ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 22 – கோயில் திருப்பதிகம் - 2

அன்பர்களுக்கெல்லாம் அரசனே, என்னுடைய அப்பனே, உயிரிலும் உடலிலும் கலந்து அவற்றைக் கனியச் செய்தவனே,

News image
Updated On :23 நவம்பர் 2015, 10:13 am

என். சொக்கன்

பதிகம் என்பது பத்து பாடல்களின் தொகுப்பு. இந்தப் பத்து பாடல்களின் திருப்பெருந்துறை சிவனின் பெருமை குறிப்பிடப்படுவதால், இங்கே  ‘கோயில்’ என்பது திருப்பெருந்துறை என்று கொள்ள வேண்டும்.

இவை அந்தாதி வகையில் அமைந்த பாடல்கள், அதாவது, முதல் பாடலின் நிறைவுச் சொல், அடுத்த பாடலின் முதல் சொல்லாக அமையும்.

140

பாடலின்பம்

அரைசனே அன்பர்க்கு, அடையனேனுடைய

அப்பனே, ஆவியோடுஆக்கை

புரைபுரை கனியப் புகுந்துநின்றுஉருக்கிப்

பொய்இருள் கடிந்த மெய்ச்சுடரே,

திரைபொராமன்னும் அமுதத் தெண்கடலே

திருப்பெருந்துறைஉறை சிவனே,

உரை,உணர்வு இறந்துநின்று உணர்வதுஓர் உணர்வே,

யான்உன்னை உரைக்கும்ஆறுஉணர்த்தே.

*

உணர்ந்த மாமுனிவர், உம்பரோடு ஒழிந்தார்

உணர்வுக்கும் தெரிவுஅரும் பொருளே,

இணங்குஇலி, எல்லா உயிர்கட்கும் உயிரே,

எனைப் பிறப்புஅறுக்கும் எம் மருந்தே,

திணிந்ததோர் இருளில் தெளிந்த தூவெளியே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

குணங்கள்தாம் இல்லா இன்பமே, உன்னைக்

குறுகினேற்கு இனிஎன்ன குறையே.

பொருளின்பம்

அன்பர்களுக்கெல்லாம் அரசனே, என்னுடைய அப்பனே, உயிரிலும் உடலிலும் கலந்து அவற்றைக் கனியச் செய்தவனே, உருகச் செய்தவனே, பொய்யான இருளை விரட்டிய மெய்யான சுடரே, அலை வீசுகின்ற தெளிவான அமுதக் கடலே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, பேச்சு, உணர்வு என்பவற்றைக் கடந்து நிற்கும் உணர்வே, சிவபெருமானே, நான் உன்னை எப்படிப் புகழுவேன்? நீயே சொல்.

*

அனைத்தையும் உணர்ந்த பெருமுனிவர்கள், தேவர்கள், மற்ற யாருடைய உணர்வுக்கும் எட்டாதவனே, ஒப்பில்லாதவனே, எல்லா உயிர்களுக்கும் உயிராகத் திகழ்கிறவனே, என்னுடைய பிறவிப்பிணியை அறுக்கும் மருந்தே, அடர்த்தியான இருளில் தெளிவாகத் தெரியும் தூய வானமே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, தனக்கெனத் தனியே குணங்கள் ஏதும் இல்லாத இன்பமே, சிவபெருமானே, நான் உன்னை வந்தடைந்தேன், இனி எனக்கு ஏதும் குறையில்லை.

சொல்லின்பம்

அரைசனே: அரசனே

ஆக்கை: உடல்

புரைபுரை: துளைகளினுள்ளே

கடிந்த: விரட்டிய

திரை: அலை

தெள்: தெளிவான

உம்பர்: தேவர்

இணங்குஇலி: ஒப்பற்றவன்

தூ: தூய்மையான

குறுகினேன்: வந்தடைந்தேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.