திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

96. கண் காட்டு நுதலானும் - பாடல் 4

சிவபெருமான் ஒருவருக்கே

News image
Updated On :1 ஜூலை 2018, 9:54 am


பாடல் 4:

    விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண் புறவின்
    மடல் விண்ட முடத்தாழை மலர் நிழலை குருகு என்று
    தடம் மண்டு துறைக் கெண்டை தாமரையின் பூ மறையக்
    கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே

விளக்கம்:

தாமரை மலரின் கீழே சென்று இருக்கும் கெண்டை மீனையும் அருகில் இருக்கும் முத்தினையும் காணும் சம்பந்தர், இந்த இயற்கைக் காட்சியின் மீது தனது கற்பனையை கலந்து மிகவும் அழகாக கூறுவதை நாம் மேற்கண்ட பாடலில் காணலாம். தாழை மலரின் நிழலை தன்னை கொத்த வந்த பறவை குருகு என நினைத்து பயந்து தாமரை மலரின் கீழ் ஒதுங்கும் கெண்டை மீனைப் பார்த்து முத்துக்களாகிய பற்களைக் காட்டி கடல்  நகைக்கின்றது என்று நயம்பட இந்த பாடலில் சம்பந்தர் கூறுகின்றார். இவ்வாறு இயற்கையாக நடக்கும் செயலின் மீது தனது கற்பனையை ஏற்றி நயமாக உரைப்பதை தற்குறிப்பேற்ற அணி என்று தமிழ் இலக்கணத்தில் கூறுவார்கள். கெண்டை மீனின் அறியாமையைக் கண்டு கடல் சிரிப்பது பிள்ளையாரின் கற்பனை. மிடற்று அண்ணல்= நீலகண்டராகிய சிவபெருமான்; சிவபெருமானைத் தவிர்த்து வேறு எந்த தெய்வத்தின், கழுத்தும் விடத்தினைத் தேக்கியதால் கருமை நிறம் கொண்டதாக இல்லாத காரணத்தினால், சிவபெருமான் ஒருவருக்கே நீலகண்டர், மணிகண்டர், மிடற்று அண்ணல் ஆகிய பெயர்கள் பொருத்தம் ஆனவை. தண்புறவு=குளிர்ந்த முல்லை நிலம்; முடத்தாழை= வளைந்து தொங்கும் தாழை மடல்; தடம்=குளம்; விண்ட=வெளிப்படுத்திய; கதிர் முத்தம்= ஒளி வீசும் முத்து  இல்லாத பறவையை நினைத்து கெண்டை மீன்கள் அச்சம் கொள்வது போன்று, நாமும் நமது வாழ்க்கையில் இல்லாத தீங்கினை நினைத்து சில சமயங்களில் தடுமாறுகின்றோம். அதற்கு காரணம் மனம் ஒரு தெளிவான நிலையில் இல்லாமல் இருப்பது தான். மனதில் ஏற்படும் சஞ்சலத்தை தீர்த்து தெளிவினை அருளும் தன்மை கொண்டவன் சிவபெருமான் ஒருவன் தான், அவனை வழிபட்டு மனத்தெளிவுடன் நம்மை எதிர்நோக்கும் சூழ்நிலையை நாம் அணுக வேண்டும் என்ற அறிவுரை இந்த பாடல் மூலம் வழங்கப்படுகின்றது என்று பெரியோர்கள் கூறுகின்றனர். 
  
பொழிப்புரை:

விடத்தினை உட்கொண்டு தனது கழுத்தினில் தேக்கியதால் கருமையான மணி பதித்தது போன்ற கழுத்தினை உடைய பெருமான் சிவனார் உறையும் இடமாகிய திருவெண்காடு தலத்தில் உள்ள குளிர்ந்த முல்லை நிலத்தில் காணப்படும் வளைத்து தொங்கும் தாழை மடலின் நிழலைக் கண்ட, குளிர்ந்த நீர்நிலையில் வாழும் கெண்டை மீன், அதனை தன்னைக் கொத்த வந்த பறவை என்று தவறாக புரிந்து கொண்டு அருகில் உள்ள குளத்தில் காணப்படும் தாமரை மலரின் அடியில் சென்று மறைந்து கொள்கின்றது. தலத்தின் அருகில் உள்ள கடல், கரையில் கொண்டு வந்த சேர்த்த ஒளிவீசும் வெண்மை நிறம் உடைய முத்து ஒளிவீசும் கதிர்களைக் கொண்டுள்ள நிலை, இந்த காட்சியைக் கண்டு கடல் சிரிப்பது போன்ற தோற்றத்தை தருகின்றது. இவ்வாறு தாழை மலர்களும், பறவைகளும் மீன்களும் நிறைந்து நீர்வளமும் நிலவளமும் பொருந்திய திருவெண்காடு தலத்தின் கரையில் வெண்முத்துகளும் காணப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.