வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குற மாதா? சுர மாதா?

ஒய்.ஏ.சி.எம். என்பது இசைக்காக இணைந்து செயல்படும் இளைஞர்களின் குழு. இதன் இருபத்தைந்தாம் ஆண்டு, வெள்ளி விழாவை, மிகப் பெரிய அளவில் கொண்டாடினர், இன்றைய தலைவரும், செயலரும் உறுப்பினர்களும். இந்தக் குழுவுக்க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:13 pm

சாருகேசி

ஒய்.ஏ.சி.எம். என்பது இசைக்காக இணைந்து செயல்படும் இளைஞர்களின் குழு. இதன் இருபத்தைந்தாம் ஆண்டு, வெள்ளி விழாவை, மிகப் பெரிய அளவில் கொண்டாடினர், இன்றைய தலைவரும், செயலரும் உறுப்பினர்களும். இந்தக் குழுவுக்கு அன்று வித்திட்டவர்கள், வீணைக் கலைஞர் பி.கண்ணன், உண்ணிகிருஷ்ணன், விஜய் சிவா, டி.எம். கிருஷ்ணா போன்ற பிரபலங்கள்தாம்!

இவர்களுடைய ஒரு வார விழாவில் ஒரு நாள் மட்டுமே இசையை ரசிக்க முடிந்தது. இளைஞர் பிரசன்னா வெங்கட்ராமன் நிகழ்ச்சி அது. இவருடைய இசை நிகழ்ச்சி என்றால், நம்பிப் போகலாம்; ஏமாற்றமாட்டார். ஆனால் சிலசமயம் அசத்திவிடுவார்!

இன்னும் கொஞ்சம் கூடப் பாட மாட்டாரா? என்றிருந்த நிலையில், கச்சேரியை முடித்துக் கொண்டார்.

ராமா நீ பை (கேதாரம்), தாரிணி தெலுசு (சுத்த சாவேரி), யக்ஞாதுல (ஜெயமனோகரி), எந்துகு தயராதுரா (தோடி) என்று நான்கு தியாகராஜர் கீர்த்தனைகள். தோடி ஆலாபனையில் தம் கற்பனை வளத்தை முழுவதும் அளித்தவர், நிரவலிலும், சுவரம் பாடும்போதும், செம்மங்குடியை நினைவுபடுத்தினார். குரு சஞ்சய் சுப்பிரமணியத்தின் பாணியையும் விட்டுவிடவில்லை. முத்துசாமி தீட்சிதரின் பாடல் "ஸ்ரீராமம் ரவி குலாதி' (நாராயண கெüளை) தவிர, "காம்போதி'யிலும் பின்னர் "காபி'யிலும் "விழிக்குத் துணை' விருத்தம்; தொடர்ந்து "பழனி நின்ற பரமன்' என்ற பாபநாசம் சிவனின் பாடல்- காபி ராகத்தில். பின்னர் "நாடித் தேடி' என்ற பாகேஸ்ரீ ராக திருப்புகழ்.

வித்தைகளோ, ஜாலக்குகளோ, அனாவசிய சாகசங்களோ செய்யாமலே ரசிகர்களைக் கவரமுடியும் என்பதற்கு பிரசன்னா வெங்கட்ராமன் ஓர் உதாரணம். தன் அப்பழுக்கற்ற இசைத் திறமை மீது மட்டுமே நம்பிக்கை கொண்ட பிரசன்னாவுக்கு, அன்று பக்கவாத்தியம் வாசித்தவர்கள்: வயலினில் கணேஷ் பிரசாத், மிருதங்கத்தில் சங்கர நாராயணன், இருவரின் ஒத்துழைப்பும் பிரசன்னாவுக்கு வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்தது.

அனிருத் வெங்கடேசுவரன் அமெரிக்காவில் பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பயிலும் மாணவர் (காதுகளில் பளிச்சிடும் கடுக்கன்!) மியூசிக் சர்க்கிள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இவர் பாட, முன் வரிசையில் அமர்ந்து, பெருமையுடன் ரசித்தார் இந்திய குரு பி.எஸ்.நாராயணசாமி. தமிழாகட்டும் தெலுங்கு ஆகட்டும், சமஸ்கிருதம் ஆகட்டும், கீர்த்தனைகளைப் பாடும்போது அப்படி ஒரு சொல்- சுத்தம்!

பைரவி ராக "விரிபோணி' வர்ணத்தில் இருந்து பூர்ணசந்திரிகா ராக தில்லானா வரை, அப்படி ஒரு விறுவிறுப்பு. குரலில் இனிமை இருப்பது மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட். இரண்டு தீட்சிதர் கிருதிகள்: ஸ்ரீ மகா கணபதி (கெüளை ராகம்), ஸ்ரீராமச்சந்த்ரோ (ஸ்ரீரஞ்சனி), இரண்டு தியாகராஜர் கீர்த்தனைகள்: ஸôலகல்ல (ஆரபி), ஈசபாகிமாம் (கல்யாணி-லால்குடி பஞ்சரத்னத்தில் ஒன்று). கோட்டீசுவரய்யரின் சலநாட்டை ராகப் பாடல் "ஏதய்யா கதி'யையும் சிறப்பாகப் பாடினார்.

அனிருத்தும் தோடியை விடவில்லை. "குன்றம் குடி கொண்ட வேலவா' என்ற பாபநாசம் சிவனின் பாடலைப் பாடும்போது நண்பர் கிருஷ்ணன், ""குற மாது மருவும் திருப்பரங்குன்றம் குடிகொண்ட வேலவா' என்று இருக்கிறதே! திருப்பரங்குன்றத்தில், குறமாது வள்ளி ஏது? சுர (தேவர்குல) மாது என்றால் தெய்வானை என்றாவது வைத்துக் கொள்ளலாம். பாபநாசம் சிவன் தவறு செய்யமாட்டாரே? எது சரி?'' என்று ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார்! இந்தக் கேள்வி நம்மைக் குடைந்து கொண்டிருந்தபோதே, தர்பாரி கானடா ராகத்தில், நாராயண தீர்த்தரின் "கோவர்த்தன கிரிதர' பாடி தன் இசை மூலம் நம்மை திசை திருப்பிவிட்டார் அனிருத்.

"ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பால் இருந்துகொண்டு எப்படித்தான் இந்த இளைஞர்கள் கடினமான கர்நாடக இசையை இந்தளவுக்கு வசப்படுத்தி வைத்துக்கொள்கிறார்களோ?!' என்ற வியப்பு எழுகிறது. வயலின் வாசித்த இளைஞர் ராகுலின் வாசிப்பு ரசிக்கும்படியாகவே இருந்தது. ஆனால் மிருதங்கம் வாசித்த கே.எஸ்.ரமணா தடாலடியாக வாசித்திருக்க வேண்டாம்!

சென்னை புத்தகச் சங்கத்தில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.விஜயராகவன் "பாம்புகள் பற்றி 400 கேள்விகள்' என்ற தன் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, சுவாரசியமாக உரையாற்றினார். இவர் சென்னை, பாம்புப் பண்ணையின் தலைவர். நகைச்சுவையுடன் பேசும் விஜயராகவன் அன்று கடிக்கும் பாம்புகள், கடிக்காத பாம்புகள், விஷமுள்ளவை, விஷமில்லாதவை என்று வகைப் பிரித்துச் சொன்னாலும், எதிரே ஒரு பாம்பைக் கண்டால், இதை எல்லாம் யோசித்துப் பார்ப்போமா?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.