ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 38 – திருவேசறவு - 3

ஞானத்தை உரைக்கும் நல்ல நூல்களை நான் கற்று அறியவில்லை, உன்னை எண்ணி மனம் கசிந்து உருகவில்லை. உன்னைத் தவிர பிற தெய்வங்களை நான்

News image
Updated On :8 பிப்ரவரி 2016, 9:47 am

என். சொக்கன்

திருவேசறவு என்பதைத் திரு வேசறவு என்றோ திரு ஏசறவு என்றோ சொல்லலாம். வேசறவு என்றால் மனச்சோர்வு. அதைப் போக்குமாறு பெருமானிடம் வேண்டும் பாடல்கள் இவை எனலாம். ஏசறவு என்றால் போற்றுதல், இறைவனைப் போற்றிச் சோர்விலிருந்து விடுபடுதல் என்றும் சொல்லலாம்.

பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.

219

பாடலின்பம்

கற்றுஅறியேன் கலைஞானம், கசிந்துஉருகேன், ஆயிடினும்

மற்றுஅறியேன் பிறதெய்வம், வாக்குஇயலால் வார்கழல் வந்து

உற்று இருமாந்துஇருந்தே எம் பெருமானே, அடியேற்குப்

பொன்தவிசு நாய்க்குஇடுமாறு அன்றே நின் பொன்அருளே.

*

பஞ்சுஆய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு

நஞ்சுஆய துயர்கூர நடுங்குவேன், நின்அருளால்

உய்ஞ்சேன் எம் பெருமானே, உடையானே, அடியேனை

அஞ்சேல் என்று ஆண்டவாறு அன்றே, அம்பலத்து அமுதே.

பொருளின்பம்

ஞானத்தை உரைக்கும் நல்ல நூல்களை நான் கற்று அறியவில்லை, உன்னை எண்ணி மனம் கசிந்து உருகவில்லை. உன்னைத் தவிர பிற தெய்வங்களை நான் அறிந்திருக்கவில்லை, உன்னுடைய அருள்வாக்கால் உனது திருவடிகளை வந்தடைந்தேன், அதனால் கர்வத்தோடு இருந்தேன்,

எம்பெருமானே, என் பிழைகளையெல்லாம் பொருட்படுத்தாமல், நீ எனக்கு அருள்செய்தாய், நாய்க்குப் பொன்னாலான இருக்கையை வழங்குவதுபோல் உன்னுடைய பொன்னருளை என் மீது பொழிந்தாயே!

*

பஞ்சுபோல் மென்மையான காலடிகளைக் கொண்ட பெண்களுடைய கடைக்கண்ணால் தாக்கப்பட்டு நான் துன்பப்பட்டேன், அதனால், விஷம் போன்ற துயரம் அதிகரித்தது, நான் நடுங்கினேன்,

உன்னுடைய அருளால், அந்தத் தாக்குதலில் இருந்து நான் தப்பிப் பிழைத்தேன்,

எம்பெருமானே, என்னை அடிமையாக உடையவனே, அம்பலத்தில் ஆடும் அமுதமே, என்னை ‘அஞ்சாதே’ என்று சொல்லி நீ ஆண்டாயே!

சொல்லின்பம்

கலை ஞானம்: ஞான நூல்கள்

வாக்கு இயலால்: அருள்வாக்கின் தன்மையால்

வார் கழல்: நீண்ட கழல் என்கிற ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

உற்று இருமாந்து இருந்தே: சிவபெருமானின் திருவடிகளை அடைந்து, அதனால் கர்வப்பட்டு

பொன் தவிசு: பொன்னாலான இருக்கை

இடுமாறு: இடும் தன்மை

பஞ்சு ஆய அடி மடவார் கடைக்கண்: பஞ்சுபோன்ற மென்மையான காலடிகளைக் கொண்ட பெண்களின் ஓரக்கண் பார்வை

இடர்: துன்பம்

நஞ்சு ஆய துயர்கூர: விஷம்போன்ற துன்பம் அதிகரிக்க

உய்ஞ்சேன்: உய்ந்தேன் / பிழைத்தேன்

உடையானே: என்னை அடிமையாகக் கொண்டவனே

அஞ்சேல்: அஞ்சாதே

ஆண்டவாறு: ஆண்ட தன்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.