(புள்ளிருக்குவேளூர் – திருத்தாண்டகம்)
முன்னுரை
புள்ளிருக்குவேளூர் தலத்திற்கு அப்பர் பிரான் சென்ற விவரங்கள் பெரியபுராணத்தில் எங்கும் காணப்படவில்லை. ஆனால் இந்த தலத்திற்கு அருகில் உள்ள திருக்கருப்பறியலூர், புன்கூர் மற்றும் குரக்குக்கா தலங்களுக்கு சென்று பதிகங்கள் பாடியமை பெரியபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, புள்ளிருக்குவேளூர் தலத்தைக் குறிப்பிடும் இரண்டு பதிகங்களையும் அப்பர் பிரான், மேல் குறிப்பிட தலங்களுக்கு சென்றபோது, அவற்றின் அருகே இருந்த புள்ளிருக்குவேளூர் தலத்திற்கும் சென்று, இந்த இரண்டு பதிகங்களையும் அருளியிருக்க வேண்டும் என்று கருதப்படுகின்றது. தான் சமண சமயத்தைச் சார்ந்து, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியினை வீணாகக் கழித்ததை குறிப்பிட்டு வருத்தத்தை தெரிவிக்கும் பதிகங்களில் இந்த பதிகமும் ஒன்றாகும். இந்த பதிகத்தின் ஒவ்வொரு பாடலும் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாது ஆற்ற நாள் போக்கினேனே என்று முடிகின்றன. பண்டு நான் இகழ்ந்தவாறே என்று திருவதிகைப் பதிகத்தின் (6.03) அனைத்து பாடல்களிலும், சமண சமயத்தைச் சார்ந்து தான் இருந்தபோது பெருமானை இகழ்ந்ததை குறித்து வருந்திய அப்பர் பிரான், இந்த பாடலில் தான் பெருமானை பல வருடங்கள் புகழாது இருந்தமைக்கு வருத்தம் தெரிவிக்கின்றார்.
பாடல் 1
ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு அடியோடு முடி அயன் மால்
அறியா வண்ணம்
நீண்டானை நெடுங்கள மாநகரான் தன்னை நேமி வான் படையால் நீள்
உரவோன் ஆகம்
கீண்டானைக் கேதாரம் மேவினானைக் கேடிலியைக் கிளர்பொறி வாள்
அரவோடு என்பு
பூண்டானைப் புள்ளிருக்குவேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள்
போக்கினேனே
விளக்கம்
ஆளாக் கொண்டு = அடிமையாக ஏற்றுக்கொண்டு. நேமி = சக்கரம். வான்படை = உயர்ந்த படைக்கலம். தனது முதல் பதிகத்தின் முதல் பாடலில், ஏற்றாய் அடிக்கே என்று சிவபெருமான் தன்னை அவரது அடிமையாக ஏற்றுக் கொண்டதை உணர்த்திய அப்பர் பிரான், இரவும் பகலும் பிரியாது அவரை வணங்குவேன் என்று கூறியதை நாம் அறிவோம்.
கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான்
அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்
எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி
முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை
அம்மானே
பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டு சூலைநோய் தீர்த்ததும் அன்றி, தனக்கு திருநாவுக்கரசு என்ற பெயரையும் சூட்டியதால் பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டதை அப்பர் பிரான் உணர்ந்தார். தான் உணர்ந்ததை, அப்பர் பிரான் பல்லவ மன்னனின் ஆணையுடன் வந்த மந்திரிக்கு மறுமொழியாக உரைப்பதை நாம், அவரது மறுமொழித் தாண்டகத்தின் முதல் பாடலில் (6.98.1) உணரலாம். இந்தப் பாடலின் இறுதி வரியில் அப்பர் பிரான் மீளா ஆளாய், இறைவனது சேவடிக் கீழ் தஞ்சம் அடைந்ததாக கூறுகின்றார். இறைவனிடம் அன்பு பூண்ட அருளாளர்கள் தங்களை மீளா அடிமை என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை அடைகின்றார்கள். இவ்வாறு இறைவனால் தான் ஆட்கொள்ளப்பட்டதை, மிகவும் பெருமையுடன் அடியேனை ஆளாக் கொண்டு ஆண்டானை என்று சொல்லி இந்த பதிகத்தைத் தொடங்குகின்றார்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை
இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும்
துன்பம் இல்லை
தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் நற்சங்க வெண் குழை
ஓர் காதில்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச் சேவடி
குறுகினோமே
சுந்தரமூர்த்தி நாயனாரும் தனது முதல் பதிகத்தில், தான் இறைவனுக்கு அடிமை என்பதை உணர்த்தும் வண்ணம். உனக்கு அடிமையாக நான் இல்லை என்று இனிமேலும் கூறலாமோ என்று பொருள்பட உனக்கு ஆளாய் அல்லேன் இனி எனலாமோ என்று பொருள்பட பதிகத்தின் (7,1) முதல் ஒன்பது பாடல்களையும் முடிப்பதை நாம் உணரலாம். பதிகத்தின் கடைப் பாடலில், ஆரூரன் பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே என்று முடிக்கின்றார். இந்த பதிகத்தின் முதல் பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர்
அருட்துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே
பொழிப்புரை
மாற்றுச் சமயமாகிய சமண சமயத்தைச் சார்ந்திருந்த அடியேனை, எனது அறியாமையை நீக்கி அடிமையாக ஏற்றுக்கொண்டு அருள் புரிந்தவனும், தனது அடியையும் முடியையும் திருமாலும் பிரமனும் அறியாத வண்ணம் நெடிய தழலுருவாய் நீண்டவனும், நெடுங்களம் தலத்தில் உறைபவனும், உயர்ந்த சக்கரப்படை கொண்டு அசுரன் சலந்தரனின் உடலினைக் கிழித்தவனும், கேதாரம் தலத்தில் உறைபவனும், எப்போதும் அழிவில்லாமல் இருப்பவனும், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்பு மற்றும் எலும்பினை ஆபரணமாக பூண்டவனும் ஆகிய புள்ளிருக்குவேளூர் இறைவனைப் புகழ்ந்து வணங்காது எனது வாழ்நாளின் பெரும்பகுதியை வீணாகக் கழித்தமைக்கு நான் மிகவும் வருந்துகின்றேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

