(புன்கூர், நீடூர் - திருத்தாண்டகம்)
முன்னுரை
தில்லையிலிருந்து சீர்காழி சென்று திருஞானசம்பந்தரை சந்தித்த அப்பர் பிரான். அவரது விருப்பத்திற்கு இணங்கி காழிப் பெருமான் மீது பதிகங்கள் பாடினார். சீர்காழித் தலத்தில் உள்ள திருஞானசம்பந்தரின் திருமடத்தில் தங்கியதாக பெரியபுராணம் நமக்கு உணர்த்துகின்றது. அவ்வாறு தங்கி இருந்த நாட்களில், அப்பர் பிரான், ஞானசம்பந்தருடன் உரையாடியதால் இருவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். ஒருநாள் அப்பர் பிரான், சோழ நாட்டில் உள்ள மற்ற திருத்தலங்களைக் காண விருப்பம் கொண்டு, அந்த விருப்பத்தை சம்பந்தரிடம் வெளியிட, அவரும் அதனை ஏற்றுக்கொண்டு இருவரும் சேர்ந்து கோலக்கா தலம் சென்றார்கள். கோலக்கா தலத்தில், இருவரும் ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிரியாவிடை பெற்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அப்பர் பிரான் புன்கூர், நீடூர் முதலான தலங்கள் சென்றார். அப்பர் பிரான் திருகோலக்கா மற்றும் திருக்கருப்பறியலூர் தலங்களில் அருளிய பதிகங்கள் நமக்கு கிடைக்கவில்லை. நீடூர் மற்றும் திருப்புன்கூர் ஆகிய இந்த இரண்டு தலங்களையும் ஒரே பதிகத்தில் பாடியமைக்கு காரணம் ஏதும் பெரியபுராணத்தில் கூறப்படவில்லை. இந்த இரண்டு தலங்களும் ஒன்றுக்கொன்று மிகவும் அருகில் உள்ள தலங்கள்.
மூவர் பெருமானார்கள் அனைவரும் திருப்புன்கூர் சென்ற போது இந்த தலமும் சென்றதாக பெரியபுராண குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. ஞான சம்பந்தர் இந்த தலத்தின் மீது அருளிய பதிகம் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை.
ஆண்ட அரசு எழுந்தருளக் கோலக்காவை அவரோடும் சென்று
இறைஞ்சி அன்பு கொண்டு
மீண்டு அருளினார் அவரும் விடை கொண்டு இப்பால்
வேதநாயகர் விரும்பும் பதிகளான
நீண்ட கருப்பறியலூர் புன்கூர் நீடூர் நீடு திருக்குறுக்கை
திருநின்றியூரும்
காண் தகைய நனிபள்ளி முதலா நண்ணிக் கண்ணுதலார்
கழல் தொழுது வணங்கிச் செல்வார்
பாடல் 1
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப் பேணாதார் அவர்
தம்மைப் பேணாதானை
துறவாதே கட்டறுத்த சோதியானைத் தூநெறிக்குத் தூநெறியாய்
நின்றான் தன்னைத்
திறமாய எத்திசையும் தானே ஆகித் திருப்புன்கூர் மேவிய
சிவலோகனை
நிறமாம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான்
நினையாவாறே
விளக்கம்
பிறவாதே தோன்றிய பெம்மான் = பிறப்பிலி என்று பல தேவாரப் பதிகங்களில் பெருமானை மூவர் முதலிகள் குறிப்பிடுகின்றார்கள். அடியார்களுக்கு அருள்புரிவதற்காக, பெருமான் பல வேடங்களில் தோன்றுவதை, பிறப்பாக கருதுவது தவறாகும். பேணாதான் = வெளிப்படாதவன்; நீதன் என்ற சொல் நீசன் என்ற சொல்லின் திரிபு. நீசன் = கீழ்மையான தன்மை உடையவன்; பெருமானை நினையாமல் பல வருடங்கள் சமண சமயம் சார்ந்து கழித்தமை குறித்து, அப்பர் பிரான் தன்னை நீசன் என்று இழிவாக குறிப்பிடுகின்றார். என்னே நான் நினையாவாறே = நினையாமல் இருந்த அறிவீனம்தான் என்னே.
இந்த பாடலில் துறவாதே கட்டறுத்த சோதியான் என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கிய சிவபெருமான், மற்றவர்களைப் போன்று வாழ்வினைத் துறந்து உலகப் பொருட்களின் மீதுள்ள பற்றினை துறக்க வேண்டியதில்லை. இந்த செய்தி கருவூர்த் தேவர் அருளிய திருவிசைப்பா பாடல் ஒன்றில் மங்கையோடு இருந்தே யோகு செய்வான் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. பார்வதி தேவியோடு எப்போதும் கூடி இருந்தாலும் யோகத்தில் ஆழ்பவன் சிவபெருமான் என்பதை நமக்கு உணர்த்தும் பாடல் கங்கை கொண்ட சோளேச்சரம் மீது கருவூர்த் தேவர் அருளிய பதிகத்தின் கடைப் பாடலாகும். சிவபிரானைப் புகழ்ந்து பாடினால், நாம் இம்மையில் அரசர்களைப் போல சிறப்பாக வாழ்ந்து மறுமையில் அவனது அருட்கடலில் திளைப்போம் என்று கருவூர்த் தேவர் கூறுகின்றார்.
மங்கையோடு இருந்தே யோகு செய்வானை வளரிளம்
திங்கள் முடிமேல்
கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை கொண்ட
சோளேச்சரத்தானை
அங்கை ஓடு ஏந்திப் பலிதிரி கருவூர் அறைந்த சொல்
மாலையால் ஆழிச்
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும்
சிவனருட் கடலே
அப்பர் பிரான் திருவீழிமிழலைத் தாண்டகத்தின் (6.50.3) ஒரு பாடலில், சிவபெருமானை, நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்து வென்றான் என்று குறிப்பிடுகின்றார். எனவே இல்லறம் எந்த விதத்திலும் இறைவனை நினைப்பதற்கும் அவனை வணங்குவதற்கும் தடை அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு வாழ்க்கையில் உய்வினை அடைய வேண்டும் என்பதே இந்த பதிகத்தின் மையக் கருத்தாகும்.
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை
அகத்தியனை உகப்பானை அயன்மால் தேட
நின்றானைக் கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேரிழையைக்
கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின்
நிறை அளக்கலுற்றுச்
சென்றானைத் திருவீழி மிழலையானைச் சேராதார் தீநெறிக்கே
சேர்கின்றாரே
பொழிப்புரை
மற்றவர்களைப் போன்று ஒரு தாயின் கருப்பை மூலம் பிறப்பு எடுக்காது தானே தோன்றியவன் சிவபெருமான். அவன் எடுக்கும் பல்வேறு வடிவங்களும் அவனது விருப்பப்படியே நிகழ்வன. தன்னை விரும்பாதவர்களை தானும் விரும்பாமல் இருந்து அவர்களுக்கு உதவி செய்வதை தவிர்ப்பவன். துறவு நிலையை மேற்கொள்ளாமல் இயல்பாகவே உயிர்களைப் பிணைக்கும் பந்த பாசங்களை விட்டொழித்தவனும், குற்றமில்லாத தூய சிவநெறியில் நிற்பதற்கு ஆதாரமாக உள்ளவனும், வகுக்கப்பட்ட எட்டு திசைகளாக இருப்பவனும், திருப்புன்கூர் தலத்தில் உறையும் சிவலோகனும், செம்மையான நிறத்தில் சோதியாக உள்ளவனும், நீடூர் தலத்து இறைவனும் ஆகிய பெருமானை, கீழ்க்குணம் கொண்ட நான் நினையாமல் இருந்தது அறிவீனம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

