்முன்னே

நரிப்பாய் நாயேன் இருப்பேனோ,

நம்பி, இனித்தான் நல்காயே.

*

நல்காதுஒழியான் நமக்கு என்றுஉன்

நாமம் பிதற்றி, நயனநீர்

மல்கா, வாழ்த்தா, வாய்குழறா,

வணங்கா, மனத்தால் நினைத்துஉருகிப்

பல்கால்உன்னைப் பாவித்துப்

பரவிப் பொன்னம்பலம்என்றே

ஒல்கா நிற்கும் உயிர்க்குஇரங்கி

அருளாய், என்னை உடையானே.

பொருளின்பம்

சிறந்தவனே,

உன்னுடைய அடியவர்கள் உன் பெருமையை எண்ணிச் சிரிப்பார்கள், மகிழ்வார்கள், தியானம் செய்வார்கள், ஒன்றுகூடி உன் பெருமைகளை விவரிப்பார்கள், பிறர் உன் திருநாமத்தைச் சொல்ல, அதைக் கேட்பார்கள், போற்றுவார்கள், தனித்தனியே அவர்களும் உன் திருநாமத்தைச் சொல்வார்கள், ‘பொன்னம்பலத்தில் ஆடும் தலைவா’ என்பார்கள்,

அத்தகைய அடியவர்கள்முன்னால், நாய்போன்ற நான் பக்தியுணர்வு இல்லாமல் இப்படி இருக்கலாமா? அப்படியிருந்தால் அவர்கள் என்னைக் கேலி செய்யமாட்டார்களா? இனியேனும் எனக்கு அருள்செய்.

*

என்னை அடிமையாகக் கொண்டவனே,

நீ எனக்கு அருள்செய்யாமலிருக்கமாட்டாய் என்று எண்ணி உன் பெயரைச் சொன்னேன், பிதற்றினேன், கண்களில் நீர் வழிய உன்னை வாழ்த்தினேன், வாய் குழற உன்னைப் போற்றினேன், வணங்கினேன், மனத்தால் நினைத்து உருகினேன், பலமுறை உன்னை நினைத்துப் போற்றினேன், ‘பொன்னம்பலம்’ என்று சொல்லித் தளர்ந்து நின்றேன், என்னுடைய உயிரைக் காப்பதற்காகக் கருணை காட்டு, அருள்செய்.

சொல்லின்பம்

களிப்பார்: மகிழ்வார்கள்

தேனிப்பார்: தியானிப்பார்கள்

மெச்சுவார்: புகழ்வார்கள்

திருநாமம் தரிப்பார்: திருநாமத்தைச் சொல்வார்கள்

நரிப்பாய்: நரிப்பாக/ கேலிக்கு இடமாக

நல்குதல்: வழங்குதல்/ கருணை காட்டுதல்

நயன: கண்

பல்கால்: பலமுறை

பாவித்து: நினைத்து

ஒல்காநிற்கும்: தளர்ந்துநிற்கும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.