மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

42. ஆதியில் பிரமனார் - பாடல் 7

சிவபெருமானின் கண்ணில் ரத்தம் ஒழுகி

Updated On :5 நவம்பர் 2016, 10:32 am

காப்பதோர் வில்லும் அம்பும் கையதோர் இறைச்சிப் பாரம்
தோல் பெரும் செருப்பு தொட்டுத் தூய வாய்க் கலசம் ஆட்டித்
தீப்பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுகத் தன் கண்
கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கை வீரட்டனாரே

விளக்கம்

இந்த பாடல் கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கை நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது. இதுவும் பெரியபுராணத்தில் கூறப்படும் நிகழ்ச்சி. சிவபெருமானின் கண்களை தீப்பெரும் கண்கள் என்று, அவரது வலக்கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் உள்ள தன்மை உணர்த்தப்பட்டுள்ளது. காட்டில் தான் கண்ட சிவபெருமானின் உருவத்தை நீராட்ட, அருகில் பாத்திரம் ஏதும் இல்லாததால், கண்ணப்பர் தனது வாயில் நீரினைக் கொண்டு வந்தார். இவ்வாறு நீரினைக் கொணர்ந்த வாயினை தூயவாய்க் கலசம் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த வர்ணனை நமக்கு ஆதி சங்கரர் அருளிய சிவானந்த லஹரியின் ஒரு பாடலை நினைவூட்டுகின்றது.

மார்காவர்த்தித பாதுகா பசுபதே ரங்கஸ்ய கூர்ச்சாயதே
கண்டூ ஷாம்பு நிஷேசனம் புரரிபோர் திவ்ய அபிஷேகாயதே
கிஞ்சித் பக்ஷித மாம்ச சேஷ கவளம் நவ்யோ பஹாராயதே
பக்தி கிம் நகரோத்யஹோ வனச்சரோ பக்தாவதம்சாயதே

கண்ணப்பர் நடந்து நடந்து தேய்ந்த செருப்பு, சிவபெருமானுக்கு கூர்ச்சமாகவும், கண்ணப்பர் கொப்பளித்த நீர், சிவபிரானை அபிஷேகம் செய்வதற்கு தகுதியான புனித நீராகவும், கண்ணப்பர் சுவைத்துப் பார்த்த மாமிசம் சிறந்த நைவேத்தியப் பொருளாகவும் மாறியது கண்ணப்பர் சிவபிரான் வைத்திருந்த அளவு கடந்த பக்தியினால் தான் என்று இங்கே ஆதிசங்கரர் கூறுகின்றார்.

திருக்கண்ணப்பத் தேவர் திருமறம் என்ற பெயரில் இரண்டு பதிகங்கள் பதினோராம் திருமுறையில் உள்ளன. ஒன்று நக்கீரத் தேவ நாயனார் எழுதியது. மற்றொன்று கல்லாட தேவ நாயனார் அருளியது. இந்த இரண்டு பதிகங்களும் கண்ணப்பர் சரித்திரத்தை விரிவாக எடுத்துரைக்கின்றன. பெரியபுராணத்தில், கண்ணப்ப நிற்க என்று இறைவன் மொழிந்த வாக்கினை குறிப்பிடும் பாடலும், கண்ணப்பரை சிவபெருமான், எனது வலது பக்கத்தில் இருப்பாய் என்று சொல்லி ஏற்றுக்கொண்டதை குறிப்பிடும் பாடலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

செங்கண் வெள்விடையின் பாகர் திண்ணனார் தம்மை ஆண்ட
அங்கணர் திருக்காளத்தி அற்புதர் திருக்கை அன்பர்
தம் கண் முன் இடக்கும் கையைத் தடுக்க மூன்று அடுக்கு நாக
கங்கணர் அமுத வாக்குக் கண்ணப்ப நிற்க என்றே

பேறு இனி இதன் மேல் உண்டோ பிரான் திருக்கண்ணில் வந்த
ஊறு கண்டு அஞ்சி தம் கண் இடந்து அப்ப உதவும் கையை
ஏறு உயர்த்தவர் தம் கையால் பிடித்துக் கொண்டு என் வலத்தின்
மாறு இலாய் நிற்க என்று மன்னு பேரருள் புரிந்தார்

பொழிப்புரை

காவல் செய்வதற்குத் தேவையான வில் மற்றும் அம்பு இவைகளை ஒரு கையில் கொண்டவராய், மற்றொரு கையில் பெருமானின் நிவேதனத்திற்கு உரிய இறைச்சியை ஏந்தியவராய், கால்களில் பெரிய தோல் செருப்பினை அணிந்து, வாயினில் பெருமானை நீரட்டுவதற்காக நீரினைக் கொண்ட வண்ணம் வந்த கண்ணப்பர், சிவபெருமானின் ஒளி வீசும் வலது கண்ணில் ரத்தம் ஒழுகி பெருகுவதைக் கண்டு மனம் பதைபதைத்தார். பின்னர், தனது வலது கண்ணையே பேர்த்தெடுத்து, கண்ணப்பர் இறைவனுக்கு அப்பத் துணிந்தார். வலது கண்ணில் வழிந்த ரத்தம் நின்ற பின்னர், பெருமானின் இடது கண்ணில் இரத்தம் பெருகவே, கண்ணப்பர், அம்பினைத் தனது இடது கண்ணையும் பெயர்த்து இறைவனுக்கு அப்ப வேண்டும் என்று முடிவு செய்து, தனது இடது கண்ணருகில் அம்பினைக் கொண்டு சென்றபோது, அவரை அவ்வாறு செய்யவிடாமல் அவரது கையினைப் பற்றிக்கொண்டவர் குறுக்கை வீரட்டத்தில் உறையும் சிவபெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.