திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

52. கானறாத கடிபொழில் - பாடல் 3

அவன் அருள் இருந்தால் தான் முடியும்.

Updated On :9 மார்ச் 2017, 10:28 am

வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர்
கீறு கோவண ஐ துகில் ஆடையர்
தேறல் ஆவது ஒன்றன்று செம்பொன்பள்ளி
ஆறு சூடிய அண்ணல் அவனையே
 

விளக்கம்

ஐ = சிறந்த. துகில் = ஆடை. தேறல் ஆவது = தெளிந்து அறிவது. ஒன்றன்று = உலக மாயைகளில் சிக்குண்ட உயிர்களால் அறியமுடியாத ஒன்று. இறைவனின் திருவுருவத்தைத் தங்கள் கண்ணால் கண்ட அருளாளர்கள் ஒரு சிலரே. அவர்கள் கூறிய அடையாளங்களைக் கொண்டுதான், நாம் இறைவன் இப்படியிருப்பான் என்று நமது நினைவில் நிறுத்தி வழிபடுகின்றோம். அவ்வாறு இறைவனைக் கண்ட அருளாளர்களும் தாங்கள் கண்ட தோற்றத்தை முழுவதும் வார்த்தைகளில் வடிக்கவோ அல்லது சிற்பமாக செதுக்கவோ அல்லது ஓவியமாக வரையவோ திறன் படைத்தவர்களா என்றால் அதுவும் இல்லை என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த கருத்தினை உணர்த்தும் அப்பர் பிரானின் பாடல் (4.77.2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

கோவணம் உடுத்தவாறும் கோளரவு அசைத்தவாறும்
தீவணச் சாம்பர் பூசித் திருவுரு இருந்தவாறும்
பூவணக் கிழவனாரைக் புலியுரி அரையனாரை
ஏவணச் சிலையினாரை யாவரே எழுதுவாரே

இறைவனின் திருவுருவத்தைக் காண்பதற்கு அவன் அருள் இருந்தால் தான் முடியும். அடியார்களுக்கு அருள் புரிவதற்காக பல வேடங்கள் எடுத்தவனை, நாம் எவ்வாறு ஒரே வேடத்தில் அடக்க முடியும். அவனுக்கு ஒப்பாக சொல்வதற்கு எவரும் இல்லை, அவன் ஓரூரில் உறைபவன் அல்லன். அவனது உருவத்திற்கு உவமை ஏதும் இல்லை. எனவே இறைவனின் நிறம் இன்னது, அவனுக்கு உவமையாக இந்த பொருட்கள் உள்ளன என்று எவராலும் சொல்ல முடியாது என்ற கருத்தை அப்பர் பிரான் வெளிப்படுத்தும் பாடலை நாம் இங்கே காணலாம் (6.97.10).

மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான்
         வார்சடையான் என்னின் அல்லால்
ஒப்புடையனல்லன் ஒருவனல்லன் ஓரூரனல்லன் ஓர்
                உவமனில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே கண்ணாகக்
                    காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்
            என்றெழுதிக் காட்ட ஒணாதே

இதே கருத்தைத்தான் இன்ன தன்மையன் என்று அறிவொண்ணாதவன் என்று சுந்தரர் ஒரு பாடலில் (7.59.1) கூறுகின்றார். இன்ன தன்மையன் என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவன் சிவபிரான் என்று கூறுவதால் அணுக முடியாதவன் என்று நினைத்து நாம் ஒதுங்கிவிடக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் சிவபிரான் மிகவும் எளிமையாக அடியவர்களுக்கு உள்ளான் என்று கூறும் பாங்கு ரசிக்கத்தக்கது.

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானைப் போகமும் திருவும்
                    புணர்ப்பானைப்
பின்னை என் பிழையைப் பொறுப்பானைப் பிழை எலாம் தவிரப்
                    பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவொண்ணா எம்மானை எளிவந்த
                    பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும்
                        ஆமே

பல வேறு வடிவங்களில் அடியார்களுக்கு காட்சி அளிப்பவனும், எங்கும் நிறைந்தும் காணப்படும் இறைவனை ஒரு குறிப்பிட்ட உருவத்தில் அடக்க முடியுமா, முடியாது அல்லவா. எந்த வடிவத்தில் அவனை நினைத்தாலும் அதனையும் கடந்து வேறோர் உருவம் எடுக்கும் சக்தி படைத்த அவனுக்கு எந்த உருவத்தை நாம் கற்பிப்பது. அதனால் தான் மணிவாசகர் தெள்ளேணம் பதிகத்தின் முதல் பாடலில், ஓருருவம் ஒருநாமம் இல்லாதவன் என்று கூறுகின்றார்.

திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ

பொழிப்புரை

ஆணாகவும் அல்லாமல் பெண்ணாகவும் அல்லாமல் வேறு ஒரு கோலத்தில் காட்சி அளிக்கும் பெருமான், துணியிலிருந்து கிழிக்கப்பட்ட கோவண ஆடை அணிந்து காணப்படுகின்றார். செம்பொன்பள்ளி தளத்தில் வீற்றிருப்பவரும், தனது சடையில் கங்கை ஆற்றினைத் தரித்தவரும் ஆகிய பெருமானை, இன்ன தன்மையன் என்று தெளிவாக அறியும் ஆற்றல் எளிதல்ல.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.