பகுதி 22 – கோயில் திருப்பதிகம் - 1
இவை அந்தாதி வகையில் அமைந்த பாடல்கள், அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல், அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமையும்.


பதிகம் என்பது பத்து பாடல்களின் தொகுப்பு. இந்தப் பத்து பாடல்களின் திருப்பெருந்துறை சிவனின் பெருமை குறிப்பிடப்படுவதால், இங்கே ‘கோயில்’ என்பது திருப்பெருந்துறை என்று கொள்ள வேண்டும்.
இவை அந்தாதி வகையில் அமைந்த பாடல்கள், அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல், அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமையும்.
மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன்ஐந்தின் வழியடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழு பரஞ்சோதி,
உள்ளவா காண வந்துஅருளாய்,
தேறலின் தெளிவே, சிவபெருமானே,
திருப்பெருந்துறைஉறை சிவனே,
ஈறுஇலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே, என்னுடை அன்பே.
*
அன்பினால் அடியேன் ஆவியோடு ஆக்கை
ஆனந்தமாய்க் கசிந்து உருக
என் பரம்அல்லா இன்அருள் தந்தாய்,
யான்இதற்கு இலன்ஒர் கைம்மாறு,
முன்புமாய்ப் பின்பும் முழுதுமாய்ப் பரந்த
முத்தனே, முடிவுஇலா முதலே,
தென்பெருந்துறையாய், சிவபெருமானே,
சீர்உடைச் சிவபுரத்து அரைசே.
பொருளின்பம்
தேனின் தெளிவே, சிவபெருமானே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, முடிவில்லாத எல்லாப் பதங்களையும் கடந்த இன்பமே, என்னுடைய அன்பே,
ஐந்து புலன்களும் வஞ்சகத்தோடு மாறி நின்று என்னை மயக்குகின்றன, அவற்றின் வழியை அடைப்பவனே, எனக்குள் அமுதமாக ஊறி நின்று எழுகின்ற பரஞ்சோதியே, உன் திருக்காட்சியை உள்ளபடி எனக்குக் காட்டு, வந்து அருள்செய்.
*
அனைத்துக்கும் முன்பாகத் தோன்றி, பிறகு அனைத்தும் நீயே எனப் பரந்தவனே, எதிலும் கட்டுப்படாத பெருமானே, முடிவில்லாத முதற்பொருளே, தெற்கே உள்ள திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, சிறப்பு நிறைந்த சிவபுரத்தின் அரசனே,
உன் அன்பை எனக்குத் தந்து, அதன்மூலம் என்னுடைய உயிர், உடல் அனைத்தையும் ஆனந்தமாகக் கசிந்துருகச்செய்தாய், அதைப் பெறும் தகுதி எனக்குச் சிறிதும் இல்லை, ஆனாலும், நீ எனக்கு அருள்செய்தாய், பதிலுக்கு உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?
சொல்லின்பம்
உள்ளவா: உள்ளபடி
தேறல்: தேன்
ஈறுஇலா: முடிவில்லாத
பதங்கள்: பதவிகள்
யாக்கை: உடல்
என்பரம்அல்லா: எனக்குத் தகுதியில்லாத
முத்தனே: கட்டுப்படாதவனே
சீர்: சிறப்பு
அரைசே: அரசனே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...