பகுதி 38 – திருவேசறவு - 4
தேவர்களாலும் அறிய இயலாதவனே, தென்திசையில் திகழும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, எம்பெருமானே,


திருவேசறவு என்பதைத் திரு வேசறவு என்றோ திரு ஏசறவு என்றோ சொல்லலாம். வேசறவு என்றால் மனச்சோர்வு. அதைப் போக்குமாறு பெருமானிடம் வேண்டும் பாடல்கள் இவை எனலாம். ஏசறவு என்றால் போற்றுதல், இறைவனைப் போற்றிச் சோர்விலிருந்து விடுபடுதல் என்றும் சொல்லலாம்.
பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.
இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
என்பாலைப் பிறப்புஅறுத்துஇங்கு இமையவர்க்கும் அறியஒண்ணாத்
தென்பாலைத் திருப்பெருந்துறைஉறையும் சிவபெருமான்
அன்பால்நீ அகம்நெகவே புகுந்துஅருளி ஆட்கொண்ட
என்பாலே நோக்கியவாறு அன்றே எம்பெருமானே.
*
மூத்தானே, மூவாத முதல்ஆன முடிவுஇல்லா
ஓத்தானே, பொருளானே, உண்மையுமாய் இன்மையுமாய்ப்
பூத்தானே, புகுந்துஇங்குப் புரள்வேனைக் கருணையினால்
பேர்த்தேநீ ஆண்டவாறு அன்றே எம்பெருமானே.
பொருளின்பம்
தேவர்களாலும் அறிய இயலாதவனே, தென்திசையில் திகழும் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, எம்பெருமானே,
நீ என்னுடைய பிறப்பை அறுத்து அருள்செய்தாய், அன்பினால் எனக்குள் குடிபுகுந்தாய், உள்ளம் நெகிழ அருளி ஆட்கொண்டாய், என்னைக் கருணையோடு நோக்கினாயே.
*
அனைத்துக்கும் மூத்தவனே, மூப்பில்லாத இளையவனே, முதல்வனே, முடிவில்லாத, ஓதப்படுகின்ற வேதங்களாகத் திகழ்கிறவனே, அவற்றின் பொருளாக விளங்குகிறவனே, உண்மையாகத் தோன்றிய நிலையிலும் தோன்றாத இன்மைநிலையிலும் திகழ்கிறவனே, எம்பெருமானே,
சிவபெருமானே, இந்த உலகத்தில் புகுந்து, துன்பத்தில் புரள்கிற என்னை உன்னுடைய கருணையினால் மாற்றி நீ ஆண்டாயே!
சொல்லின்பம்
என்பாலை: என்பால் / என்மீது
இமையவர்க்கும் அறியஒண்ணா: தேவர்களும் அறிய இயலாத
தென்பாலை: தென்பால் / தெற்குத்திசையில்
உறையும்: எழுந்தருளியிருக்கும்
அகம்நெகவே: உள்ளம் நெகிழும்படி
என்பாலே: என்பால் / என்மீது
நோக்கியவாறு: பார்த்த தன்மை
மூவாத: வயது முதிராத / இளமையான
ஓத்தானே: ஓதப்படும் வேதமாகத் திகழ்கிறவனே
பேர்த்தே: மாற்றியே
ஆண்டவாறு: ஆண்ட தன்மை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...