நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமம் செய்து
ஆற்றுநீர் பூரித்து ஆட்டும் அந்தணாளரைக் கொல்வான்
சாற்று நாள் அற்றது என்று தரும ராசற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கை வீரட்டனாரே
விளக்கம்
சாற்றும் நாள் = முன்னமே சொல்லிய நாள். தனக்கு குழந்தை இல்லை என்று சிவபிரானை நோக்கி தவம் செய்த மிருகண்டு முனிவருக்கு, சிவபிரான் பிள்ளை வரம் அளித்தபோது ஒரு நிபந்தனை விதித்தார். பதினாறு ஆண்டுகள் மட்டும் வாழ்நாள் கொண்ட அறிவுடைய மகன் வேண்டுமா அல்லது நூறு ஆண்டு வாழ்நாள் கொண்ட அறிவில்லாத மகன் வேண்டுமா என்று கேட்டார். பதினாறு ஆண்டுகள் இருந்தாலும் அறிவுடைய மகனே வேண்டும் என்று வேண்டிய மிருகண்டு முனிவர், அவ்வாறே பதினாறு ஆண்டுகள் வாழ்நாள் கொண்ட மகனைப் பெற்றார். அந்த காலம் முடிந்த பின்னர் தான் இயமன் சிறுவனின் உயிரைப் பறிக்க வந்தான். பூரித்து = நிறைவாக. குமைத்தல் = தண்டித்தல், வதைத்தல்.
இறைவனை நீராட்டும் பொருட்டு தனது தவ வலிமையால், கங்கை நீரினை, கடவூர் மயானத்தில் உள்ள ஒரு கிணற்றில் வரவழைத்த மார்கண்டேயர், அந்த நீரினைக் கொண்டு இறைவனை நீராட்டினார். இன்றும் அந்த கிணற்றில் கங்கை நீர் பொங்குவதாக நம்பப் படுகின்றது. இன்றும் கடவூர் இறைவனை நீராட்ட, தண்ணீர் அங்கிருந்து தான் தினமும் கொண்டுவரப்படுகின்றது.
மார்க்கண்டேயரின் வரலாறும் பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப்டுகின்றது. கடவூர் வீரட்டத்தின் மீது அப்பர் பிரான் அருளிய பதிகத்தின் (4.107) முதல் ஒன்பது பாடல்களிலும் காலனைக் காய்ந்த (வெகுண்ட) நிகழ்ச்சி குறிப்பிடப் படுகின்றது.
சம்பந்தரும், தனது திருவீழிமிழலைப் பதிகத்தின் ஏழாவது பாடலில் (1.20), மறையின் மந்திரங்களைச் சொல்லி, நதியின் நீரினால் நீராட்டி, புது மலர்கள் தூவி மார்க்கண்டேயர் வழிபட்டதாக கூறுகின்றார். நலன்கள் அளிக்கக்கூடிய மொழிகள் நிறைந்தவை என்று வேதங்களை இங்கே சம்பந்தர் குறிப்பிடுகின்றார். தூபம், தீபம் முதலியன காட்டி, வேத மந்திரங்களை முழங்கி, மலர் தூவி முறையாக வழிபாடு செய்ததும் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல் புகை ஒளி முதல்
மலரவை கொடு வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொளவரு
சலமலி தரு மறலி அதன் உயிர் கெட உதை செய்தவன் உறைபதி
திலகம் இது என உலகுகள் புகழ் தரு பொழில் அணி திருமிழலையே
திருக்கடவூரில் இருக்கும் காலசம்ஹார மூர்த்தியின் உருவத்தில், இடது காலை தூக்கியபடி சிவபிரான் இருப்பதை நாம் காணலாம். தனது உடலின் இடது பாகத்தை இறைவன் உமையம்மைக்கு அளித்ததை நாம் அனைவரும் அறிவோம். அவ்வாறெனில் இயமனை உதைத்த பாதம் உமையம்மைக்கு உரியது தானே. இந்த கேள்வியை, அபிராமி பட்டர் கேட்கும் பாடலொன்று அபிராமி பதிகத்தில் உள்ளது. அந்த பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. நின்னோடும் தோன்றி என்று இலிங்கத்தில் இருந்து எழுந்த வடிவம், மாதொரு பாகானாகிய உருவம் என்று அபிராமி பட்டர் கூறுகின்றார்.
கருநீல வடிவமார் மாடு ஏறி உத்தண்ட கனதண்ட வெம்பாசமும்
கைக்கொண்டு சண்ட மாகாலன் முன் எதிர்க்க மார்க்கண்டனும்
முன் நோக்கி
அருநீலகண்டன் எனும் நின் பதியை உள்ளத்தில் அன்பு கொண்டு
அர்ச்சனை செய்ய
அரனும் அவ்விலிங்கம் பிளப்ப நின்னோடு தோன்றி அவிர்
செய் சூலத்தில் ஊன்றிப்
பெருநீலமலை என நிலத்தில் அன்னவன் விழப் பிறங்கு
தாளால் உதைத்துப்
பேசும் முனி மைந்தனுக்கு அருள் செய்து உனது அரிய பேர்
அருளின் வண்ணம் அலவோ
வரு நீல மடமாதர் விழி என்ன மலர் வாவி வளர்
திருக்கடவூரில் வாழ்
வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ் வாமி அபிராமி
உமையே
பொழிப்புரை
திருநீற்றினை உடல் நிறையப் பூசி, நாள்தோறும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்து, ஆற்று நீரினைக் கொண்டு வந்து சிவபிரானை நிறைவாக நீராட்டும் அந்தணச் சிறுவனாகிய மார்க்கண்டேயனின் ஆயுட்காலம் முடிவடைந்தது என்று அவனது உயிரினைப் பறிப்பதற்காக வந்த கூற்றுவனை, குறுக்கை வீரட்டத்தில் உறைகின்ற சிவபிரான் தண்டித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

