சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

பகைச்சுவை இல்லாத நகைச்சுவை!

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 54-ஆவது ஆண்டு நினைவு விழா சென்னை, பாரதீய வித்யா பவனில் சமீபத்தில் நடந்தது. பல்வேறு தமிழ்த

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 5:48 pm IST

கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 54-ஆவது ஆண்டு நினைவு விழா சென்னை, பாரதீய வித்யா பவனில் சமீபத்தில் நடந்தது.

பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்ற கலைவாணரின் நகைச்சுவை காட்சிகளை தொகுத்து திரையிட்டு பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியதுடன் நிகழ்ச்சி தொடங்கிற்று. உபயம்: மேஜர்தாசன். நாடக மேடைகளிலும் திரைப்படங்களிலும் கலைவாணரின் நகைச்சுவை எந்தளவுக்கு ஆரோக்கியமானதாக இருந்தது என்பதைப் பார்க்கமுடிந்தது.

கலைவாணரின் நகைச்சுவை உணர்வையும் உதவி மனப்பான்மையையும் வில்லுப்பாட்டின் மூலம் சுவையாக விளக்கினார் சுப்பு ஆறுமுகம். "என்னிடம் கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லும் நிலையை உருவாக்கிவிடாதே... இறைவா என்னை அழைத்துக் கொள்...' என்று கலைவாணர் ஒருசமயம் சொன்னதை சுப்புஆறுமுகம் நினைவு கூர்ந்தது நெகிழ்ச்சியாக இருந்தது!

""பகைச்சுவை இல்லாத நகைச்சுவை கலைவாணருடைய நகைச்சுவை. பொதுவாக வலது கை கொடுப்பது இடது கை அறியாது என்பார்கள். ஆனால் கலைவாணருக்கு இது பொருந்தாது. ஏனென்றால் அவர் இரண்டு கைகளாலும் வாரி வாரி வழங்கியவர்'' என்று சுப்புஆறுமுகம் வில்லுப்பாட்டில் கூறியபோது, அரங்கில் எழுந்த கைதட்டல் அடங்குவதற்கு சிறிது நேரம் ஆனது!

இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் இசையமைப்பாளர் தேவா, ""கலைவாணர் திரைப்படக் காட்சிகளில் மட்டும்தான் என்றில்லை. நடைமுறை வாழ்விலேயே யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் பேசாத இயல்புடையவர். ஒருமுறை அவருடைய நாடகத்தில் வழக்கமாக மன்மதன் வேடத்தில் நடிப்பவருக்கு அன்றைக்கு கடுமையான வயிற்றுப் போக்கு. அதனால் மன்மதன் வேடத்திற்கு இன்னொருவரை ஏற்பாடு செய்திருந்தனர். அவரோ பார்ப்பதற்கு எலும்பும்தோலுமாக காட்சியளித்தார். அவரைப் பார்த்த கலைவாணர் ""இவரைத்தான் மன்மதன் வேடத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்களா? சரி.. மன்மதன் மாறுவேடத்தில் வந்திருக்கிறார்னு சொல்லிடுவோம்...'' என்றார். இப்படித்தான் அவருடைய நகைச்சுவை இருக்கும் என்றார்.

மன்றத்தின் உறுப்பினர் செயலாளரான நடிகை சச்சு, ""குழந்தை நட்சத்திரமாக நான் நடிப்பதற்கு முதன்முதலாக வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் கலைவாணர்தான். நாங்கள் பொறுப்பேற்று நடத்தும் முதல் விழாவே கலைவாணரின் நினைவு நாள் விழா என்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். எப்போதும் இல்லாத அளவுக்கு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பாக இந்தாண்டு, பிரபல செவ்வியல் இசைக் கலைஞர்களையும் அறிமுகக் கலைஞர்களையும் கிராமியக் கலைஞர்களையும் கொண்டு இசை, நடன விழாவை பத்துநாள்களுக்கு நடத்தவிருக்கிறோம். நம்முடைய பாரம்பரியக் கலைகளை வெளிப்படுத்தும் அசல் விழாவாக அது இருக்கும்'' என்றார்.

பழம்பெறும் நடிகர் "காக்கா' ராதாகிருஷ்ணன், ""கலைவாணரின் நகைச்சுவைக்கு ஏற்றாற்போன்ற பாடல் வரிகளைப் பொருத்தமாகக் கொடுத்தவர் உடுமலை நாராயண கவி. புராணப் படங்கள் கோலோச்சிய அந்தக் காலத்தில் அந்தப் படங்களையே "பகடி' செய்து கலைவாணர் உருவாக்கிய பாத்திரங்கள் மிகவும் பிரசித்தமானவை. நந்தனாருக்கு மாற்றாக கிந்தனார். அரிச்சந்திராவுக்குப் பதில் சந்திர ஹரி இவ்வாறு நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய நகைச்சுவையில் விரசம் இருக்காது விஷயம் இருக்கும்!''

என்றார்.

இந்த நிகழ்ச்சிகள் நடந்துமுடிவதற்குள்ளாகவே இரவு 9-30 மணி ஆகிவிட்டது. அரைமணிநேரத்தில் "பணம்' ஓரங்க நாடகத்தை அருமையாக நிகழ்த்தினர். மற்றவர்களுக்கு உதவுவதில்தான் பணத்தின் மதிப்பு இருக்கிறது. இல்லையென்றால் அது வெறும் காகிதம்தான் என்னும் கருத்தைச் சொல்லியது நாடகம். கலைவாணரின் ஈகைக் குணத்தை கருவாகக் கொண்டிருந்தது நாடகம். நேரம் கடந்தாலும் பொறுமையாக நாடகத்தை அரங்கத்தில் இருந்த சிலபேர் கடைசி வரை இருந்து ரசித்து, கலைஞர்களை மரியாதைப்படுத்தினர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.