மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

42. ஆதியில் பிரமனார் - பாடல் 1

சீர்காழியிலிருந்து புறப்பட்ட அப்பர் பிரான்

Updated On :2 நவம்பர் 2016, 6:30 pm

(குறுக்கை வீரட்டம் - நேரிசை)

முன்னுரை

சீர்காழியிலிருந்து புறப்பட்ட அப்பர் பிரான் திருக்கோலக்கா, திருநீடூர், திருப்புங்கூர் ஆகிய தலங்கள் சென்று பெருமானை வழிபட்ட பின்னர் திருக்குறுக்கை தலத்திற்கு வருகின்றார். பெருமானின் கருணைத் திறத்தை நினைத்து வியந்த நாயனார், பெருமான் அடியவர்களுக்கு கருணை புரிந்த சில நிகழ்ச்சிகளை விவரமாக, ஒவ்வொரு செயலினையும் ஒரு பாடலில் விளக்கி இந்த பதிகம் பாடுகின்றார். பெரிய புராணத்தில் காணப்படும் சில நிகழ்ச்சிகளும், மற்ற புராணங்களில் உள்ள சில நிகழ்ச்சிகளும் சொல்லப்பட்டு சிவபெருமானின் பெருமை பேசப்படுகின்றது. ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு நிகழ்ச்சி பல விரிவான விவரங்களுடன் கூறப்படுகின்றது

பாடல் 1

ஆதியில் பிரமனார் தாம் அர்ச்சித்தார் அடியிணைக் கீழ்
ஓதிய வேத நாவர் உணரும் ஆறு உணரலுற்றார்
சோதியுள் சுடராய்த் தோன்றிச் சொல்லினை இறந்தார் பல்பூக்
கோதி வண்டு அறையும் சோலைக் குறுக்கை வீரட்டனாரே

விளக்கம்

வேதநாவர் = வேதங்களை எப்போதும் சொல்லும் நாவினை உடைய பிரமன். இறந்தார் = கடந்தவர். பிரமன் சிவபிரானை வழிபட்டதால், சீர்காழிக்கு பிரமபுரம் என்ற பெயர் ஏற்பட்டது என்று சம்பந்தர் தனது பதிகத்தில் கூறுகின்றார். அவரது தோடுடைய செவியன் என்று தொடங்கும் முதல் பாடலே, பிரமன் செய்த வழிபாட்டினை குறிப்பிடுவதை நாம் காணலாம். தாமரைப் பூவினில் அமர்ந்தவாறு வேதங்களை படிக்கும் பிரமன், ஏடுடைய மலரான் என்று குறிப்பிடப்படுகின்றார்.

தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண்மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனை நாள் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே

பொழிப்புரை

ஆதிக் காலத்தில் தோன்றிய பிரமன், தான் படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர் சிவபிரானின் திருவடிகளுக்கு அர்ச்சனை செய்தார். அதன் பயனாக வேதங்களின் பொருளை பிரமன் உணருமாறு சிவபிரான் அருள் புரிந்தார். ஞானச்சுடராக விளங்கும் சிவபிரான் சொற்களைக் கடந்தவர். அவரது பெருமையினை உரைக்க சொற்கள் போதாது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பெருமான், வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த, குறுக்கை வீரட்டானத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.