பாடல் 3:
விண்ணோர் பெருமானே விகிர்தா விடை ஊர்தீ
பெண் ஆண் அலியாகும் பித்தா பிறைசூடி
எண்ணார் எருக்கத்தம்புலியூர் உறைகின்ற
அண்ணா என வல்லார்க்கு அடையா வினை தானே
விளக்கம்:
விகிர்தன்=மாறுபட்டவன்; விடை=இடபம்; எண்ணார்=எண்ணத்தகும் பித்தா பிறைசூடி என்று இங்கே சம்பந்தர் உணர்த்தும் தொடரே சுந்தரரின் வாக்காக பின்னர் அமைந்தது. வாகீச கலாநிதி திரு. கி.வா.ஜா. அவர்கள் பித்தா பிறைசூடி என்ற தொடருக்கு ஒரு சுவையான விளக்கத்தினை, தனது திருமுறை மலர்கள் என்ற புத்தகத்தில் அளித்துள்ளார். தக்கனது யாகத்தில் பங்கேற்றதற்காக, சந்திரனைத் தனது காலால் தேய்த்த சிவபெருமான், அதே சந்திரன், தனது கலைகளை இழந்து அழியும் தருவாயில் சிவபிரானிடம் சரணடைந்த போது, எஞ்சியிருந்த ஒரே கலையினை தனது தலையில் வைத்துக் கொண்டு சந்திரன் அழியாமல் காப்பாற்றுகின்றார். காலால் தேய்த்த ஒரு பொருளினை எவரேனும் தலையில் வைத்துக் கொள்வார்களா என்ற கேள்வியை எழுப்பும் கி.வா.ஜா அவர்கள், பித்தா என்று அழைத்தது மிகவும் பொருத்தம் என்று வேடிக்கையாக கூறுகின்றார். பித்தா என்று அழைத்ததற்கு காரணத்தை நமக்கு உணர்த்தும் வகையில், பிறைசூடி என்று உடனே சுந்தரர் தனது முதல் பதிகத்தில் கூறுகின்றார் என்று திரு கி.வா.ஜா. அவர்கள் கருத்து தெரிவிக்கின்றார்.
சுந்தரருக்கு முன்னோடியாகத் திகழ்ந்த ஞானசம்பந்தரும், அப்பர் பெருமானும் பல பாடல்களில் சிவபெருமானை பித்தன் என்று அழைக்கின்றார்கள். காலால் தேய்த்த சந்திரனை தலையில் அணிந்து கொண்டது, எல்லோரும் அமுதம் உண்பதற்காக காத்திருந்த போது கடலில் இருந்து எழுந்த விடத்தை உண்டது, அனைத்து உலகங்களும் தனக்கு சொந்தமாக இருக்கையில் சுடுகாட்டில் சென்று உறைவது, மிகவும் சக்தி வாய்ந்த சக்கரப் படையை தான் வைத்துக் கொள்ளாமல் திருமாலுக்கு அருளியது, என்பது போன்று பல செயல்களை, பொதுவாக எவரும் தவிர்க்கும் செயல்களைச் செய்தவர் பித்தராகத் தானே இருக்க முடியும். மணிவாசகரும் பல பாடல்களில் பித்தன் என்று குறிப்பிடுகின்றார்.
தான் அருளிய முதல் பதிகத்தின் பத்தாவது பாடலில் (1.1.10) ஞான சம்பந்தர் பெருமானை பித்தர் போலும் என்று கூறுவதை நாம் இங்கே காணலாம். .யானையின் பசுந்தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் எவரும் அதனை அணிய மாட்டார்கள். ஆனால் பெருமான், ஏனையோரிடமிருந்து மாறுபட்டு அணிந்து கொண்டமையை குறிப்படும் வண்ணம் பித்தர் என்று சம்பந்தர் அழைத்தார் போலும். பெருமான் பலி ஏற்கும் நோக்கத்தை அறியாதவராக பொருந்தாத சொற்களை புத்தரும் சமணரும் கூறிய போதிலும், அந்த சொற்களை பொருட் படுத்தமால் பெருமான், உலகத்தவர் தனக்கு பிச்சையிட்டு உய்வதற்கு வாய்ப்பினை தொடர்ந்து அளிக்கும் வண்ணம் பிச்சை ஏற்கின்றார் என்பதை இங்கே உணர்த்துகின்றார்
புத்தரோடு பொறி இல் சமணும் புறம்
கூற நெறி நில்லா
ஒத்த சொல்ல உலகம் பலி தேர்ந்து எனது
உள்ளம் கவர் கள்வன்
மத்த யானை மறுக உரி போர்த்ததோர்
மாயம் இது என்னப்
பித்தர் போலும் பிரமாபுரம் மேவிய பெம்மன்
இவன் அன்றே
பாம்புரம் தலத்தின் மீது அருளிய பாடலில் (1.41.3) பெருமானின் திருக்கோலத்தை குறிப்பிடும் சம்பந்தர், பித்தராய் திரியும் கோலம் என்று குறிப்பிடுகின்றார். தைக்கப் பட்ட கோவணம் அணிந்து, அந்த கோவணத்தின் மேலோர் பாம்பினைச் சுற்றி, நீண்ட சடைகள் தொங்கும் வண்ணம் திரிபவரை பித்தர் கோலத்தவர் என்று அழைப்பது பொருத்தம்தானே. சூறை=காற்று; சூறை நல்லரவு=காற்றினை உட்கொள்ளும் பாம்பு. மூச்சிறைக்க, புஸ் புஸ் என்று சத்தமிட்டுக் கொண்டு சீறும் நாகத்தினை காற்றை உட்கொள்ளும்
நாகம் என்று குறிப்பிட்டார் போலும்.
துன்னலின் ஆடை உடுத்து அதன் மேலோர்
சூறை நல்லரவு அது சுற்றிப்
பின்னு வார் சடைகள் தாழ விட்டு ஆடிப் பித்தராய்த்
திரியும் எம் பெருமான்
மன்னு மாமலர்கள் தூவிட நாளும்
மாமலையாட்டியும் தாமும்
பன்னு நான்மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன் நகராரே
புள்ளிருக்கு வேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.43.7) அழகிய திருமேனியை மறைத்த வண்ணம் யானைத் தோலை போர்த்துக் கொண்டும், கையினில் தீப்பிழம்பினை ஏந்தியும், பிச்சை ஏற்பதற்காக பல இடங்களிலும் பித்தரைப் போல் திரியும் பெருமான் என்று சம்பந்தர் கூறுகின்றார். இந்த பதிகத்தின் மற்றைய பாடல்களில் சடாயு மற்றும் சம்பாதி ஆகிய இருவரும் குறிப்பிடப் படுவதால், இந்த பாடலிலும் சடாயு மற்றும் சம்பாதி செய்த வழிபாட்டினை குறிப்பிடுவதாக நாம் கொள்ள வேண்டும்.
அத்தியின் ஈருரி மூடி அழகாக அனல் ஏந்திப்
பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம்
பத்தியினால் வழிபட்டுப் பல காலம் தவம் செய்து
புந்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே
தனது அடியார்களுக்கு வரம் அளிப்பதில் வரம்பு ஏதும் இல்லாமல் அளிப்பதால் பெருமானை பித்தர் என்று பெரியோர்கள் குறிப்பிடுவார்கள். அத்தகைய பித்தரை நாம் வழிபட்டு பயன் அடையவேண்டும் என்று அப்பர் பிரான் உணர்த்தும் பாடல் இது (4.31.4). இரவின் நான்காவது கூறாகிய அதிகாலைப் பொழுதினில் எழுந்து குளித்த பின்னர், பெருமானிடத்தில் பக்தி கொண்டு, அரும்பு மற்றும் மலர்கள் பறித்து, உள்ளத்தில் பொங்கும் ஆர்வத்துடன், விளக்குகளை ஏற்றி, தூபங்களை முறைப்படி இறைவனுக்கு சமர்ப்பித்து, வழிபடும் அடியார்களுக்கு கட்டிக்கரும்பு போன்று கடவூர் வீரட்டனார் இனிப்பவராக இருப்பார் என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து.
பெரும்புலர் காலை மூழ்கிப்
பித்தர்க்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு
ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி நல் விளக்குத் தூபம் விதியினால்
இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார்
கடவூர் வீரட்டனாரே
நாட்டினில் நல்ல அரங்குகள் பல இருக்கையில், அவை அனைத்தையும் விடுத்து காட்டினை அரங்கமாகக் கொண்டு நடமாடும் பெருமானை பித்தன் என்று அப்பர் பிரான் அழைக்கும் பாடல் தில்லைத் தலத்தின் அருளிய பாடலில் (5.2.5) ஒன்றாகும்.
பித்தனைப் பெருங்காடு அரங்கா உடை
முத்தனை முளை வெண்மதி சூடியைச்
சித்தனைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ
வாய்மூர் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (5.50.8) அப்பர் பிரான் சிவபெருமானை பித்தர் என்று கூறுகின்றார். பத்து பாடல்கள் பாடிய பின்னரும் அடைக்கப்பட்டு இருந்த மறைக்காடு தலத்தின், திருக்கோயில் கதவுகளை திறக்க முடியாமல், பதினோராவது பாடல் மூலம் திறந்த நானும், என்னிலும் அதிகமாக தமிழ்ப்புலமை வாய்க்கப்பெற்று பதிகத்தின் முதல் பாடல் மூலம் கோயில் கதவுகளை அடைத்த ஞான சம்பந்தரும் இருக்கும்போது, உன்னை நீ மறைத்துக் கொள்ள நினைத்தால் நீ பித்தனே என்ற பொருள் பட, பாடிய பாடல். அப்பர் பிரான் பாடியதற்கு ஏற்ப, இறைவன் தனது நடனக் கோலத்தை காட்ட, இருவரும் கண்டு மகிழ்ந்தார்கள்.
திறக்கப் பாடிய என்னினும் செந்தமிழ்
உறைப்புப் பாடி அடைப்பித்தாரும் நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைக் கொள் செஞ்சடையார் இவர் பித்தரோ
எளிதாக பிட்டு பெரும் வழிமுறைகள் பல இருக்கையில், அவற்றில் ஒன்றினைப் பின்பற்றாமல், பிட்டு வேண்டும் என்பதற்காக மண் சுமந்த பெருமானை பித்தன் என்று மணிவாசகர் கூறும் பாடல், திருக்கழுக்குன்றப் பதிகத்தில் காணப் படுகின்றது. சழக்கன்=குற்றம் உடையவன்: உன்னைப் பின்பற்றாத காரணத்தால் என்னால் உன்னை அடைய முடியவில்லை. ஆயினும் எல்லையில்லாத உனது கருணை, நாயினும் தாழ்ந்த என்னை ஆட்கொள்கின்றது. எனவே தான் நீ எனக்கு கழுக்குன்றத்தில் காட்சி
அளித்துள்ளாய் என்று இறைவனின் கருணையை நினைத்து மணிவாசகர் மகிழும் பாடல்.
பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப்
பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்திலாத சழக்கனேன்
உனைச் சார்ந்திலேன்
சிட்டனே சிவலோகனே சிறுநாயினும்
கடையாய எம்
கட்டனேனையும் ஆட்கொள்வான் வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே
கங்கை கொண்ட சோளேச்சரம் தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் கருவூர்த் தேவர், நாம் அவன் பால் வைக்கும் அன்பு மிகவும் சிறிய அளவினதாக இருந்தாலும் அதற்கு பரிசாக சிவலோகம் அளிப்பவன் சிவபெருமான் என்று குறிப்பிட்டு அவனை பித்தன் என்று பலரும் அழைப்பதன் காரணத்தை நமக்கு உணர்த்துகின்றார். இந்த பாடலில், மகளிர் பால் நாம் வைக்கும் அன்பினை ஒரு இலட்சம் கூறிட்டு, அதனில் ஒரு கூற்றுக்கு சமமான அன்பினை இறைவன் பால் வைத்தால், சிவலோகத்தை அளிக்கும் தன்மையன் என்று சிவபெருமானை கருவூர்த் தேவர் குறிப்பிடுகின்றார். இந்த கருணைச் செயல் புரியும் இறைவனை ஒவ்வொரு சமயம் பித்தன் என்று அழைக்கும் அடியார்கள் செய்யும் தவறுகளை பொறுத்து அருள் புரியும் இறைவனின் கரம், தனது தலையின் மீது வைக்கப்பட்டதாக கருவூர்த் தேவர் இந்த பாடலில் கூறுகின்றார். தத்தை=கிளி; தயா=அன்பு
தத்தை அங்கனையார் தங்கள் மேல் வைத்த
தயாவை நூறாயிரம் கூறிட்டு அத்தில் அங்கு
ஒரு கூறு உன் கண் வைத்தவருக்கு அமருலகம்
அளிக்கும் நின் பெருமை
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை
பொறுத்து அருள் செய்யும்
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த
கங்கை கொண்ட சோளேச்சரத்தானே
பித்தா என்று பெருமானை அழைப்பது பெருமானுக்கு மிகவும் உகந்த செயலாக கருதப் படுவதால் அவ்வாறு அழைக்கும் அடியார்கள் வினைகளால் இடர்ப்படா வண்ணம் காக்கும் பெருமான் அவர்களுக்கு இன்பத்தை வழங்குகின்றார் என்று சீர்காழி தலத்தின் மீது அருளிய பாடல் ஒன்றினில் (1.102.4) சம்பந்தர் கூறுகின்றார்.
எண்ணார் முத்தம் ஈன்று மரகதம் போல் காய்த்துக்
கண்ணார் கமுகு பவளம் பழுக்கும் கலிக்காழி
பெண்ணோர் பாகா பித்தா பிரானே என்பார்க்கு
நண்ணா வினைகள் நாடொறும் இன்பம் நணுகுமே
பொழிப்புரை:
விண்ணவர்களின் தலைவனே, மற்ற தேவர்களில் இருந்து பண்பிலும் தன்மையிலும் உருவத்திலும் மாறுபட்டவனே, இடபத்தை வாகனமாகக் கொண்டவனே, பெண்ணாகவும் ஆணாகவும் அலியாகவும் உள்ளவனே, அடியார்களுக்கு வரம்பின்றி அருள் செய்வதில் பித்தர் போன்று செயல்படுபவரே, தன்னிடம் சரண் அடைந்த பிறைச் சந்திரனைத் தனது தலையில் சூட்டிக் கொண்டவனே, அனைவரும் எண்ணத்தகும் வண்ணம் சிறப்பு வாய்ந்த எருக்கத்தம்புலியூர் தலத்தில் உறைபவனே, அண்ணா என்று பலவாறு உன்னை புகழ்ந்து போற்றும் அடியார்களை வினைகள் சென்று அடையா.
Audio
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


