பாடல் 4:
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப் புன்னையும்
தாழை வெண்குருகு அயல் தயங்கு கானலில்
வேழமது உரித்த வெண்காடு மேவிய
யாழினது இசை உடை இறைவர் அல்லரே
விளக்கம்:
ஞாழல்=புலிநகக் கொன்றை மலர்; செருந்தி=சிகப்பு நிறத்தில் உள்ள பூ; தேவியின் குரல் இனிமைக்கு யாழ், வீணை, தேன், பால், கரும்பின் சாறு, கரும்பு கட்டி, வெல்லப்பாகு, குழல், மழலை மொழி ஆகியவை போன்று இனிமையாக இருப்பதாக பல திருமுறை பாடல்கள் குறிப்பிடுகின்றன. பெருமானின் மொழி இனிமையை குறிப்பிடும் பாடல்கள் மிகவும் அரிது. குருகு=குருக்கத்தி மலர்; கானல்=கடற்கரை சோலை; யாழினது இசை உடையவன் என்ற தொடருக்கு, யாழினை உடையவன் என்று சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். யாழ் என்றும் வீணை என்றும் பெருமான் வாசிக்கும் கருவியை தேவார ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்
திருக்கானூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (1.73.8) தமிழ் போன்று இனிய வார்த்தைகள் பேசி பெருமான் தனது இல்லத்திற்கு வந்ததாக சம்பந்தர் நாயகி கற்பனை செய்கின்றாள். மேலும் தாளத்தோடு கூடிய இனிய பாடல்களை, வீணை குழவம் (மத்தளம் போன்ற கருவி) மொந்தை (பறை போன்ற இசைக்கருவி) எழுப்பும் பின்னணி இசைக்கு ஏற்ப பாடிக்கொண்டு வந்த பெருமான், அழகிய திருமேனியை உடையவர், தனது இல்லத்தின் உள்ளே புகுந்த பின்னர், அந்த இடத்தினை விட்டு பெயராமல் சிறிது நேரம் இருந்தார். நான் அவர் பால் காதல் கொண்டிருந்தது போல் அவரும் என் பால் கொண்டுள்ள காதலால் என்னை விட்டு பிரியாமல், எனது இல்லத்தில் நீண்ட நேரமாக இருக்கின்றார் என்று நான் எண்ணிய போது திடீரென்று அவர் மறைந்து விட்டார். அவர் மறைந்ததால் ஏற்பட்ட ஆற்றாமையால் எனது மேனிஇளைத்தது, உருவத்தின் அழகு குறைந்தது, மேலும் எனது உடலில் பசலை படர்ந்து உடலின் நிறமே மாறியது. இவ்வாறு என்னை மாற்றியவர் கானூர் தலத்தில் உள்ளவரும் பவள நிறத்தில் திருமேனியை உடையவரும் ஆகிய பெருமான் ஆவார் என்று சம்பந்தர் நாயகி இறைவன் தன்னை விட்டு பிரிந்ததால் ஏற்பட்ட விளைவினை
கூறும் நயமான பாடல். குமிழம்பூ என்பது பாலை நிலத்தில் பூக்கும் ஒரு பூ வகை. பெண்களின் கூறிய மூக்கினுக்கு உவமையாக பல இலக்கியங்களிலும் சொல்லப் படுவது. பொன்னின் நிறத்திலும் மங்கிய சிவப்பு (Rose) வண்ணத்திலும் காணப்படுகின்றது. இங்கே பசலை பூத்த தனது மேனியின் நிறத்திற்கு உவமையாக குமிழம்பூ நிறத்தினை தலைவி குறிப்பிடுகின்றாள்.
தமிழின் நீர்மை பேசித் தாளம் வீணை பண்ணி நல்ல
முழவ மொந்தை மல்கு பாடல் செய்கை இடம் ஒவார்
குமிழின் மேனி தந்து கோல நீர்மை அது கொண்டார்
கமழும் சோலைக் கானூர் மேய பவள வண்ணரே
திருநணா (தற்போதைய பெயர் பவானி) மீது அருளிய பதிகத்தின் பாடல் ஒன்றினில் (2.72.2) பெருமான் வீணை ஏந்தியிருப்பதாக திருஞான சம்பந்தர் கூறுகின்றார். நாட்டம்=கண்; ஈட்டும் துயரம் என்று உயிர்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு காரணமான வினைகளை இங்கே குறிப்பிடுகின்றார். சேடு ஆர்=உயர்ந்த இடம், இங்கே மலை; முந்தூழ்=மூங்கில்
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான் மற்றொரு கை வீணை ஏந்தி
ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான் இடம் போலும் இலை சூழ் கானில்
ஓட்டம் தரு அருவி வீழும் விசை காட்ட முந்தூழ் ஓசைச்
சேட்டார் மணிகள் அணையும் திசை சேர்க்கும் திருநணாவே
கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடலில் (2.85.1) வீணை வாசித்தவாறு பெருமான் தனது உள்ளத்தில் இருப்பதாக சம்பந்தர் கூறுகின்றார். மேலும் தனது உள்ளத்தினில் இறைவன் அமர்ந்து இருப்பதால், அனைத்து கோள்களும் தனக்கு குற்றமற்ற வகையில் நன்மை செய்யும் என்றும் மிகவும் உறுதியாக கூறுகின்றார்.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல
வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே
புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி
பாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார்
அவர்க்கு மிகவே
திருவலஞ்சுழி தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடல் (2.106.9) ஒன்றினில், திருஞான சம்பந்தர், தனது கையினில் பெருமான் வீணை வைத்துக்கொண்டு இருப்பதாக கூறுகின்றார். வலஞ்சுழி தலத்தினை அடியார்கள் வலம் வருவதை பாதத்தால் சுழலும் மாந்தர்கள் என்று சம்பந்தர் குறிப்பிடுவது புதுவிதமான சொல்லாட்சியாக உள்ளது.
அழலது ஓம்பிய அலர் மிசை அண்ணலும் அரவணை துயின்றானும்
கழலும் சென்னியும் காண்பரிதாயவர் மாண்பமர் தடக்கையில்
மழலை வீணையர் மகிழ் திருவலஞ்சுழி வலம் கொடு பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு துன்பங்கள் களைவாரே
பல்லவனீச்சரம் தலத்தின் மீது பாடிய பாடலில் (3.112.1) பாடல் வீணையர் என்று சம்பந்தர் கூறுகின்றார். ஒரு கையினில் மழு ஏந்தியும் மற்றொரு கையில் வீணை ஏந்தியும் காட்சி அளிக்கும் பெருமான் எத்தன்மையர் என்று எவ்வாறு கூறுவது என்று சம்பந்தர் இங்கே உணர்த்துகின்றார். ஆயுதம் ஏந்துவதும் வீணை இசைப்பது ஒன்றுக்கொன்று மாறுபட்டு பொருந்தாத செய்கையாக இருக்கும் நிலை இங்கே உணர்த்தப் படுகின்றது. பாணியர்= கையில் ஏந்தியவர். தண்டபாணி கோதண்டபாணி, சாரங்கபாணி சக்கரபாணி என்று கூறுவதைப் போன்று பரசுபாணி என்று நாம் பொருள் கொள்ள வேண்டும்.
பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்துறை பல்லவனீச்சரத்து
அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் யார்
வெள்ளிக்குழைத்துணி என்று தொடங்கும் பொது பதிகத்தின் பாடலில் (4.112.7) பிரளயம் முடிந்த பின்னர் மீண்டும் உலகினை தோற்றுவிக்கும் எண்ணத்துடன் பெருமான் வீணை வாசிப்பதாக அப்பர் பிரான் கூறுகின்றார். ஊழிக் காலத்தையும் தாண்டி சிவபெருமான் இருக்கும் நிலையும், உலகினை மறுபடியும் தோற்றுவிக்கும் எண்ணம் கொண்டு, விளையாட்டாக உலகினைத் தோற்றுவித்து, உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கும் இறைவனின் கருணையும் இந்த பாடலில் அப்பர் பெருமானால் உணர்த்தப்படுகின்றது. களேபரம்=உயிரற்ற உடல்: பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் தெய்வங்களாக கொண்டாடப்படினும், அவர்களுக்கும் முடிவு என்பது உண்டு என்பதும், சிவபெருமான் ஒருவன் தான் முடிவில்லாதவன் என்பதையும் உணர்த்தும் பொருட்டு, பிரமன் மற்றும் திருமால் ஆகியோரின் உடல்களை தோள் மேல் போட்டுக் கொண்டு சிவபெருமான் கங்காள வேடம் தாங்கி இருப்பதாக இங்கே கூறப்படுகின்றது
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய்
வரும் கடன் மீள நின்று எம்மிறை நல்வீணை வாசிக்குமே
திருவெண்காடு தலத்தின் மீது அருளிய திருத்தாண்டகத்தின் ஒரு பாடலில் (6.35.2) அப்பர் பிரான் ஊழி வெள்ளம் பெருகி உலகங்கள் அனைத்தையும் அழித்து ஒலி ஓய்ந்து அடங்கிய பின்னர், வீணையில் வேதத்தின் ஒலியை வாசித்து, சிவபெருமான் இன்பம் அடைவார் என்று கூறுவதன் மூலம், ஊழிக் காலத்தையும் தாண்டி நிற்பவர் சிவபெருமான் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். ஏதம்=துன்பம்: ஒத்து=ஒன்றாகக் கலந்து. இந்த பாடலில் திருவடிப் பெருமை கூறப்படுகின்றது.
பாதம் தரிப்பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழும் உருவப் பாய்ந்த பாதர்
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ் உலகுமாய் நின்ற ஏக பாதர்
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டேறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின்
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே
ஆமாத்தூர் தலத்து பாடல் ஒன்றினில் (6.09.2) அப்பர் நாயகி தனது இல்லம் நோக்கி பலி ஏற்பதற்கு வந்த பெருமான் வீணை ஏந்தியவராக வந்ததாக கற்பனை செய்கின்றாள். முரலுதல்=வீணை ஒலித்தல்; கந்தாரம்=காந்தாரம் என்பதன் திரிபு, எதுகை நோக்கி திரிந்தது, ஒரு வகைப் பண்; நொந்தார் போல்=வருத்தப்பட்டவர், பசி மிகுதியால் வருத்தப்பட்டவர்., அந்தாமரை=அம்+தாமரை, அழகிய தாமரை. நொந்தார் என்பதற்கு சிவக்கவிமணி சுவையான விளக்கம் ஒன்றினை அளிக்கின்றார். அகில உலகங்களுக்கும் நாயகனான தன்னை நோக்கி, உமது ஊர் யாது என்று கேட்ட அறியாமையை நினைத்து நொந்தார் என்று கூறுகின்றார்.,
வெந்தார் வெண்பொடிப் பூசி வெள்ளை மாலை விரிசடை
மேல் தாம் சூடி வீணை ஏந்திக்
கந்தாரம் தாம் முரலாப் போகா நிற்கக் கறை சேர் மணி
மிடற்றீர் ஊர் ஏது என்றேன்
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கேர்
இடை மடவாய் நம்மூர் கேட்கில்
அந்தாமரை மலர் மேல் அளிவண்டு யாழ் செய் ஆமாத்தூர்
என்று அடிகள் போயினாரே
திருமால் பிரமன் உள்ளிட்டு இறந்த பல தேவர்களின் உடல் எரிந்த பின்னர் கிடைக்கும் சாம்பலை உடலில் பூசிக்கொண்டு, வெண்ணிற மாலையை தலையில் சூடிக்கொண்டு, வீணை ஏந்தியபடியே, காந்தாரப் பண்ணை மீட்டிக்கொண்டு சிவபிரான் வந்தார். தான் செல்வது போல் பாசாங்கு செய்து, நின்ற இடத்தை விட்டு அகலாமல் சிறிது நேரம் இருந்தார். அவ்வாறு இருந்தவரை, கழுத்தில் கரிய கறையினை உடைய நீலகண்டரே உமது ஊர் யாது என்றேன். மிகவும் அதிகமான பசியில் வாடியவர் போல் எனது இல்லம் புகுந்த அவர், வளையும் அழகிய இடையினை உடையே பெண்ணே, எனது ஊர் யாது என்று கேட்கின்றாய் அல்லவா, தாமரை மலர் மேல் வண்டுகள் யாழ் போல் ஒலிக்கும் ஆமாத்தூர் எமது ஊர் என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார் என்று அப்பர் நாயகி வருத்தத்துடன் கூறுவதாக அமைந்த பாடல் இது.
இதே பதிகத்தின் ஆறாவது பாடலிலும் வீணை ஏந்தியவராக அப்பர் பெருமான் சித்தரிக்கின்றார். வீறு=ஆற்றல்; படிறு=வஞ்சனையான பேச்சுக்கள்; பாறு=பருந்து. ஆற்றல் உடைய எருதினை வாகனமாகக் கொண்டவராய், உடலில் நீறு பூசியவராய், ஒரு காதினில் வெண்தோடு அணிந்தவராய், இடது கையில் வீணை வைத்திருப்பவராய், தனது உடலில் இடது பாகத்தில் உமையம்மையைக் கொண்டவராய் மற்றொரு காதில் அணிந்துள்ள குழை ஆடுமாறு, கொடுகொட்டிப் பறை முழங்க, கபாலத்திலிருந்து வீசும் புலால் நாற்றத்தினை உணர்ந்த பருந்துகள் அணுகும் தலையைக் கையில் ஏந்தியவராய், பிச்சை கேட்டு சிவபிரான் எனது இல்லம் வந்தார். ஆனால் பிச்சையினை ஏற்காமல், வஞ்சகமான பேச்சுக்களைப் பேசிய அவர், கங்கை நதியைத் தனது சடையில் சூடிக் கொண்ட அடிகள் தாம். அவர் மிகவும் அழகியரே என்பதே இந்த பாடலின் திரண்ட கருத்து.
வீறுடைய ஏறேறி நீறு பூசி வெண்தோடு பெய்து இடங்கை வீணையேந்திக்
கூறுடைய மடவாள் ஓர் பாகம் கொண்டு குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலை ஓர் கையில் ஏந்திப் பலி கொள்வார் அல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே
திருவாய்மூர் தலத்தினில் பெருமானின் ஆடல் காட்சியைக் காணும் வாய்ப்பினைப் பெற்ற அப்பர் பிரான், ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன் என்று பெருமானின் கோலத்தை ஒரு பாடலில் (6.77) கூறுகின்றார்.
குழையார் திருத்தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழையார் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழிசை யாழ் வீணை முரலக் கண்டேன்
தழையார் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்கக் கண்டேன்
மழையார் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்டவாறே
.
கூடலையாற்றூர் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.85.6) சுந்தரர், தரமான வீணையை ஏந்தியவர் பெருமான் என்று குரிப்பிடுகின்றார். திருமுதுகுன்றம் செல்வதற்கு வழியாது என்று கேட்டதற்கு, இந்த வழி தான் என்று கூடலையாற்றூர் செல்லும் வழியை காட்டியும் தன்னுடன் நடந்தும் வந்து பெருமான் புரிந்த திருவிளையாடலை அறியாத ஏழையாக தான் இருந்ததை எண்ணி, தனது அறியாமையை நினைத்து சுந்தரர் வருந்தும் பாடல். பெரிய புராணத்தில் சுந்தரரின் வரலாற்றில் பெருமான் வேறுவேறு உருவத்தில் ஐந்து முறை வந்து தோன்றியபோதும், சுந்தரர் அறியாமல் இருந்ததாக கூறப்படுகின்றது. திருமணத்தினை தடுக்கும் எண்ணத்துடன் திருவெண்ணெய்நல்லூரில் அடிமை ஓலையுடன் தோன்றியது, திருவதிகை சித்த வடத்தில் முதியவராக அருகில் வந்து படுத்து இரண்டு முறை சுந்தரரின் தலை மேல் தனது காலை வைத்து அவரது தூக்கத்தை கலைத்தது, குருகாவூர் வெள்ளடை செல்லும் வழியில் பந்தலின் கீழே காத்திருந்து சுந்தரருக்கு அவரது குழுவினருக்கும் பொதி சோறும் நீரும் அளித்தது, திருக்கச்சூர் தலத்தில் களைத்திருந்த சுந்தரருக்காக பல வீடுகள் சென்று பிச்சை எடுத்து சுந்தரருக்கு அமுது படைத்தது முதலியன மற்ற நான்கு நிகழ்ச்சிகள்.
வித்தாக வீணையொடும் வெண்புரி நூல் பூண்டு
முத்தன வெண்முறுவல் மங்கையொடும் உடனே
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இவ்வழி போந்த அதிசயமே அறியேனே
பொழிப்புரை:
புலிநகக் கொன்றை மலர், செருந்தி மலர், நறுமணம் மிக்க புன்னை மலர், தாழை மலர், ஆகிய மலர்கள் அருகருகே காணப்படும் கடற்கரை சோலைகளில் வெண்குருகு பறவைகள் நிறைந்து காணப்படும் வெண்காடு தலத்தில் உறையும் இறைவர், தன்னை எதிர்த்து வந்த மதயானையின் தோலினை உரித்தவர் ஆவார். அவர் யாழினைப் போன்று இனிமையான குரலினை உடையவர் அல்லவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


