ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 38 – திருவேசறவு - 1

திருவேசறவு என்பதைத் திரு வேசறவு என்றோ திரு ஏசறவு என்றோ சொல்லலாம். வேசறவு என்றால் மனச்சோர்வு. அதைப் போக்குமாறு பெருமானிடம் வேண்டும்

News image
Updated On :8 பிப்ரவரி 2016, 9:44 am

என். சொக்கன்

திருவேசறவு என்பதைத் திரு வேசறவு என்றோ திரு ஏசறவு என்றோ சொல்லலாம். வேசறவு என்றால் மனச்சோர்வு. அதைப் போக்குமாறு பெருமானிடம் வேண்டும் பாடல்கள் இவை எனலாம். ஏசறவு என்றால் போற்றுதல், இறைவனைப் போற்றிச் சோர்விலிருந்து விடுபடுதல் என்றும் சொல்லலாம்.

பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

217

பாடலின்பம்

இரும்புதரு மனத்தேனை ஈர்த்துஈர்த்து என்புஉருக்கிக்

கரும்புதரு சுவைஎனக்குக் காட்டினை உன் கழல் இணைகள்,

ஒருங்குதிரை உலவுசடை உடையானே, நரிகள்எல்லாம்

பெரும்குதிரை ஆக்கியவாறுஅன்றே உன் பேரருளே.

*

பண்ஆர்ந்த மொழிமங்கை பங்கா, நின் ஆள்ஆனார்க்கு

உண்ஆர்ந்த ஆர்அமுதே, உடையானே, அடியேனை

மண்ஆர்ந்த பிறப்புஅறுத்திட்டு ஆள்வாய், நீ வா என்னக்

கண்ஆர உய்ந்தவாறு அன்றே உன் கழல் கண்டே.

பொருளின்பம்

இரும்பு போன்ற மனத்தைக் கொண்டவன் நான், என்னை ஈர்த்து, என்னுடைய எலும்புகளை உருக்கி, கரும்பு போன்ற சுவையுள்ள உன்னுடைய திருவடிகளை எனக்குக் காட்டினாய்,

அலைகள் ஒன்றாகத் தவழ்கிற கங்கையாற்றைச் சடையில் கொண்டவனே, சிவபெருமானே, நரிகளையெல்லாம் உன் பேரருள் பெரிய குதிரைகளாக ஆக்கியதே!

*

இசைநயம் பொருந்திய சொற்களைப் பேசுகிற உமையம்மையை உன் உடலில் ஒரு பகுதியாகக் கொண்டவனே,

அடியவர்கள் உண்ணத் தகுந்த அமுதமே, எங்களை அடிமையாகக் கொண்டவனே, நான் மீண்டும் மண்ணில் பிறக்காதபடி என் பிறவிச்சுழலை அறுத்து ஆண்டவனே,

அன்றைக்கு நீ என்னை ‘வா’ என அழைத்தாய், அப்போது உன்னுடைய திருவடிகளைக் கண்ணாரக் கண்டேன், அதுவல்லவா நான் உய்ந்த வழி!

சொல்லின்பம்

இரும்பு தரு மனத்தேன்: இரும்பைப்போன்ற மனம் கொண்டவன்

என்பு: எலும்பு

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

ஒருங்கு திரை: ஒன்றாகச் சேர்ந்த அலைகள்

ஆக்கியவாறு: ஆக்கிய வழி

பண்: இசைப்பாடல்

உண்ஆர்ந்த ஆர்அமுதே: உண்ணத்தகுந்த அரிய அமுதமே

உடையானே: அடிமையாகக் கொண்டவனே

மண் ஆர்ந்த பிறப்பு: மண்ணில் பிறக்கும் சுழல்

உய்ந்தவாறு: உய்ந்த வழி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.