திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

52. கானறாத கடிபொழில் - பாடல் 4

அவர் இரண்டு மனைவியருடன்

Updated On :9 மார்ச் 2017, 10:28 am

அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து
இருவராய் இடுவார் கடை தேடுவார்
தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார்
ஒருவர் தாம் பல பேருளர் காண்மினே
 

விளக்கம்

கீறு = கிழித்த. அருவராதது = அருவருக்கத்தகாதது. இருவராய் = சக்தியும் சிவமுமாக இருவராய். கடை = வீட்டு வாயில். உழலுதல் = திரிதல். இந்த பாடலில் அப்பர் பிரான் பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவாறு பலித் தேடிச் சென்றார் என்று கூறுகின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு, சுந்தரர் பைஞ்ஞீலி பதிகத்துப் பாடல் ஒன்றினை (7.36.5) நினைவூட்டுகின்றது. இந்த பதிகம் தாருகவனத்து மகளிர் கூற்றாக அமைந்த பாடல்கள் கொண்ட பதிகம் என்று கூறுவார்கள். பெருமானுக்கு பிச்சை இடுவதற்காக வந்த பெண், பெருமானின் திருமேனியில் வெண்முத்து போன்று பிரகாசிக்கும் திருநீற்றினைக் கண்டு வியக்கின்றாள். பெருமானின் திருமேனியை உற்று நோக்கிய அவளுக்கு, பெருமானின் இடது பாகத்தில் நீல நிறத்தினோடும் நீண்ட கண்களோடும் காணப்படும் உமை அம்மை கண்ணில் தெரிகின்றாள். அவளுக்கு உடனே கோபம் வருகின்றது. என்ன தைரியம் இருந்தால், உடலில் ஒரு பெண்ணினை வைத்திருக்கும் கோலத்தோடு பிச்சை கேட்க பெருமான் தனது இல்லத்திற்கு வருவார் என்று எண்ணுகின்றாள். அந்த கோபம் வெளிப்படுகின்றது. பெருமானே நாங்கள் உமக்கு பலியிடமாட்டோம், நீர் இந்த இடத்தை விட்டு அகன்று செல்லலாம் என்று கூறுகின்றாள். அவ்வாறு சொன்ன பின்னர் அவளுக்கு வேறு ஒரு சந்தேகம் தோன்றுகின்றது. தனது உடலில் ஒரு பெண்கொடியை கொண்டுள்ள பெருமான் சடையிலும் கங்கையை வைத்துள்ளாரோ என்பதுதான் அந்த சந்தேகம். கங்கை ஆற்றினை உமது சடையில் சூடியவாறு வந்தீரோ, சொல்வீராக என்று பெருமானை வினவுகின்றாள். பெருமானின் அழகில் மயங்கிய தாருகவனத்து பெண்மணிகள், அவர் இரண்டு மனைவியருடன் இருப்பதால் கோபம் கொண்டு பிச்சை இடமாட்டோம் என்று சொன்னதாக, சுவையான கற்பனை செய்த பாடல்.

நீறு நும் திருமேனி நித்திலம் நீல் நெடுங் கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடகிலோம் பலி
                நடமினோ
பாறு வெண்தலை கையில் ஏந்திப் பைஞ்ஞீலியேன் என்றீர்
            அடிகள் நீர்
ஆறு தாங்கிய சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே

இந்த பாடலில் வெறுக்கத் தகாததோர் வெண்தலை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். சிவபிரானுடன் தொடர்புகொண்ட காரணத்தினால், விலை மதிப்பில்லாத தன்மையை அந்த மண்டையோடு பெறுகின்றது. மேலும் உயிர்கள் தங்களது ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை அந்த மண்டையோட்டில் இட்டு உய்வினை அடைவதற்கு உதவுதலால், நாம் அந்த மண்டையோட்டினை மற்ற மண்டையோடு போன்றது என்று கருதி வெறுக்கக் கூடாது என்று அப்பர் பிரான் கூறுகின்றார். இந்த பாடல் உணர்த்தும் உட்கருத்து, பெருமான் மண்டையோட்டினை ஏந்தி திரியும் நோக்கத்தை உணர்ந்துகொண்டு, நமது மூன்று வகையான மலங்களையும் அவரது உண்கலத்தில் இட்டு நாம் உய்வினை அடைய வேண்டும் என்பதே ஆகும்.

இறைவனுக்கு நாம் எதனை படைக்க வேண்டும் என்பதை திருவிளையாடல் புராணத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலில் பரஞ்சோதி முனிவர் கூறுவார் நமது நினைவுக்கு வருகின்றது. விநாயகர் வாழ்த்தாக அமைந்த இந்த பாடலில், ஆணவமலம், கன்மம் மற்றும் உலகப்பொருட்களின் மீதுள்ள பாசம் ஆகியவற்றை ஒன்றாக கலந்து (பசுபோதம் எனப்படும்) சோற்றுருண்டையாக அளிக்க வேண்டும் என்று கூறுகின்றார். உலகில் உள்ள பொருட்களை மூன்று வகையாக பிரித்து, பதி பசு பாசம் என்று வேதாந்தமும் சித்தாந்தமும் கூறுகின்றன. பதி என்பது இறைவனைக் குறிக்கும். பசு என்பது அனைத்து உயிர்களையும் பாசம் என்பது உயிர்களைப் பற்றியிருக்கும் பந்தங்களையும் குறிக்கும். உயிர் தன்னைப் பிணித்திருக்கும் பற்றுகளை அறவே ஒழித்து, தம்மை பீடித்துள்ள மூன்று மலங்களையும் நீக்கினால்தான், வினைகளை மேலும் பெருக்கிக் கொள்வதை நிறுத்தமுடியும். அதனால் தான் மூன்று மலங்களை நாம் வைத்துக்கொள்ளாமல் இறைவனிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுரை கூறுகின்றார். உலகப் பற்றினை தறுகண் = வலிமைமிக்க. தள்ளரிய = தளர்வு அடையாத அன்பு, தொடர்ந்து நிற்கும் அன்பு. பாசக் கள்ள வினை = வஞ்சகம் நிறைந்த ஆணவம், கன்மம் மாயை எனப்படும் மலங்கள்.

உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் என்றும் தறி நிறுவி
                உறுதியாகத்
தள்ளரிய அன்பென்னும் தொடர் பூட்டி இடைப்படுத்தித் தறுகண்
                    பாசக்
கள்ள வினைப் பசுபோதக் கவளம் இடக் களித்துண்டு கருணை
                    என்னும்
கொள் அமுதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து
            வருவினைகள் தீர்ப்பாம்

பொழிப்புரை

நாம் அளிக்கவிருக்கும் மூன்று மலங்களையும் ஏந்தி நாம் உய்வதற்கு வழிவகுப்பதால் வெறுக்கத்தகாத மண்டையோட்டினை கையில் ஏந்தியவாறு, ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் கலந்த உருவத்தோடு, தனக்கு பிச்சை இடுவாரின் வீட்டு வாயில்களைத் தேடிக்கொண்டு தெருக்களில் திரிபவர் சிவபெருமான். ஒப்பற்றவராக இருக்கும் அவருக்கு பல பெயர்கள் உள்ளன. அவர்தான் செம்பொன்பள்ளி தலத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.