ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 1

கடம்பூர் எனப்படும் இந்த தலம்

Updated On :12 ஏப்ரல் 2017, 6:30 pm

(கடம்பூர் – குறுந்தொகை)

முன்னுரை
கடம்பூர் எனப்படும் இந்த தலம், சிதம்பரம் - காட்டுமன்னார்குடி பாதையில் அமைந்துள்ளது. இந்த தலத்தில் உள்ள கோயில் கரக்கோயில் என அழைக்கப்படுகின்றது. அப்பர் பிரான் இந்த தலம் சென்றதாக பெரிய புராண குறிப்புகள் ஏதும் இல்லை. மயிலாடுதுறை செம்பொன்பள்ளி ஆகிய தலங்களுக்குச் சென்ற அப்பர் பிரான் அருகிலுள்ள பல தலங்கள் சென்றதாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அத்தகைய தலங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். சிதம்பரம் மற்றும் திருநாரையூர் ஆகிய தலங்களுக்கு சற்று அருகிலுள்ள இந்த தலத்தை எவ்வாறு மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளதாக கருதுகின்றனர் என்பது தெளிவாகப் புரியவில்லை.

கரக்கோயில் என்ற பெயர், இந்திரன் இந்த கோயிலில் உள்ள லிங்கத்தை பெயர்த்து எடுத்துச்செல்ல முயற்சி செய்ததாகவும், தனது கைகள் கொண்டு மிகவும் ஆழமாகத் தோண்டிய பின்னரும், லிங்கத்தின் அடியினை காண முடியாததால் முயற்சியை கைவிட்டதாகவும், இந்திரனின் கரங்களால் அகழ்ந்து எடுக்க முடியாதாவாறு அமைந்த கோயில் என்ற பொருள்பட கரக்கோயில் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். இந்த கோயிலின் கருவறை நான்கு சக்கரங்களைக் கொண்டு குதிரைகள் இழுத்துச் செல்லும் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. தாராசுரம் கோயில் கருவறையும் இதே அமைப்பில் உள்ளது. ஒடிஸா மாநிலத்தில் உள்ள கோனாரக் கோயில், இந்த கோயிலை முன்மாதிரியாக கொண்டு கட்டப்பட்டதாக கூறுவார்கள். கோனாரக் கோயிலை கட்டிய நரசிம்மன், முதலாம் குலோத்துங்கச் சோழனின் உறவினான் ஆவான். கருவறை வெளிச் சுவர்கள் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டவை. அடைவுத் திருத் தாண்டகத்தின் ஒரு பாடலில் (6.71.5) கோயில் என்று முடியும் சில தலங்களை குறிப்பிடும்போது, இந்த கோயிலையும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பெருங்கோயில் என்பன மாடக்கோயில் வகைச் சார்ந்த கோயில்கள்; ஞாழற்கோயில் மற்றும் மணிக்கோயில் என்பன வைப்புத் தலங்கள்.

பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும்
    கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியற்
    பொருப்பு அனைய கொகுடிக் கோயில்
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளம் கோயில்
        மணிக் கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து
        இறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே

பாடல் 1

தளரும் கோளரவத்தொடு தண் மதி
வளரும் கோல வளர் சடையார்க்கு இடம்
கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டு அறாக்
களரும் கார்க் கடம்பூர் கரக் கோயிலே
 

விளக்கம்

தளரும் = வளையும். கோள் அரவம் = கொள்ளுதலை உடைய, விழுங்கும் தன்மையை உடைய. இந்த பாடலில் பாம்புக்கும் சந்திரனுக்கு உள்ள பகையினை உணர்த்துவதற்காக விழுங்கும் தன்மை உடைய பாம்பு என்று அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். பகைவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் வைத்து, சந்திரனை பாம்பு விழுங்காத வண்ணம் காத்த நிலை, வளரும் என்ற சொல்லின் மூலம் உணர்த்தப் படுகின்றது. பாம்பும் சந்திரனும் இயல்பிலே ஒன்றுகொன்று மாறுபட்ட குணங்களைக் கொண்டுள்ளவை. மேலும் பாம்புக்கும் சந்திரனுக்கும் இடையே பகையும் உண்டு. சந்திரன் வெண்ணிறம் கொண்டது; பாம்போ கருநிறம் உடையது. அனைவரும் காண வானில் உலா வருவது சந்திரன்; பாம்போ பிறர் தன்னைக் காணா வண்ணம் புற்றில் மறைந்து வாழ்வது; குளிர்ச்சி தருவதால் சந்திரனின் கதிர்களை அமுத கிரணங்கள் என்று கூறுவார்கள்; பாம்போ வெப்பம் மிகுந்த நஞ்சினைத் தருவது. தன்னுடைய தோற்றத்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பது சந்திரன்; தன்னைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, காண்போரை நடுங்கச் செய்வது பாம்பு; ஒளி மயமானது சந்திரன்; இராகு கேது எனப்படும் இரண்டு கோள்களும், சாயா கிரகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது நிழல் உருவங்கள் என்று கூறுவார்கள்; இவ்வாறு பல வகையிலும் மாறுபட்டு, தங்களுக்குள் பகையும் கொண்டுள்ள இருவரையும் பகை தீர்த்து இருக்கச் செய்வது வல்லமை படைத்த ஒருவரால் தான் முடியும். சிவனெனும் ஓசை என்று தொடங்கும் பதிகத்தின் பாடலில் (4.8.7) பகை வளர் நாகம் என்று குறிப்பிட்டு நாகம் சந்திரனிடம் கொண்டுள்ள பகையையும் மீறி, சந்திரன் பெருமானின் சடையில் உலவுவதாக அப்பர் பிரான் கூறுகின்றார்.

நகை வளர் கொன்றை துன்று நகு வெண்தலையர் நளிர்
            கங்கை தங்கு முடியர்
மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள்
            மணி செய் மிடறர்
முகை வளர் கோதை மாதர் முனி பாடுமாறும் எரியாடுமாறும்
            இவர் கைப்
பகை வளர் நாகர் வீசி மதி இயங்குமாறும் இது போலும் ஈசர்
                               இயல்பே

நகை = விளக்கம். எளிதில் அடையாளம் கொள்ளும்வகையில் அதிகமாக வளர்ந்து காணப்படும் மலர். துன்று = நெருங்கிய. நகு வெண்தலை = சதைப் பகுதிகள் நீக்கப்பட்டு எலும்பும், பற்களும், மண்டையோடும் காட்சி தரும் தலைகள். பற்கள் வெளியே காணப்படுவதால், நகைப்பது போன்று தோற்றம் உடைய தலை என்று குறிப்பிடும் வகையில் நகு வெண்தலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாகர் = நாகம், பகையை வளர்ப்பதால் இகழ்ச்சி குறிப்பு தோன்ற ஆர் என்ற மரியாதைக்கு அடைமொழி மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடலில், சேர்க்கப்பட்டுள்ளது. தேய்ந்து அழியும் நிலையில் இருந்த சந்திரனுக்கு அபயம் அளித்து காப்பாற்றிய கருணைச் செயலை உணர்த்துவதாகக் கொள்வதும் பொருத்தமே. கோலம் = அழகிய, கின்னரம் = ஒருவகை இசைக் கருவி. யாழில் ஒரு வகை என்று கூறுவார்கள். அறா = நீங்காத. களரும் = கருமை நிறத்தினை உடைய. கடம்ப மரங்கள் நிறைந்து காணப்படுவதால் கடம்பூர் என்ற பெயர் வந்தது.

பொழிப்புரை    

எளிதில் வளையும் தன்மை கொண்ட உடலையும், தனக்கு விருப்பமான இரையை தவறாமல் ஏற்றுக்கொள்ளும் வாயினை உடைய பாம்புடன், குளிர்ந்த சந்திரனை ஒருங்கே சடையில் வைத்து, பாம்புக்கும் சந்திரனுக்கு இடையே இருந்த பகையையும் மீறி, சந்திரனை வளரும் நிலைக்கு உயர்த்தியவன் சிவபெருமான். அவன் விரும்பி தனது உறைவிடமாகக் கொண்ட தலம், பேரிசையுடன் கின்னரம் எனப்படும் இசைக்கருவி எழுப்பும் பாடல்கள் இடைவிடாது கேட்பதும், கருத்த கடம்ப மரங்கள் நிறைந்ததும் ஆகிய கடம்பூர் தலத்தில் உள்ள கரக்கோயில் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.