ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 37 – பிடித்த பத்து - 5

பிள்ளைக்கு எப்போது பசிக்கும் எனச் சரியாக நினைவு வைத்துக்கொண்டு அதற்குப் பாலூட்டுகிறவள் தாய். அந்தத் தாயைவிட அதிக அன்பை என் மீது பொழிபவனே,

News image
Updated On :8 பிப்ரவரி 2016, 9:41 am

என். சொக்கன்

சிவபெருமானின் திருவடிகளைப் பிடித்துக்கொண்டது பற்றிப் பாடிய பாடல்கள் இவை. திருத்தோணிபுரம் எனப்படும் சீர்காழியில் பாடப்பட்டவை.

பத்து பாடல்களின் தொகுப்பு.

215

பாடலின்பம்

பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்

பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி, உள்ஒளி பெருக்கி

உலப்புஇலா ஆனந்தம்ஆய

தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த

செல்வமே, சிவபெருமானே,

யான்உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்,

எங்கு எழுந்துஅருளுவது இனியே.

*

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப்

பொன்நெடும் கோயிலாப் புகுந்துஎன்

என்புஎலாம் உருக்கி எளியையாய் ஆண்ட

ஈசனே, மாசுஇலா மணியே,

துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம்

தொடக்குஎலாம் அறுத்த நற்சோதீ,

இன்பமே, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

எங்கு எழுந்துஅருளுவது இனியே.

பொருளின்பம்

பிள்ளைக்கு எப்போது பசிக்கும் எனச் சரியாக நினைவு வைத்துக்கொண்டு அதற்குப் பாலூட்டுகிறவள் தாய். அந்தத் தாயைவிட அதிக அன்பை என் மீது பொழிபவனே,

பாவியாகிய என்னுடைய உடலை உருக்கி, உள்ளே ஒளியைப் பெருக்கி, அழியாத ஆனந்தம் என்கிற தேனைச் சொரிந்தவனே, பிறகு, எனக்கு அகப்படாமல் வேறு எங்கெங்கோ திரிந்தவனே, என் செல்வமே, சிவபெருமானே,

உன் பின்னாலேயே தொடர்ந்துவந்து நான் உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், இனி நீ வேறு எங்கு செல்ல இயலும்!

*

இழிவான, மாமிச நாற்றம் அடிக்கிற என்னுடைய உடலில் ஒவ்வொரு மயிர்க்காலிலும் நெகிழ்ச்சி வெளிப்படும்படி செய்தவனே, இந்த அற்ப உடலைப் பொன்னாலான உயர்ந்த கோயிலாக எண்ணி அதில் குடிகொண்டவனே, எலும்புகளையெல்லாம் உருக்கி எளிமையாக ஆண்டுகொண்ட ஈசனே, குறையில்லாத மாணிக்கமே, பிறப்பு, இறப்பு, மயக்கம் என்று தொடங்கும் துன்பங்களையெல்லாம் முற்றிலுமாக அறுத்த நல்லொளியே, சிவபெருமானே,

இன்பமே, நான் உன்னைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டேன், இனி நீ வேறு எங்கு செல்ல இயலும்!

சொல்லின்பம்

நினைந்து: நினைத்து

சாலப் பரிந்து: அதிகம் பரிவு காட்டி / அதிகம் அன்பு செலுத்தி

ஊன்: உடல்

உலப்புஇலா ஆனந்தம்: அழிவில்லாத ஆனந்தம்

புறம்புறம்: வெளியிடங்களில்

புன்புலால் யாக்கை: இழிவான, மாமிச நாற்றம் அடிக்கிற உடல்

புரை புரை கனிய: ஒவ்வொரு துளையிலும் / மயிர்க்கால்களிலும் நெகிழ்ச்சி வெளிப்பட

நெடும்கோயிலா: நீண்ட கோயிலாக

என்பு: எலும்பு

எளியை: எளிமையாக

மாசுஇலா மணி: குற்றமற்ற மாணிக்கம்

மயக்காம்: மயக்கு ஆகிய

தொடக்கு: தொடக்கம்

நற்சோதீ: நல்ல ஒளியே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.