பணியை மறுஉறுதி செய்வது விருது!
இளைய தலைமுறை இசைக் கலைஞர்களில் வித்தியாசமானவர் சஞ்சய் சுப்பிரமணியன். இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் பாட ஒப்புக்கொள்ள மாட்டார். ப


இளைய தலைமுறை இசைக் கலைஞர்களில் வித்தியாசமானவர் சஞ்சய் சுப்பிரமணியன். இசை நிகழ்ச்சிகளில் தமிழ்ப் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் பாட ஒப்புக்கொள்ள மாட்டார்.
புத்தகப் பிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகும் நூல்களைப் படித்துத் தம் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வார்.
சென்ற வருடத்திலிருந்து அமால்கமேஷன்ஸ் சிவசைலம் அவர்களின் காலம் சென்ற மனைவி இந்திரா சிவசைலம் பெயரால், சென்னை, மியூசிக் அகாதெமியின் சார்பில் இளைய தலைமுறையில் முத்திரை பதித்துவரும் இசைக்கலைஞர் ஒருவருக்கு "இந்திரா சிவசைலம் விருது' வழங்க முன்வந்தார்கள். இந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று நடைபெறும் விழாவில், சஞ்சய் சுப்பிரமணியனுக்கு பதக்கமும் பாராட்டும் வழங்கப்பட இருக்கின்றன.
பெங்களூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த சஞ்சயுடன் ஒரு பேட்டி:
முதலில் பாராட்டுகள், சஞ்சய் இது என்ன விருதா, பட்டமா?
பாராட்டுகளுக்கு நன்றி. இதில் விருது, பட்டம் எதுவும் இல்லை. இது சிவசைலம் குடும்பத்தினர் வருடம் தோறும் ஓர் இசைக்கலைஞருக்கு வழங்கும் பாராட்டு விழா. மியூசிக்
அகாதெமியின் வாயிலாக அதை வழங்கும்போது அதன் மதிப்பு கூடுகிறது.
இதற்கு முன்பும் உங்களுக்குப் பட்டங்களும் விருதுகளும் வந்திருக்கின்றன, இல்லையா?
ஆமாம், பாரத் கலாசார் "யுவகலாபாரதி', கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் "இசைப்பேரொளி', பார்த்தசாரதி சபாவின் "சங்கீதகலா சாரதி', தமிழ்நாடு அரசின் "கலைமாமணி', தில்லி சன்ஸ்கிருதி பவுண்டேஷனின் "சன்ஸ்கிருதி' என்று ஒவ்வொரு கட்டத்தில், நான் கடந்து வந்த என் வளர்ச்சிப் பாதையில் எனக்கு கவுரவங்கள் கிடைத்திருக்கின்றன.
இந்தப் பட்டங்கள், விருதுகள் எல்லாம் உங்களுக்கு எப்படியிருக்கின்றன வெறும் கௌரவம் என்று மட்டுமே கொள்ளலாமா?
இவை எல்லாம் ஆமோதிப்புகள்தாம். அங்கீகாரம்தான். இந்த ஆமோதிப்புகள், ஈடுபட்டிருக்கும் ஒரு தொழிலில் உங்கள் உயர்வை அல்லது உன்னதத்தை அங்கீகரித்து அளிக்கப்படுபவை என்றுதான் நான் எடுத்துக்கொள்கிறேன். அந்த ஆமோதிப்பை, கௌரவம் என்று நீங்கள் குறிப்பிடுவதையும் ஏற்றுக்கொள்கிறேன். அப்படி வகைப்படுத்துவது அவரவர் மனப்போக்கைப் பொறுத்தது. ஆனால், நாம் செய்யும் பணியைத் தொடர மறு-உறுதி செய்வது என்ற வகையில் அதை ஆமோதிப்பு என்றே நான் கருதுகிறேன்.
அந்த ஆமோதிப்பு, சந்தோஷமாக இல்லையா, சஞ்சய்?
நிச்சயம் சந்தோஷம்தான். அதுவும் இந்திரா சிவசைலம் அறக்கொடையினர், புகழ்மிக்க மியூசிக் அகடமியின் வாயிலாக அதை வழங்கும்போது, அதைப் பெற்றுக்கொள்ளும் இசைக்கலைஞன் என்ற முறையில் மிகுந்த சந்தோஷம்தான் அப்படிப்பட்ட தொடர்புகள் பாராட்டுக்கு வலு சேர்க்கின்றன. நான் 1988-லிருந்து அகாதெமியில் பாடிக்கொண்டிருக்கிறேன். அவர்கள்தாம் இந்த விருதுக்கு உரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று நம்புகிறேன்.
ருக்மிணி ராஜகோபாலனிடமும், பின்னர் கல்கத்தா கே.எஸ். கிருஷ்ணமூர்த்தியிடமும் இசை கற்றுக்கொண்டீர்கள். இவர்களைத் தவிர வேறு எந்த சங்கீத வித்துவான்கள் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்?
இப்போதும் மூத்த நாதசுரக் கலைஞர் எஸ்.ஆர்.டி. வைத்தியநாதன் அவர்களை அவ்வப்போது சந்தித்து அவருடன் உரையாடிவருகிறேன். மதுரை டி.என். சேஷகோபாலன் அவர்களின் தாக்கம் எனக்கு உண்டு. தூரத்தில் இருந்து கவனித்து பிரமித்திருக்கிறேன். புல்லாங்குழல் ரமணி அவர்கள் நான் மிகவும் மதிக்கும் இன்னொரு சங்கீத மேதை. அவரிடமிருந்தும் நிறையத் தெரிந்துகொள்வதுண்டு.
கர்னாடக இசையின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
டி.வி, இன்டர்நெட் என்று இப்போது இருக்கிற சூழ்நிலைத் தடங்கல்களைவிடவா வேறு தடங்கல்கள் இருந்துவிடமுடியும்? இந்தச் சூழலிலேயே கர்நாடக இசை தப்பித்து உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கையில், கர்நாடக இசைக்கலை தழைத்து வளர்ந்து கொண்டுதானே இருக்கிறது? புதிய புதிய இளம் இசைக்கலைஞர்கள் நாள்தோறும் உருவாகிக்கொண்டிருக்கும் ஆரோக்கியமான சூழ்நிலை மகிழ்ச்சி தருகிறது. ஆதரவும், பாதுகாப்பும் நிச்சயம் கூடிக்கொண்டே வரும். கவலைப்படவே வேண்டாம்.
எந்த கட்டத்தில், சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பணியை நிறுத்திவிட்டு, இசையையே முழுநேரத் தொழிலாக எடுத்துக்கொள்வது என்று தீர்மானித்தீர்கள்?
திடீரென்று எடுத்த முடிவல்ல. சில நாட்களாகவே மனதில் இருந்து வந்ததுதான். சேஷகோபாலன் சொல்வார், பாட்டைவிட்டுவிட்டு வெளியேறும்போது, அது தானாகவே நம்மை இழுத்துக்கொண்டுபோய்விடும் என்று... அதுதான் என் விஷயத்திலும் உண்மை.
சங்கீதம் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் ஒரு புத்தகப் பித்தர். சமீபத்தில் என்ன படித்தீர்கள்?
பூமணியின் "பிறகு' நாவல் வாங்கினேன். படித்துக்கொண்டிருக்கிறேன். "டெüன் டு எர்த்' என்பார்களே, அது மாதிரி வெகு யதார்த்தமான படைப்பாளி பூமணி. அடுத்தது உம்பர்த்தோ - 14-15ஆம் நூற்றாண்டு ஐரோப்பியப் பின்னணியில் எழுதப்பட்ட ஆங்கில நூல். அப்புறம் லாரா ஹில்லான் பிரான்ட்டின் அன்ப்ரோக்கன். ஒரு போர்க்கைதி படகில் ஏறித் தப்பிச் செல்லும் சுவாரசியமான நூல். நகைச்சுவைக்கு "டயா ஆப் விம்ப்பி கிட்'. சிரிப்பு என்றால் அப்படி ஒரு சிரிப்பு. சுஜாதாவின் முழுத் தொகுதிகளும் படித்து முடித்துவிட்டேன், ஸ்ரீரங்கத்துக் கதைகள் உட்பட!
எப்படி இவ்வளவையும் படிக்கிறீர்கள்?
பெரும்பாலும் பயணத்தின்போது. இல்லையென்றால் ஈ-புக். வாசிப்பு அனுபவம் இருந்துவிட்டால் போதும். நேரத்தை நாம்தான் ஒதுக்கிவைத்துக்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...