சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

60. ஆராரும் மூவிலைவேல் - பாடல் 5

நரகத்தைக் காண்பதையே தவிர்த்து அருள்புரியும்

Updated On :4 மே 2017, 12:28 pm

பாங்குடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து
      அவனுக்கு அருள் செய்த பரமன் தன்னை
பாங்கிலா நரகு அதனைத் தொண்டரானார் பாராத வகை
         பண்ண வல்லான் தன்னை
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ்
    அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும்
தீங்கில் திரு வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே
    திகைத்து நாள் செலுத்தினேனே
 

விளக்கம்

ஓம்புதல் என்றால் பாதுகாத்தல் என்று பொருள். தினமும் நம்மைப் பாதுகாக்கும் இறைவன் உறையும் இடமாக விளங்குவதாலும் வியாக்ரபாத முனிவர் (புலிக்கால் முனிவர்) வழிபட்ட திருக்கோயில் என்பதாலும் ஓமாம்புலியூர் என்ற பெயர் வந்தது என்பர். தனது தொண்டர்கள் நரகம் என்பதனை காணாவண்ணம் உதவி செய்பவன் என்று பெருமான், நம்மை பாதுக்காக்கும் தன்மையை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். இவ்வாறு அப்பர் பிரான் கூறுவது நமக்கு சுந்தரரின் தில்லைப் பதிகத்தினை (7.90) நினைவூட்டுகின்றது. இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும், தருமராசன், நம்மை செக்கில் இட்டு ஆட்டும் போது, அந்த கொடுமையைத் தவிர்த்து நம்மைக் காப்பாற்றும் கடவுள் சிவபெருமான் என்று சுந்தரர் கூறுகின்றார். பதிகத்தின் இரண்டாவது பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஓராது = அவர்களின் நிலையை ஆராயாது.

பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி
சீரார்ந்த அன்பராய்ச் சென்று முன்னடி வீழும் திருவினாரை
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்
                கொள்வான்
பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம் பெருமானை பெற்றாம்
                அன்றே

மேற்கண்ட பாடலில் சுந்தரர் பெருமான் தனக்கு அன்பராய் வாழும் அடியார்களை எவ்வாறு காப்பாற்றுவார் என்பதை கூறுகின்றார். மேலும் பெருமானின் அன்பராய் விளங்கும் அடியார்கள், உலக இன்பத்தை பெரிதாக கருதாமல் வாழ்வார்கள் என்பதையும் இங்கே உணர்த்துகின்றார். இவ்வாறு நம்மைக் காப்பாற்றும் பெருமானின் திருவடிகளை அடைந்த நாம், வாழ்க்கையில் பெறுவதற்குரிய பொருள் வேறேதும் இல்லை என்றும் இங்கே கூறுகின்றார்.

மணிவாசகப் பெருமானும் இதே கருத்தை வலியுறுத்தி, மூவேழ் சுற்றம் முரண் உரு நரகிடை இடை ஆழாமே அருள் அரசே போற்றி என்று சிவபிரானை போற்றுகிறார். மேலும் மணிவாசகர் கண்டப்பத்து பதிகத்தின் முதல் பாடலில், ஐம்புலன்களின் சேர்க்கையால் மயங்கி இருந்து நரகத்தில் விழ இருந்த தனது சிந்தை தெளிவித்து சிவபிரான் ஆட்கொண்ட தன்மையை குறிப்பிடுகின்றார்.

இந்திரிய வய மயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்து போய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தை தனை தெளிவித்துச் சிவமாக்கி எனை ஆண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே

பாங்கு = நன்மை. எல்லாவற்றையும் அழிக்கும் திறன் கொண்ட அக்னி, பலராலும் இகழப்பட்டதால் மனம் வருந்திய அக்னிதேவன், இறைவனை வழிபாட்டு, அடுத்தவர்கள் தன்னை இகழாத நிலையினைப் பெற்றான் என்று புராணங்கள் கூறுகின்றன. பல தலங்களில் இறைவனின் திருநாமம் அக்னீஸ்வரர் என்று உள்ள நிலை, அக்னி வழிபட்டதையும் அவன் அடைந்த நன்மையையும் நமக்கு உணர்த்துகின்றன.

பொழிப்புரை

தான் இதற்கு முன்னம் செய்த நற்செயல்களின் பயனாக இறைவனை வணங்கும் பேற்றினை பெற்றதால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்ட. அழகிய வடிவினை உடைய அக்னித் தேவன் மேல் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவனுக்கு அருள்கள் பல புரிந்தார். மேலும் சிவபெருமான், தன்னைத் தொடர்ந்து வழிபடும் தொண்டர்கள், நரகத்தில் சென்று இடர்படாத வண்ணம், அவர்கள் நரகத்தைக் காண்பதையே தவிர்த்து அருள்புரியும் கருணை உள்ளம் கொண்டவர் ஆவார். அத்தகைய இறைவன், ஓங்கி உயர்ந்த மதில்களால் சூழப்பட்டதும், அழகு மிகுந்த காணப்படுவதும், உயர்ந்த புகழுடைய அந்தணர்கள் புகழ், உலகத்தவர்க்கு நன்மை பயக்கும் வகையில் வழிபாடுகளைச் செய்து வரும் நகரமாகிய ஓமாம்புலியூர் என்ற தலத்தில் உள்ள வடதளி என்று அழைக்கப்படும் திருகோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.