ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 39 – திருப்புலம்பல் - 1

சிவபெருமானைத் தான் பிரிய நேர்ந்ததை எண்ணி மாணிக்கவாசகர் வருந்திப் பாடிய பாடல்கள் இவை.

News image
Updated On :13 பிப்ரவரி 2016, 10:03 am

என். சொக்கன்

சிவபெருமானைத் தான் பிரிய நேர்ந்ததை எண்ணி மாணிக்கவாசகர் வருந்திப் பாடிய பாடல்கள் இவை.

திருவாரூரில் அருளப்பட்டவை. மூன்று பாடல்களின் தொகுப்பு இது.

222

பாடலின்பம்

பூங்கமலத்து அயனொடு மால் அறியாத நெறியானே,

கோங்குஅலர்சேர் குவிமுலையாள் கூறா, வெண்ணீறுஆடி

ஓங்கு எயில்சூழ் திருவாரூர் உடையானே, அடியேன்நின்

பூங்கழல்கள் அவைஅல்லாது எவை யாதும் புகழேனே.

*

சடையானே, தழல்ஆடீ, தயங்கு மூஇலைச்சூலப்

படையானே, பரஞ்சோதீ, பசுபதீ, மழவெள்ளை

விடையானே, விரிபொழில்சூழ் பெருந்துறையாய், அடியேன் நான்

உடையானே, உனைஅல்லாது உறுதுணை மற்றுஅறியேனே.

*

உற்றாரை யான்வேண்டேன், ஊர்வேண்டேன், பேர்வேண்டேன்,

கற்றாரை யான்வேண்டேன், கற்பனவும் இனிஅமையும்,

குற்றாலத்து அமர்ந்துஉறையும் கூத்தா, உன் குரைகழற்கே

கற்றுஆவின் மனம்போலக் கசிந்துஉருக வேண்டுவனே.

பொருளின்பம்

தாமரை மலரில் அமர்ந்த பிரம்மா, திருமால்  இருவராலும் அறிய இயலாத பண்புநெறியைக் கொண்டவனே,

கோங்கம்பூவைப் போன்ற குவிந்த மார்பகங்களைக் கொண்ட பார்வதியைத் தன் உடலில் ஒரு பகுதியாகக் கொண்டவனே, வெண்ணீறு அணிந்தவனே, உயர்ந்த மதில்சுவர்களால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளியிருப்பவனே, சிவபெருமானே,

உன்னுடைய அடியவனான நான், உனது மலர்த் திருவடிகளைத் தவிர வேறெதையும் போற்றிப் புகழமாட்டேன்.

*

சடைமுடி கொண்டவனே, நெருப்பை ஏந்தி நடனம் புரிபவனே, ஒளிவீசும் மூன்று பிரிவுகளைக் கொண்ட சூலத்தைப் படையாகக் கொண்டவனே, பரஞ்சோதியே, பசுபதியே, இளமையான வெண்ணிறக் காளையைத் தனக்கு வாகனமாகக் கொண்டவனே, விரிந்த சோலைகளால் சூழப்பட்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவனே,

என்னை அடிமையாகக் கொண்டவனே, சிவபெருமானே, உன்னைத் தவிர எனக்கு உறுதுணையாக இருப்பவர் யார்? அப்படி வேறு யாரையும் நான் அறியேன்.

*

எனக்கு வேறெதுவும் வேண்டாம், உறவினர்கள் வேண்டாம், ஊர் வேண்டாம், பேர் வேண்டாம், கற்றவர்கள் நட்பு வேண்டாம், நான் கற்க வேண்டியது உன்னுடைய பெருமையைத்தான், அதற்கு நீ அருள்செய்.

திருக்குற்றாலத்திலே எழுந்தருளியிருக்கும் கூத்தனே, ஒலிக்கின்ற கழல்களை அணிந்த உன்னுடைய திருவடியை மட்டுமே நான் எண்ண வேண்டும், தாய்ப்பசு கன்றின் மீது வைத்துள்ள அன்பைப்போல, என் உள்ளம் உன்னை எண்ணி நெகிழ வேண்டும், இதுவே என் வேண்டுதல்.

சொல்லின்பம்

கமலத்து அயன்: தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மன்

நெறியானே: பண்புநெறிகளைக் கொண்டவனே

கோங்குஅலர்சேர் குவிமுலையாள் கூறா: கோங்கம்பூவைப் போன்ற குவிந்த மார்பகங்களைக் கொண்டவள் / பார்வதி தேவியை உடலில் ஒரு பகுதியாகக் கொண்டவனே

ஓங்கு எயில்: உயர்ந்த மதில்சுவர்கள்

கழல்கள்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

தழல்: நெருப்பு

தயங்கு மூவிலை சூலப் படையானே: ஒளி வீசும் மூன்று பிரிவுகளைக் கொண்ட சூலப்படையை ஏந்தியவனே

மழ: இளமையான

விடையானே: காளை வாகனத்தைக் கொண்டவனே / சிவபெருமானே

விரிபொழில்: விரிந்த சோலைகள்

உறுதுணை: உற்ற துணை / சிறந்த நண்பர்

உற்றார்: உறவினர்

உறையும்: வாழும் / எழுந்தருளியிருக்கும்

குரைகழல்: சத்தமிடும் கழல் என்கிற ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

கற்று ஆ: கன்று உள்ள பசு

வேண்டுவனே: வேண்டுவேனே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.