திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

96. கண் காட்டு நுதலானும் - பாடல் 7

யானை சிவபிரானை

News image
Updated On :1 ஜூலை 2018, 9:55 am

பாடல் 7:

    சக்கரம் மாற்கு ஈந்தானும்
       சலந்தரனைப் பிளந்தானும்
    அக்கு அரை மேல் அசைத்தானும் அடைந்த
        அயிராவதம் பணிய
    மிக்க அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும்
        வினை துரக்கும் 
    முக்குள நன்கு உடையானும் முக்கண்
         உடை இறையவனே

விளக்கம்:

யானை சிவபிரானை பூசித்த ஒன்பது தலங்களில் இது ஒன்றாகும். அந்த ஒன்பது தலங்களாவன, இன்னம்பர், எதிர்கொள்பாடி, கானப்பேர், கோட்டாறு, திருவானைக்கா, திருக்காளத்தி, திருவெண்காடு, பெண்ணாடகம் மற்றும் ஆலவாய் ஆகும். அப்பர் பிரானும் தவங்கள் செய்த வெள்ளானைக்கு வேண்டிய வரம் கொடுத்தவர் என்று தமது பதிகத்தில் (தூண்டு சுடர் மேனி எனத் தொடங்கும் பதிகம்) ஒன்பதாவது பாடலில் கூறுகிறார்,

    புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார்
         பொறி அழலாய் நின்றான்  தன்னை
    உள்ளானை ஒன்று அலா உருவினானை உலகுக்கு
         ஒரு விளக்காய் நின்றான் தன்னை
    கள் ஏந்து கொன்றை தூய்க் காலை மூன்றும்
         ஓவாமே நின்று தவங்கள் செய்த
    வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார்
       வெண்காடு மேவிய விகிர்தனாரே

மாற்கு=திருமாலுக்கு; அக்கு=எலும்பு மற்றும் சங்குமணி ஆகிய இரண்டு பொருட்களும் இங்கே பொருத்தமாக உள்ளன. அரை=இடுப்பு; ஒருமுறை இந்திரன் அயிராவதம் யானையின் மீது சென்று கொண்டிருந்த போது அவனது எதிரில் துர்வாச முனிவர் வந்தார். இந்திரனைக் கண்டவுடன் முனிவர், தனது கையிலிருந்த, சிவபெருமானின் பிரசாதமாகிய மாலையினை இந்திரனுக்கு அளித்தார். அதனைப் பெற்றுக்கொண்ட இந்திரன், சற்று அசிரத்தையாக தான் அமர்ந்திருந்த யானையின் மத்தகத்தின் மேலே மாலையை வைத்தான். மாலையின் இருந்த நாறு விளைவித்த குறுகுறுப்பை தாங்க முடியாத யானை, மாலையை கீழே எறிந்தது; சிவ அபராதம் செய்த, இந்திரனுக்கு பதவி பறிபோகும் என்றும் அயிராவதம் யானை கருமை நிறத்துடன் காட்டு யானையாக திரியும் என்றும் முனிவர் சாபம் அளித்தார். யானையும் இந்திரனும் வெண்காட்டு இறைவனை வழிபட்டு விமோசனம் பெற்றன என்று தலபுராணம் கூறுகின்றது. இந்திரன் செய்த வழிபாடு இதே பதிகத்தின் மூன்றாவது பாடலில் குறிப்பிடப் பட்டுள்ளது.     

பொழிப்புரை:

மிகவும் அரியதாகிய சக்கராயுதத்தை திருமாலுக்கு அளித்தவனும், அரக்கன் சலந்தரனின் உடல் இரண்டு கூறாக பிளக்கும் வண்ணம் செய்தவனும், எலும்பு மாலையை தனது இடுப்பினில் கட்டிக் கொண்டு அசைத்தவனும், தன்னை சரணடைந்த அயிராவதம் யானை பணிந்த போது அந்த யானைக்கு அருள் புரிந்தவனும், வினைகளை நீக்கவல்ல மூன்று குளங்களை உடைய திருவெண்காடு தலத்தினைத் தனது உறைவிடமாகக் கொண்டவனும் ஆகிய பெருமான், மூன்று கண்களை உடைய பெருமான் ஆவான்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.