தன்னை உணர்தலே தரணியை வெல்ல வழி!

"என்னை ஆயிரம் பேர் நம்பலாம்; அது எனக்குப் பலமல்ல. ஆனால், என்னை நானே நம்புவது தான் எனக்குப் பலம்"
Published on
Updated on
2 min read

"என்னை ஆயிரம் பேர் நம்பலாம்; அது எனக்குப் பலமல்ல. ஆனால், என்னை நானே நம்புவது தான் எனக்குப் பலம்"

தாயின் கருவுறையும் பூமித்தாயின் படுக்கை அறையுமே, ஒரு மனிதனின் வாழ்க்கைக் காலம் ஆகும். அதாவது தாயின் கருவறையிலிருந்து வெளிவந்து, வாழத் தொடங்கும் மனிதன், பூமித்தாயைச் சென்றடையும் வரை உள்ள காலமே அவனது வாழ்க்கைக் காலம்.

இந்தக் காலத்திற்கு இத்தனை ஆண்டுகள்தான் வரம்பு என்பது கிடையாது. இந்தக் காலம் நொடிப் பொழுதாகவும் இருக்கலாம். நாடி தளர்ந்து நடைப்பினமாகி நிற்கும் காலமாகவும் இருக்கலாம்! அதாவது, மிக மிகக் குறுகியும் மிக மிக நீண்டும் இருக்கும் தன்மை உடையதே வாழ்க்கைக் காலம் ஆகும்.

நிர்ணியிக்கப்படாத இந்தக் காலவரம்பில் தான் ஒவ்வொரு வரும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். அந்த வாழ்க்கையில் எள்லோருக்குமே ஆசைகளும், எதிர்ப்பார்புகளும் ஏராளம். கனவுகளும், கற்பனைகளும் கைகோர்த்து நிற்கும்.

மனிதர்களாகப் பிறந்துவிட்ட ஒவ்வொருவரும் வாழ்க்கை என்னும் நடத்தில் பயணம் செய்தே ஆக வேண்டும். இதில், எவரும் விதிவிலக்குப் பெற்றுவிட முடியாது. ஆனால், வாழ்க்கைப் பயணம் மிகவும் சிரமமானது; சிக்கலானது. அதே சமயம் செழுமையையும், சிறப்பையும் தரக்கூடியது. வாழ்க்கையில் அளப்பரிய அனுபவங்களைப் பெறுகிறோம். பலரிடம் பேசிப் பழகுவதன் மூலம் அவர்களது குணநலன்கள், ஆற்றல், திறமை போன்றவற்றை நம்மால் நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. இத்தகைய அனுபவம் நமக்குத் தேவைதான். இதனால், நமக்குப் பயனும் கிட்டும். ஆனால், பிறரது திறமையின் மீதும், ஆளுமையின் மீதும் நாம் நம்பிக்கை வைக்க வைக்க நாளாக, நாளாக நமக்குள் இருப்பதை மறந்து விடுகிறோம். எதற்கெடுத்தாலும் அவரிடம் ஒரு வார்த்தை கேட்கலாமே; இருவரிடம் ஒரு வார்த்தை கேட்கலாமே" என்ற நிலைமைக்கு மனத்தளவில் தள்ளப்பட்டு விடுகிறோம். இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

நம்முடைய சுயேச்சையான எண்ணம், சிந்தனை, செயல் ஆகிய எல்லாமே தடைப்பட்டுப் போகிறது. ஒரு சின்னஞ்சிறு காரியத்தைச் செய்வது என்றால் கூட அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று நம்மால் சிந்திக்க முடியாமல் போகிறது. தயக்கம் மனதில் தோன்றி நம்மைத் தடுத்துக் குழப்பி விடுகிறது. எதிர்ப்பார்ப்பும் காத்திருப்பதுமே நமது வேலையாகி விடுகிறது. இதனால், எடுத்த காரியத்தை முடிக்க முடியாமல், எடுப்பார் கைப்பிள்ளையாகி மாறிவிடுகிறோம்.

இவையெல்லாம் எதனால் நிகழ்கின்றன? நமக்குள்ளேயே கேள்விகளை நாமே எழுப்ப வேண்டும். அக்கேள்விகளுக்கு விடையும் காண வேண்டும். அதாவது, நான் யார்? எனக்குள் உள்ள திறமைகள் என்ன? எதையும் சமாளிக்கும் திறன்கள் என்னிடம் உள்ளதா? என்று ஒவ்வொருவரும் தங்களுக்குள் கேள்விகளை எழுப்பினால் போதும். நமது மனதில் உறுதி பிறந்து நம்மை உற்சாகப்படுத்தி விடும். இதைத்தான் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு கிரேக்க நாட்டு தத்துவஞானி சாக்ரட்டீஸ் இவ்வாறு கூறினான்.

"இளைஞனே! உனக்கு தரணியை வெற்றி கொள்ள ஆசைதான். அது தவறில்லை. ஆனால், தரணியை எப்படி வெற்றி கொள்வது என்று அறிந்துகொள்வதற்கு முன், உன்னையே நீ அறிந்து கொள். தன்னை உணர்தலே தரணியை வெல்ல வழி" என்று கூறிச் சென்றுள்ளார் தத்துவஞானி சாக்ரட்டீஸ்.

ஆனால், இன்று நம்மில் எத்தனை பேர் சாக்ரட்டீசின் கருத்துக்களை ஏற்று, அதன்படி செயல்படுகிறோம்? என்று கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில் கேள்விக்குறியாகத் தான் இருக்கும். அதாவது, இன்று பலரும் தங்களை அறிந்து கொள்வதைவிட, தங்களை மறந்து கொள்வதிலேயே அதிக அக்கறை காட்டுகிறார்கள். பிறரைப்பற்றிப் பேசி, கொள்வோரும் உண்டு.

எப்படி என்று பார்ப்போம்..!

ஒரு நாள், நான்கு பேர் அழகான சோலை ஒன்றில் கூடினர். அவர்கள் தங்களது எதிர்காலம் குறித்துப் பேசினார்களா, என்றால் அதுதான் இல்லை. ஆனால், அவர்கள் அங்கு இல்லாத ஒரு நபரைப் பற்றி இட்டுக்கட்டி ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த நால்வரில் ஒருவன் தனக்கு வேலை இருப்பதாகக் கூறிவிட்டு அவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டான். நால்வரில் ஒருவன் போன பிறகு அங்கிருந்த  மூவரும் தங்களைப் பற்றிப் பேசினார்களா என்றால், அதுதான் இல்லை. பின்னர் யாரைப் பற்றிப் பேசினார்கள் அவர்கள்? கொஞ்ச நேரத்திற்கு முன்பு அவர்களிடமிருந்து விடை பெற்றுச் சென்றானே நாலாமவன், அவனைப் பற்றியே அம்மூவரும் தங்களுக்கிடையே காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களது பேச்சில் அவனது நடத்தை முக்கிய இடம் பெற்றது. இன்னும் சில நிமிடங்கள் கழிந்தன. அங்கிருந்த மூவரில் மற்றொருவனும் சென்றுவிட்டான். அப்போது அங்கு இரண்டு பேரே இருந்தனர். அந்த இரண்டு பேரும் சற்று முன்னர் போனவனைப் பற்றிப் புழுதிவாரித் தூற்ற ஆரம்பித்தனர்.

அடுத்த சில நிமிடங்களில்...

அங்கிருந்த இரண்டு பேரில் ஒருவன் எழுந்து சென்று விட்டான். இனி, அங்கிருந்தவன் ஒருவன்தான். அவன் யாரைப் பற்றிப் பேச முடியும். பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லையே... அங்கிருந்த போன மூன்று பேரைப் பற்றியும் தனக்குத்தானே உளறிக்கொண்டிருந்தான். தன்னந்தனியே, அமர்ந்து தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவனைப் பார்த்த சிலர், அவனை ஒரு மனநோயாளி என்று முடிவு கட்டி அவனிடம் பேசாமல் ஒதுங்கியே சென்றனர்.

இதிலிருந்து நாம் அறிந்து கொள்வதென்னை?  தன்னைப் பற்றி எதுவும் சிந்திக்கமால், பிறரது திறமையும், ஆற்றலையும் பற்றிக் கேலியும் கிண்டலும் செய்யக் கூடியவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களேயாவர்.

இப்படிப்பட்ட இளைஞர்களைத் தம் காலத்தில் பார்த்த கிரேக்கத் தத்துவ ஞானி சாக்ரட்டீஸ், "இளம் பிஞ்சுகளே! உங்களையே நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்" என்று ஞானவேள்வி செய்தார். எனவே, நம்முடைய திறமையையும், ஆற்றலையும் நாம் தெரிந்தும் அறிந்தும் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் வெற்றியை எளிதாக எட்ட முடியும்.

முயற்சித்துதான் பாருங்களேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com