பகுதி 40 – குலாப் பத்து - 5
வீணான நிலத்தில் நடப்பட்ட செடியைப்போல் நான் பயனின்றிக் கிடந்தேன்,


குலாவுதல் என்றால் மகிழ்ச்சியாக இருத்தல் என்று பொருள். தில்லையில் சிவபெருமானின் ஆடலைக்கண்டு மகிழ்ந்தது பற்றி மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் இவை.
‘குலா’ என்ற சொல்லுக்கு விளக்கம் / விளங்கித் திகழ்தல் என்ற பொருளும் உண்டு. தில்லையில் சிவபெருமான் சிறப்பாகத் திகழ்வது பற்றி மகிழ்ந்து பாடிய பாடல்கள் என்றும் சொல்லலாம்.
இவை தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
பாடலின்பம்
பாழ்ச்செய் விளாவிப் பயன்இலியாய்க் கிடப்பேற்குக்
கீழ்ச்செய் தவத்தால் கிழியீடு நேர்பட்டுத்
தாள்செய்ய தாமரைச் சைவனுக்குஎன் புன்தலையால்
ஆள்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
*
கொம்மை வரிமுலைக் கொம்புஅனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்(கு)
இம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்குஒழிக்கும்
அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.
பொருளின்பம்
வீணான நிலத்தில் நடப்பட்ட செடியைப்போல் நான் பயனின்றிக் கிடந்தேன்,
முற்பிறவியில் நான் செய்த தவத்தால், பொற்கிழிபோல் சிவபெருமான் என்கிற செல்வம் எனக்குக் கிடைத்தது, செந்தாமரை போன்ற திருவடிகளைக் கொண்ட அந்தச் சைவனை என்னுடைய அற்பமான தலையால் வணங்கித் தொண்டு செய்யத் தொடங்கினேன்,
அத்தகைய ஒளி நிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே.
*
திரண்ட, வரிகளைக் கொண்ட மார்பகங்களையும், கொம்பு போன்ற உடலையும் கொண்ட பார்வதியைத் தன் உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவன் சிவபெருமான். அவனுக்குத் தூய்மையான உள்ளத்துடன் நான் திருப்பணிகளைச் செய்வேன்,
அதனால், இந்தப் பிறவியில் எனக்கு வரக்கூடிய தீவினைப் பயன்கள் அனைத்தையும் அவன் அழித்துவிடுவான்,
தாய் போன்ற ஒளி நிறைந்த தில்லை ஆண்டானை நான் பற்றிக்கொண்டேனே.
சொல்லின்பம்
பாழ்ச்செய் விளாவி: பாழான வயலைப் பண்படுத்தி
பயன்இலி: பயன் இல்லாதவன்
கீழ்ச்செய் தவத்தால்: முன்பு செய்த தவத்தால்
கிழியீடு: பொற்கிழி / பெரும்செல்வம்
தாள் செய்ய தாமரை: சிவந்த தாமரை போன்ற திருவடிகள்
சைவன்: சிவபெருமான்
புன் தலையால்: என் அற்பமான தலையால்
ஆள்செய்: தொண்டு செய்யவைக்கிற
குலாத்தில்லை ஆண்டான்: விளங்கும் தில்லை ஆண்டவன் / சிவபெருமான்
கொம்மை வரி முலை: திரண்ட, வரிகளைக் கொண்ட மார்பகம்
கொம்பு அனையாள் கூறன்: கொம்பு போன்ற பார்வதியைத் தன் உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவன் / சிவபெருமான்
செம்மை: சிறப்பு
இம்மை தரும்பயன்: இந்தப் பிறவியில் செய்யும் வினைகள் / அவற்றின் பயன்
ஈங்கு ஒழிக்கும்: இங்கேயே ஒழித்துவிடும்
அம்மை: தாய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...