ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 38 – திருவேசறவு - 2

ஆதரவற்றவன் நான், எனக்கென்று யாரும் இல்லாமல், பிறப்பு, இறப்பு என்கிற கொடுமையான நரகத்தில் அழுந்துகிறேன்,

News image
Updated On :8 பிப்ரவரி 2016, 9:46 am

என். சொக்கன்

திருவேசறவு என்பதைத் திரு வேசறவு என்றோ திரு ஏசறவு என்றோ சொல்லலாம். வேசறவு என்றால் மனச்சோர்வு. அதைப் போக்குமாறு பெருமானிடம் வேண்டும் பாடல்கள் இவை எனலாம். ஏசறவு என்றால் போற்றுதல், இறைவனைப் போற்றிச் சோர்விலிருந்து விடுபடுதல் என்றும் சொல்லலாம்.

பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

218

பாடலின்பம்

ஆதம்இலி யான் பிறப்பு,இறப்பு என்னும் அருநரகில்

ஆர்தமரும் இன்றியே அழுந்துவேற்கு ‘ஆ!ஆ!’என்று

ஓதம்மலி நஞ்சுஉண்ட உடையானே, அடியேற்குஉன்

பாதமலர் காட்டியவாறு அன்றே எம் பரம்பரனே.

*

பச்சைத்தால் அரவுஆட்டீ, படர்சடையாய், பாதமலர்

உச்சத்தார் பெருமானே, அடியேனை உய்யக்கொண்டு

எச்சத்தார் சிறுதெய்வம் ஏத்தாதே அச்சோ என்

சித்தத்துஆறு உய்ந்தவாறு அன்றே உன் திறம்நினைந்தே.

பொருளின்பம்

ஆதரவற்றவன் நான், எனக்கென்று யாரும் இல்லாமல், பிறப்பு, இறப்பு என்கிற கொடுமையான நரகத்தில் அழுந்துகிறேன்,

கடலிலே எழுந்த விஷத்தை உண்டவனே, எங்களை அடிமையாகக் கொண்டவனே, அனைத்தையும்விட உயர்ந்த எங்கள் இறைவனே, சிவபெருமானே,

என் துன்பத்தைக் கண்டு நீ இரங்கினாயே, ‘அடடா’ என்று வருந்தி, எனக்கு உன்னுடைய திருவடி மலர்களைக் காட்டினாயே!

*

பசிய நாக்கைக் கொண்ட பாம்பைக் கையில் ஏந்தி ஆட்டுபவனே, விரிந்த சடையைக் கொண்டவனே, உன்னுடைய திருவடி மலர்களை உயர்ந்தவர்களுக்குச் சொந்தமாக்கியவனே, பெருமானே, 

சிவபெருமானே, நீ என்னை ஆட்கொண்டாய், அதனால், குறையுள்ள மற்ற சிறு தெய்வங்களை நான் போற்றி வணங்கவில்லை, எந்நேரமும் உன்னுடைய அருள் திறத்தை மட்டுமே உள்ளத்தில் எண்ணினேன், அந்த எண்ணத்தினாலே நான் உய்ந்தேன்!

சொல்லின்பம்

ஆதம்இலி யான்: ஆதரவு இல்லாதவன் நான்

அருநரகில்: கொடிய நரகத்தில்

தமர்: தமக்கு உரியவர்

ஓதம் மலி நஞ்சு: கடலில் பொங்கிய விஷம்

உடையானே: எங்களை அடிமையாகக் கொண்டவனே

பாதமலர் காட்டியவாறு: திருவடி மலர்களைக் காட்டிய தன்மை

பரம்பரனே: அனைத்தையும்விட உயர்ந்தவனே

பச்சைத் தால் அரவு ஆட்டீ: பசிய நாக்கைக் கொண்ட பாம்பை ஆட்டியவனே

படர்சடையாய்: விரிந்த சடையைக் கொண்டவனே

உச்சத்தார்: உயர்ந்தவர்

எச்சத்தார்: குறையுள்ள

ஏத்தாதே: போற்றாமல்

அச்சோ: இரக்கம்

சித்தத்து ஆறு: சிந்தனையின்படி / எண்ணத்தின்படி

உய்ந்தவாறு: உய்ந்த தன்மை

திறம்: திறன் / திறமை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.